ஒழுங்கீனமாக நடந்து கொண்ட, இரு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நடவடிக்கையை கடுமையாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.விடலை பருவம் எனப்படும், பதின் வயதுகளில் மாணவ, மாணவியர், தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்வது இயல்பு; புகை பிடித்தல், மது அருந்துதல், காதல் வயப்படுவது இப்பருவ வயதின் வெளிப்பாடு. சமீபத்தில், கோவையில் பள்ளி மாணவி ஒருவர், மதுபோதையில், ரோட்டில் கலாட்டா செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதேபோல், திருப்பூரில் பள்ளி மாணவர்கள், பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்வதும், போலீசார் அவர்களை துரத்தி பிடிப்பதும், வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஒழுங்கீனமாக செயல்பட்ட, இரு தலைமை ஆசிரியைகள் உட்பட நான்கு ஆசிரியர்கள், திருப்பூரில் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, கல்வித்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் இடையேவும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோருக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை தெய்வமாக மதிக்க வேண்டும் என, குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது வழக்கம். ஆனால், படித்த ஆசிரியர்களே பண்பு தவறி நடப்பது, பெற்றோர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களில் இருவர், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,பள்ளிக்குள் சண்டையிட்டு கொண்டதையும்; ஒருவர், தனக்காக சிலரை அடியாட்களாக பள்ளிக்குள் அழைத்து வந்ததையும், தனிநபர்களின் பிழையாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு ஆசிரியர், ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவியரிடம், மொபைல் போனில் ஆபாசப்படம் காட்டி, புனிதமான ஆசிரியர் பணியை கொச்சைப்படுத்தி உள்ளார்.
மற்றொரு பெண் ஆசிரியர், பாடப்புத்தகங்களை கூட தராமல், தான் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை கழுவும் பணியை, மாணவியருக்கு தந்திருக்கிறார். மாணவர் கழிப்பிடத்தை, மாணவியர் பயன்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தி இருக்கிறார்.
அறிவை, ஒழுக்கத்தை, நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே, சராசரிக்கும் கீழான மனநிலையில், பண்பின்றி நடந்துகொள்வதை, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு குழந்தையையும், தங்களது பிள்ளைகளாக பாவித்து, கல்வி கற்றுத்தரும் உண்மையான ஆசிரியர்களுக்கு, இதுபோன்ற சிலரால், பெருத்த அவமானமே ஏற்படுகிறது.
துறை ரீதியாக பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற சம்பிரதாய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இத்தவறுகளை தொடராமல் தவிர்ப்பர் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
எனவே, கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "ஆசிரியர் பணி என்பது,சமுதாயத்தில் மதிக்கப்படும் உன்னதமானது. எதிர்கால சமுதாயத்தை, நல்லவிதமாக உருவாக்கும் கடமை உள்ளது.
இதை மறந்து, சிலர் கீழ்த்தரமாக நடந்து கொள்வது, மற்ற ஆசிரியர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. ஒழுங்கீன ஆசிரியர்கள் மீது, தயவு தாட்சண்யமின்றி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சதாசிவத்திடம் கேட்டபோது,மாணவர்கள் தவறு செய்தால், அது, பக்குவம் இல்லாத, அவர்கள் வயதின் இயல்பு; தேவையெனில், அவர்களுக்கு கவுன்சிலிங்தரலாம். அனுபவம், முதிர்ச்சி பெற்ற ஆசிரியர்களே இதுபோல் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது மிகவும் தவறானது.
அவர்களிடம் போதிய மனப்பக்குவம் இல்லாததையே காட்டுகிறது. ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடாமல், ஆசிரியர்கள், தங்களை தாங்களே திருத்திக்கொண்டு, சிறந்த முறையில் பணி செய்வதே,இதற்கு தீர்வாக அமையும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...