புதிய கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், அதிக தேர்ச்சி
காட்ட, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பல முயற்சிகளை
மேற்கொண்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, பல பள்ளிகளில், கடந்த கல்வி ஆண்டில்,
9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில், சுமாராக படித்த மாணவர்கள்,
கட்டாயமாக தேர்ச்சி இழப்பு செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், தேர்ச்சி இழப்பு செய்ய முடியாத சராசரி மாணவர்களை, கட்டாயமாக
டி.சி., எனப்படும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, பல தனியார் பள்ளிகள்
வெளியேற்றுவதாக புகார்கள் எழுந்து உள்ளன.பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில், புகார்
கொடுத்த வண்ணம் உள்ளனர்.இதுகுறித்து, கல்வி அதிகாரிகள் விசாரணை
நடத்தினாலும், சம்பந்தப்பட்ட பள்ளிகள், தங்கள் மீது நடவடிக்கை எடுக்க
முடியாதபடி, அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் செல்வாக்கைப்
பயன்படுத்தி தப்பித்து விடுகின்றன. வெளியேற்றப்பட்ட மாணவர்கள், அரசு
பள்ளிகளுக்கு வந்தாலும், அவர்களை, 10ம் வகுப்பிலோ அல்லது பிளஸ் 1, பிளஸ் 2
வகுப்பிலோ சேர்க்க, தலைமை ஆசிரியர்கள் மறுத்து விடுகின்றனர். இதனால், அந்த
மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தனியார் பள்ளியை நம்பி
சேர்ந்து விட்டு, கடைசி நேரத்தில் அரசு பள்ளியைத் தேடி வரும்போது, எங்களால்
ஒன்றும் செய்ய முடியாது. அரசுப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு, ஆறாம்
வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு ஆகிய நுழைவு வகுப்புகளிலும், 10ம் வகுப்பு
முடித்த மாணவர்களுக்கு, பிளஸ் 1லும் மட்டுமே சேர்க்கை நடத்த முடியும்.
மாறாக, பிளஸ் 2விலோ அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் பிளஸ் 1லோ
சேர்க்க முடியாது. அப்படி சேர்த்தால், மீண்டும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி
சரியும்.அதேநேரம், தாங்கள் படித்த தனியார் பள்ளிகள் மீது,
எழுத்துப்பூர்வமாக மாணவர்கள் புகார் அளித்தால், அதை விசாரித்து, மாணவர்களை
அங்கேயே மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...