கியாஸ் சிலிண்டருக்கு போனில் பதிவு செய்யும் போது பூஜ்ஜியத்தை அழுத்தினால்
மானியம் ரத்தாகாது என்று இந்தியன் ஆயில் நிறுவன உயர்அதிகாரி தெரிவித்தார்.
பிரதமர் வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடி ‘கொடுப்பதில் இன்பம் காணுங்கள்’ என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில், ‘வசதி படைத்தவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கானமானியம் வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தால்,
வறுமை கோட்டுக்கு கீழே வாழும் பரம ஏழைகளுக்கு இந்த மானியம் பயன்படுத்தப்படும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி, இந்தியாவில் பலர் சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் வேண்டாம் என்று பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தானியங்கி பதிவு (புக்கிங்) சேவையை போனில் நாம் தொடர்பு கொண்டு கியாஸ் சிலிண்டரை பதிவு செய்யும் வசதி பெரும்பாலான நகர்புறங்களில் இருக்கிறது.
மானியம் வேண்டாம்
அதில் நாம் தொடர்பு கொண்டால் நம்முடைய செல்போன் அல்லது தரைவழி எண்ணை பதிவு செய்திருந்தால் நம்முடைய ஏஜென்சி எண்ணை அது தெரிவிக்கும்.அதன்பின்னர், எல்.பி.ஜி. மானியத்தை விட்டு கொடுத்து ஏழை மக்களின் வீட்டில் அடுப்பெறிய உதவிடுங்கள்’ என்ற தகவலை கூறும். அதைத் தொடர்ந்து எல்.பி.ஜி. மானியத்தை இப்போதே விட்டுக்கொடுக்க நீங்கள் நினைத்தால் பூஜ்ஜியத்தை(0) அழுத்தவும் அல்லது சிலிண்டரை ‘புக்கிங்’ செய்ய வேண்டும் என்றால் எண் ‘1’-ஐ அழுத்தவும் என்று குறிப்பிடும்.வாடிக்கையாளர்கள் தெரியாமல் பூஜ்ஜியத்தை அழுத்திவிட்டால் கூட மானியம் ரத்தாகிவிடும் என்ற தகவல் நாட்டில் பரவி வருகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரி பேட்டி
இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கியாஸ் சிலிண்டரை போனில் பதிவு செய்யும் போது பூஜ்ஜியத்தை அழுத்தினால் உடனே மானியம் ரத்தாகாது என்றும், வாடிக்கையாளர்கள் இதில் குழப்பம் அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைமை தொடர்பு மேலாளர் சபீதா நட்ராஜ் கூறியதாவது:-
ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்று சிலிண்டர் வாங்கி வருபவர்கள், சிலிண்டர் காலியானதும் மீண்டும் சிலிண்டர் பெறுவதற்கு செல்போன் மற்றும் தரைவழி போன் மூலம் தானியங்கி பதிவு சேவையை தொடர்பு கொண்டு பதிவு செய்யும் முறை இருந்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, சிலிண்டர் மானியம் வேண்டாம் என்பதை உறுதி செய்ய எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் பலர் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் மானியம் வேண்டாம் என்பதை எளிய முறையில் கொண்டு வர வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்தது.மானியம் ரத்தாகாதுஅதை செயல்படுத்தும் விதமாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சமையல் கியாஸ் சிலிண்டரை ‘பதிவு’ செய்யும் போதே மானியம் வேண்டாம் என்பதை வாடிக்கையாளர்கள் தெரிவிப்பதற்கு வசதியாக ‘கம்ப்யூட்டர் குரல்’ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்கள்.அதில் சிலிண்டர் மானியம் வேண்டாம் என்றால் பூஜ்ஜியத்தை அழுத்துங்கள் என்ற தகவல் வரும். ஆனால் இதை பலர் தவறாக புரிந்திருக்கிறார்கள். பூஜ்ஜியத்தை அழுத்தினால் மட்டும் மானியம் ரத்தாகி விடாது.பூஜ்ஜியத்தை அழுத்திய பிறகு, மீண்டும் ஒரு முறை மானியம் வேண்டாம் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்றால் 7-ம் எண்ணை அழுத்துங்கள் என்று கூறும். அப்போதும் கூட மானியம் ரத்தாகாது. இது வெறும் வேண்டுகோளாக தான் ஏற்றுக்கொள்ளப்படும்.
குழப்பம் அடைய வேண்டாம்
வாடிக்கையாளர்கள் தெரியாமல் அழுத்திவிட்டால் கூட ஒன்றும் தவறில்லை. கியாஸ் ஏஜென்சியில் இருந்து தொடர்பு கொண்டு நம்மிடம் விவரம் கேட்பார்கள். அவர்களிடம்விளக்கம் சொல்லி தொடர்ந்து மானித்தை பெறலாம். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்தைதொடர்பு கொண்டு தெரிவித்தும் நிவாரணம் பெறலாம். அவர்கள் அந்த வேண்டுகோளை நிராகரித்து விடுவார்கள். எனவே வாடிக்கையாளர்கள் இதுகுறித்து அச்சம் அடைய தேவையில்லை. குழப்பமும் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...