கல்வித்துறையில் தமிழகம் முன்னேறி வருகிறது
என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் பல
அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை மோசமாக சென்று கொண்டிருப்பதா
பதைபதைக்கிறார்கள் கல்வியாலர்கள்.
ஒன்றாம் வகுப்பு முதல்
ஐந்தாம் வகுப்பு வரையில் செயல்படும் தொடக்கப்பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு
வரை செயல்படும் நடுநிலைப்பள்ளிகளிலும் மற்றும் 10ஆம் வகுப்பு வரையிலான
உயர்நிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை கவலை அளிப்பதாகவும்,
இதுவே பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நோக்கி உந்தி தள்ளுவதாகவும் அவர்கள்
கவலை தெரிவிக்கிறார்கள்.

வருங்கால சந்ததியினர் அனைவரும் கல்வி கற்க
வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் குக்கிராமங்களில் கூட தொடக்கப் பள்ளிகள்
தொடங்கப்பட்டு செயல்படுகின்றன. தமிழகத்தில் 31,173 அரசு மற்றும் அரசு உதவி
பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில்
தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரமாகும். அனைவரும் கல்வி கற்க
வேண்டும் என்று தொடக்கப் பள்ளிகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து
வருகிறது. மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க பல்வேறு வகையில் பள்ளிக்
கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து
வசதிகளையும் கல்வித்துறை செய்து வருகிறது. குறிப்பாக சீருடை, ஸ்கூல் பேக்,
காலணிகள் உள்ளிட்ட மாணவர்களின் அனைத்து தேவைகளையும் அரசு அளித்து
வருகிறது. இருப்பினும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை முழுமையாக
தடுக்க முடியவில்லை.
தமிழகத்தை 100 சதவிகித கல்வியறிவு பெற்ற
மாநிலமாக மாற்ற அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் 10 சதவிகித பெற்றோர்கள்
தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். நாடோடி வாழ்க்கை
நடத்தும் தொழிலாளர்களாலும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப
முடிவதில்லை. வறுமை காரணமாகவும், படிக்கும் வயதில் குழந்தைகள் கூலி
வேலைக்கு அனுப்பப்படும் அவல நிலை இன்னும் தமிழகத்தில் தொடர்கிறது.
தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும்,
நடுநிலைப்பள்ளிகளிலும் காலம் காலமாக நடந்து வரும் அவலம் இது. சமச்சீர்
கல்விப்பாடத்திட்டம் அறிமுகமான பிறகும் மெட்ரிக்குலேசன் என்ற பெயரில்
இன்னமும் தனியார் பள்ளிகளின் கொள்ளைகள் தொடரத்தான் செய்கின்றன. அரசு
மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள்,
மாணவர்களின் பற்றாக்குறை உள்ளது. இலவச கட்டாய கல்விச் சட்டத்தின்படி 30
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் உள்ளது. ஆனால் தமிழகத்தில்
உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த விகிதாச்சாரம்
பின்பற்றப்படுவதில்லை.
தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல்
ஐந்தாம் வகுப்பு வரைக்கும் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் பணியாற்றும்
பரிதாபம் உள்ளது. இத்தகைய பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, விரல் விட்டு
எண்ணும் நிலையே உள்ளது. அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
பயிலும் பத்துக்கும் குறைவான மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள்
பணியாற்றுகிறார்கள். அதில் ஒருவர் தலைமை ஆசிரியர். மற்றொருவர் இடைநிலை
ஆசிரியர். இத்தகைய பள்ளிகளில் ஒரே வகுப்பறையில் மாணவர்களை அமர வைத்து
பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இதிலும் ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்தால்,
ஒரே ஆசிரியரே அந்த மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த
சூழ்நிலையில் மாணவர்களின் கல்வித் தரம் எப்படி இருக்கும் என்பது
கல்வித்துறைக்கே வெளிச்சம்.
அடுத்து, சில அரசு மற்றும் அரசு உதவி பெறும்
தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை இருந்தாலும் அதற்கேற்ப
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. உதாரணத்துக்கு 60 மாணவர்கள் இருந்தால்
இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க விதி உள்ளது. துரதிஷ்டவசமாக 59 மாணவர்கள்
இருக்கும் வகுப்புக்கு ஒரே ஆசிரியர் பாடம் கற்பிக்க வேண்டியதுள்ளது. இதனால்
சம்பந்தப்பட்ட ஒரே ஆசிரியரால் 59 மாணவர்களுக்கும் திறம்பட கல்வி கற்பிக்க
முடியாத நிலை ஏற்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைவிட
கூடுதலான ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையும் உள்ளது. இத்தகைய பள்ளிகள்
குறித்து கணக்கெடுப்பு நடத்தியது கல்வித்துறை. அதில் 2000 அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களே இருப்பதாக அந்த
கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால் அத்தகைய பள்ளிகளுக்கு மூடுவிழா
நடத்திவிட்டு அதன் அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கவும் கல்வித்துறை முடிவு
செய்துள்ளது. இதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளின் மோகத்தால், அரசுப்
பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை இறங்கு வரிசையில்
சென்று கொண்டிருக்கிறது. தொடக்ககல்வித்துறையில் 2008-09ல் 43.67 லட்சம்
மாணவர்கள் பயின்றுள்ளனர். ஆனால் 2012-13ல் 36.58 லட்சம் மாணவர்கள் என்று
எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நடுநிலை, உயர் நிலைப்பள்ளிகளான 6ஆம்
வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலும், 9ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு
வரையிலும் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும் முறையை கூட்டாஞ்சோறு
முறை என்கிறார்கள் கல்வியாளர்கள்.
அதாவது, ஒவ்வொரு பாடங்களுக்கும் தனியாக
ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும்
சில நிர்வாக காரணங்களுக்காக பாட வாரியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை.
குறிப்பாக ஆங்கில பாட ஆசிரியர் ஆங்கில பாடத்தையும், அதோடு கணக்கு,
அறிவியல் பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதுள்ளது. ஆங்கில பாட
ஆசிரியரால் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் எந்தளவுக்கு
திறம்பட நடத்த முடியும். இதுபோன்றே கணக்கு பாட ஆசிரியர் அறிவியலையும், சமூக
அறிவியலையும், தமிழ் பாடத்தையும் நடத்த வேண்டியதுள்ளது. இதற்கு
ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். இவ்வாறு அரசு பள்ளிகளில் பாட வாரியாக
ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் கூட்டாஞ்சோறு போல கல்வி மாணவர்களுக்கு
கற்பிக்கப்படுகிறது. இதுவும் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைவதற்கு ஒரு
காரணம் எனலாம். எனவே, பாடவாரியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
தகுதித் தேர்வு நடத்தி, திறமையான ஆசிரியர்களை
நியமிப்பதாக மார்த்தட்டும் தமிழக கல்வித்துறை, மாணவர்களுக்கு கற்பித்தல்
முறையில் உள்ள குறைகளையும் நீக்க முன்வர வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...