பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது முதல் அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக
இசிஇ இருந்து வந்த நிலையில், புதன்கிழமை மெக்கானிக்கல் பிரிவு முன்னிலை
பெற்றது.
மெக்கானிக்கல் பிரிவை இதுவரை 11,574 பேர் தேர்வு செய்திருக்கின்றனர். இசிஇ பிரிவை 11,339 பேர் தேர்வு செய்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த ஆண்டுகளைப் போல் இம்முறையும் மெக்கானிக்கல் பிரிவே முன்னிலை பெறத் தொடங்கியிருக்கிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மெக்கானிக்கல் பிரிவின் மீதே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தப் பிரிவே அதிக மாணவர்கள் தேர்வு செய்த பிரிவாக இருந்து வருகிறது.
கடந்த கல்வியாண்டு (2014-15) கலந்தாய்வின் போது, ஆரம்பம் முதல் மெக்கானிக்கல் பிரிவே முன்னிலை பெற்று வந்தது. கலந்தாய்வின் முடிவில் 43,207 மெக்கானிக்கல் இடங்களில் 26,770 இடங்கள் நிரம்பின. இசிஇ பிரிவைப் பொருத்தவரை 41,484 இடங்களில் 19,012 இடங்கள் மட்டுமே நிரம்பின.
இந்த கல்வியாண்டிலும் இதே நிலைதான் தொடரும் என பொறியியல் நிபுணர்களும், பேராசிரியர்களும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கலந்தாய்வு ஆரம்பித்தது முதல் இசிஇ பிரிவே முன்னிலை பெற்று வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை மெக்கானிக்கல் பிரிவு முன்னிலை பெறத் தொடங்கியது. பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிய இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில் 41,820 இடங்களைக் கொண்ட மெக்கானிக்கல் பிரிவை 11,574 பேர் தேர்வு செய்திருக்கின்றனர்.
இசிஇ பிரிவில் மொத்தமுள்ள 38,427 இடங்களில் 11,339 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக சிஎஸ்இ பிரிவை 7,716 மாணவ, மாணவிகளும், இஇஇ பிரிவை 6,785 பேரும், சிவில் பிரிவை 6,652 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.
மென்பொருள் துறைகளில் நிலையற்ற தன்மை நிலவுவதும், மெக்கானிக்கல் முடிப்பவர்களுக்கு பரவலான வேலைவாய்ப்பு கிடைப்பதுமே இதற்கு காரணம் என்கின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியது:
வேலைவாய்ப்புகள் அதிகம் இருப்பதனாலேயே தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மெக்கானிக்கல் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்து வருகின்றனர்.
ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெற்று வருவதும் இதற்கு ஒரு காரணம். மென்பொருள் நிறுவனங்கள்கூட மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அதுபோல் ரயில்வே உள்ளிட்ட அரசு துறைகளிலும் மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதும் முக்கியக் காரணமாகும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...