தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட
வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்
கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் 1,101 சாலை
விபத்துகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, பள்ளிக்
கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட
வேண்டும். முழுத் தகுதி பெற்ற, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள்
பணியமர்த்தப்பட வேண்டும்.
ஓட்டுநர் விடுப்பில் செல்லும்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் அல்லது கிளீனர் போன்றவர்களை பள்ளி வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக் கூடாது.
போக்குவரத்துத் துறையின் உத்தரவுப்படி, பள்ளி வாகனப் பராமரிப்பு 100
சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளி வாகனத்தை இயக்கும்போது ஓட்டுநர்
செல்லிடப்பேசியில் பேசுவது, தண்ணீர் அருந்துவது, குழந்தைகளுடன் பேசுவது
போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
போக்குவரத்து விதிகளை மீறி பள்ளி வாகனத்தை இயக்கினால் புகார் தெரிவிக்க
வசதியாக, பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாக அலுவலர் ஆகியோரின் செல்லிடப்பேசி
எண்களை பள்ளி வாகனத்தில் எழுதிவைக்க வேண்டும்.
பாலம், நீர்நிலைகளைக் கடந்து செல்லும்போதும், பிற வாகனங்களை முந்திச்
செல்லும்போதும் ஓட்டுநர் மிகவும் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்த
வேண்டும்.
இந்த அறிவுரைகளை அனைத்து தனியார் பள்ளி, சுயநிதிப் பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...