குழந்தை உள்ளம்; கருணை பார்வை, கள்ளம் கபடம் அறியா தங்கத் தலைவன் முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாமை இழந்து கண்களில் செந்நீர் வடிய செய்வதறியாமல்
திகைத்து நிற்கிறது மாணவர் உலகம்.மண்ணை விட்டு பிரிந்தது அவர் உயிர்தானே
தவிர, அவர் உணர்வுகளுக்கு என்றுமே இறப்பில்லை. ஆம், கலாம் இறக்கவில்லை;
ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் இதயங்களில் தன்னம்பிக்கையாய் பிறந்திருக்கிறார்
என்கிறார்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள். கலாமின் கனவுகளை நிறைவேற்றுவோம்
என்ற உறுதியுடன் பேசுகிறார்கள்...
விஷ்ணுபிரியா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி : 'என் கடன் பணி செய்து
கிடப்பதே' என்பதற்கேற்ப அவரது இறுதி மூச்சு நிற்கும் போதும் மாணவர்கள் நலன்
மீது அக்கறை கொண்ட மாமனிதராக இருந்தார். 'சுவர் இருந்தால் தான் சித்திரம்
வரைய முடியும்' என்பர். அந்த சுவரே இப்போது மறைந்து விட்டது. இது மாணவர்
சமுதாயத்திற்கு பெரும் இழப்பு. சமுதாய உணர்வு இருந்தால்தான் நாடும், வீடும்
நலம் பெறும். எனவே சமுதாய முன்னேற்றத்திற்கும் மாணவர்கள் கனவு காணுங்கள்
என வலியுறுத்தினார். ரோஹிணி செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உலகின்
நட்சத்திரமாக நம் நாட்டை மின்ன செய்தார். அவர் இடத்தை யாராலும் நிரப்ப
முடியாது.
அவரது சிந்தனை வழிநடத்தும்
சவ்பியா பானு, பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி: இளைஞர்களின்
எதிர்கால சக்தியாக திகழ்ந்தவர் கலாம். நாட்டின் வளர்ச்சிக்கான நல்ல
சிந்தனைகளை மாணவர்கள், இளைஞர்கள் மனதில் விதைத்தார். இளைஞர் சமுதாயத்தின்
தந்தையாக இருந்து வழிநடத்தினார். அவரது மறைவு மீளமுடியாத அதிர்ச்சியை
தந்துள்ளது. 'கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களை செயல்களாக
மாற்றுங்கள்' என்ற நற்சிந்தனையை மாணவர்களிடம் விட்டுச் சென்றுள்ளார். அவர்
இல்லாவிட்டாலும் அவரது சிந்தனை, அறிவுரைகள் மாணவர்களை எப்போதும்போல்
வழிநடத்தும்.
இவ்வுலகின் மாமேதை
லட்சுமி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒத்தக்கடை: மரணத்தை கண்டு ஒரு
நாளும் நான் அஞ்சுவதில்லை என்று இவ்வுலகின் நிலையாமை பற்றி கூறிய மாமேதை.
அவர் மறைந்தது மாணவர்கள் மனங்களை சுக்குநுாறாக உடைத்துவிட்டன.
துாங்கவிடாமல் செய்வது தான் கனவு என அர்த்தம் புரிய வைத்தவர். அவர் எங்களை
விட்டுச் சென்றாலும் அவரது ஆன்மா எப்போதும் மாணவர்கள், இளைஞர்களை
சுற்றிக்கொண்டிருக்கும்.
அவருக்கு நிகர் அவர்தான்
நந்தினி, அரசு மருத்துவக் கல்லுாரி கலாம் மறைவு, இந்தியாவிற்கு மட்டுமல்ல
உலகிற்கே ஈடுசெய்ய முடியாதது. சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இவர் சென்ற நாளை
தான் அங்கு அறிவியல் தினமாகவே கொண்டாடுகின்றனர். அந்த வகையில்
வெளிநாடுகளிலும் கலாம் மதிக்கப்பட்டார். அறிவுசார் வளர்ச்சியின்
முக்கியத்துவத்தை முன்வைத்தார். கலாமிற்கு மாணவர்கள், இளைஞர்கள் கூட்டம்
கட்டுப்பட்டு கிடந்தது. எங்கு சென்றாலும் மாணவர்களை சீருடையுடன் பார்த்தால்
அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தான் முக்கியத்துவம் அளிப்பார். அவரது
இடத்தை யாரும் நிரப்ப முடியாது.
கலாம் பாதையில் பயணிப்போம்
டி.அபிநயா, அமெரிக்கன் கல்லுாரி: நான் 8ம் வகுப்பு படிக்கும் போது அறிவியல்
மேதை கலாமின் கையால் இளம் அறிவியல் விஞ்ஞானி விருது வாங்கியது மறக்க
முடியாத நிகழ்வு. இளைஞர்களிடம் மட்டும் தான் வேகமும், விவேகமும்
இருக்கிறது. இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதித்து காட்டுவர் என்று
நம்பிக்கை கொண்டவர். ஜானதிபதியாக இருந்த போதும் உதவி பேராசிரியராக
பணியாற்றி ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்தவர். ஒவ்வொரு இந்தியனும் கலாமின்
பாதையில் பயணிக்க வேண்டும்.
வாழ்ந்தார்... வாழ்கிறார்... வாழ்வார்...
ஆர்.கே. கவுதம், கே.எல்.என்., தகவல் தொழில்நுட்பவியல் கல்லுாரி: இந்தியா
மட்டுமல்ல சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் கலாம். இதுவரை இருந்த
ஜனாதிபதிகளில் கலாம் மட்டும் தான் மக்களின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்
என்று சொன்னால் மிகையாகாது. இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்
என்று நினைத்த உயர்ந்த லட்சியம் படைத்தவர். கலாம் வாழ்ந்த மண்ணில் நாமும்
வாழ்கிறோம் என்பது நாம் செய்ய புண்ணியம் என்ற தான் சொல்ல வேண்டும். கலாம்,
மறையவில்லை கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் நிறைவாக
நிறைந்திருக்கிறார். கலாம் வாழ்ந்தார், வாழ்கிறார், வாழ்வார் என்ற
நம்பிக்கையுடன் நம் இலக்கை நோக்கி முன்னேறுவோம். மீண்டும் ஒரு முறை அவர்
ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தியா வல்லரசாகி இருக்கும். உலகம் இருக்கும்
வரை அவர் புகழ் மங்காது.
இளைஞர்களின் 'ரோல் மாடல்'
ஆர். அரவிந்குமார், யாதவர் கல்லுாரி 'நமது பிறப்பு ஒரு சம்பவமாக
இருக்கலாம், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்று சொன்னவர்
கலாம். ராமேஸ்வரம் என்ற தீவில் பிறந்து ஒரு அணு விஞ்ஞானியாக வளர்ந்து
வெற்றிகளை வெற்றியடைய செய்தவர். 2020ல் இந்தியா வல்லரசாகும் என்றுக்கூறி,
இளைஞர்களை ஆரோக்கிய கனவு காணச் செய்தவர். இவரது அக்னி சிறகுகள் புத்தகத்தை
படிக்கும் போதெல்லாம் புத்துணர்வு பிறக்கும். ஆடம்பரத்தை விரும்பாத
எளிமையின் இலக்கணம் கலாம். இளைஞர்களுக்கெல்லாம் அப்துல்கலாம் ஒரு 'ரோல்
மாடல்'. உலகம் உள்ளவரை கலாமின் கருத்துக்கள் அழிவில்லாமல் நிலைத்து
நிற்கும்.
மரணத்திற்கு அஞ்சாதவர்
எம்.பவானி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: மரணம் என்னை
எப்போதுமே அச்சுறுத்தியதில்லை என ஓங்கி முழங்கினார் அப்துல்கலாம். அவர்
இதயம் நின்றுவிடவில்லை. என்னைப்போன்ற நாட்டின் ஒவ்வொரு மாணவியின் இதயமும்
அவருக்காக தினமும் துடிக்க தொடங்கியுள்ளது. 2020ல் இந்தியா வல்லரசாகும்
என்றார். அவர் கூறியது மெய்யாகும்போது, அவர் இல்லாமல் போனது நமக்கான
துரதிர்ஷ்டமே. சாதாரண குடும்பத்தில் பிறந்து, நாட்டின் உயர்ந்த பதவியை
அடைந்த போதிலும், தனது ஆசிரியரை பார்ப்பதை தவறாமல் பின்பற்றினார். அவரின்
பழக்கத்தை நாங்கள் பின்பற்றுவோம்.
இரண்டாவது காந்தி
டி.கீர்த்தனா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேடசந்துார்: இந்தியாவின்
இரண்டாவது காந்தி என மாணவ சமுதாயத்தால் அழைக்கப்பட்ட கலாம் இன்று நம்முடன்
இல்லை. அவரின் மரணம் குறிப்பாக மாணவ சமுதாயத்திற்கு பேரிடியாக உள்ளது.
நேர்மை, எளிமை, திறமையான நிர்வாகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக
விளங்கியவர். 'கனவு காணுங்கள்; கனவு கண்டால்தான் உங்களின் லட்சியத்தை
நிறைவேற்ற முடியும்' என்ற அவரது நினைவுகள் காலத்தை கடந்து நிற்கும்.
நன்றாக படிப்பதே மரியாதை
ஜெ.ஜெ.அபிநயா, பாரத்வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழநி: அப்துல்
கலாம் மறைவு மாணவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. சிறந்த ஆசிரியராக,
விஞ்ஞானியாக, ஜனாதிபதியாக அவர் பன்முகம் காட்டி பணியாற்றியுள்ளார்.
இளைஞர்களை குறிப்பாக மாணவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி
சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். இந்தியாவை 2020க்குள் வல்லரசு ஆக்க அவர்
கண்ட கனவை நினைவாக்க ஒவ்வொரு மாணவரும் நன்றாக படிப்பதே நாம் அவருக்கு
செய்யும் மிகப்பெரிய மரியாதையாகும்.
உலகிற்கே இழப்பு
டி.சங்கீதா, எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லுாரி, திண்டுக்கல்: திருமணம்
செய்யாமல் மொத்த வாழ்க்கையையும் நாட்டிற்கும், ஆராய்ச்சிக்கும்
அர்ப்பணித்தவர். கிராமத்தில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர் கூட கலாம்
போல் விஞ்ஞானி ஆக வேண்டும் என, கூறுமளவிற்கு
உயர்ந்தவர். 'வாழ்க்கையில் முன்னேற கனவு காணுங்கள் அதன் மூலம் உயர்ந்த
லட்சியத்தை அடைய படிப்படியாக உழையுங்கள்.அவரது மறைவு இந்தியாவிற்கு
மட்டுமின்றி உலகிற்கே இழப்பு. குடும்பத்தில் ஒருவரை இழந்ததை போல் உள்ளது.
அவரை பற்றிய பாடத்தை பள்ளி புத்தகங்களில் கொண்டு வர வேண்டும்.
மறக்க முடியாத தலைவர்
எல்.மயில்சாமி, பி.இ.,மூன்றாம் ஆண்டு, சுப்ரமண்யா பொறியியல் கல்லுாரி பழநி:
அப்துல்கலாம் என்ற பெயர் உலகஅளவில் இந்தியாவிற்கு ஒரு அடையாளத்தை
தந்துள்ளது. அவரது ஏழ்மை, விஞ்ஞான அறிவு, மாணவர்கள் முதல் தனது ஆசிரியர்
வரை அனைவரிடமும் அன்பான பழக்கம், எளிமை போன்ற நற்குணங்களால் மறக்கமுடியாத
தலைவராக நம்நெஞ்சில் நிலைத்து வாழ்கிறார். இந்தியா வல்லரசாக அவர் கண்ட கனவை
நிறைவேற்ற, ஒவ்வொரு இந்தியரும் இன்னாளில் சபதம் செய்ய வேண்டும்.
ராணுவப்படைகளின் 'பிதா'
எம்.கார்த்திகாஸ்ரீ, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: சென்ற
இடங்களில் எல்லாம் 'திருக்குறள்' வரிகளை மேற்கோள் காட்டி பேசுவார்.
'பிறப்பு தரித்திரம் ஆனாலும், இறப்பு மகா சரித்திரம் ஆகட்டும்' என்பதை
அவரின் இழப்பு நிரூபித்துள்ளது. மாணவ சமுதாயத்திற்கு உடல், பொருள், ஆவி என,
அனைத்தையும் வழங்கி, ராணுவப்படைகளின் 'பிதா' என்று அழைக்கப்பட்டவர், இன்று
'தேசமே கண்ணீர் விடும் தந்தையாக மாறியிருக்கிறார். அவர், 'கனவு' என்ற
விதையை மாணவர்களிடம் அவர் விதைத்தது 2020ல் விருட்சமாக வளரும்.
மாணவர் சமுதாயத்திற்கு இழப்பு
---பி.வாணிஸ்ரீ, ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி, போடி: அக்னி, பிரித்வி என
ஏவுகணையில் வெற்றி வாகை சூடியவர். அணுசக்தி நாயகன், ஜனாதிபதி என பல
பொறுப்புகளை பெற்றார். அப்துல் கலாம் வாழ்க்கை எங்களை போன்ற மாணவர்களுக்கு
ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளிப்பதாக உள்ளது. இன்றைய இளைஞர்களை கனவு
காணுங்கள், பெரிதாக காணுங்கள் என்றவர். இந்தியா 2020 க்குள் வல்லரசாக்க
கூடிய சக்தி மாணவர்களின் கையில்தான் உள்ளது என்றார். எப்போதுமே மாணவர்களை
பற்றி சிந்தித்து கொண்டிருந்த கலாம், இறுதியில் மாணவர்களுக்காக உரை
நிகழ்த்திய போது, மறைந்தது மாணவ சமுதாயத்திற்கு பெரும் இழப்பையும், ஆறாத
வடுவையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளங்களில் வாழ்கிறார்
ஏ. அருண்மொழி, கம்மவார் மெட்ரிக் பள்ளி, தேனி. இந்தியாவில் பல ஜனாதிபதிகள்
இதுவரை பதவி வகித்தாலும் இவர் மக்களின் பிரதிநிதியாகவும், மாணவர்கள்,
இளைஞர் சமுதாயம் விரும்புவராக வலம் வந்தவர். அப்துல்கலாமிற்கு வழங்கப்பட்ட
விருதுகள் அவரால் பெருமைப்பட்டது. இளைஞர்களின் மனதில் இந்தியாவை வல்லரசாக்க
கனவு காணுங்கள் என விதை விதைத்தவர் இறந்தும் மாணவர்களின் உள்ளங்களில்
வாழ்கிறார். இவரின் கனவு மெய்ப்பட இளைஞர்கள் உறுதியேற்கவேண்டும்.
மாணவர் தினமாக்க வேண்டும்
மு.வர்ஷினி, (கருத்தாராவுத்தர் கல்லுாரி, உத்தமபாளையம்) கூடலுார்.
'நம்முடைய துன்பங்கள், தடைகளைத் தாண்டி சிந்தனை அமையவேண்டும், அப்போதுதான்
எவ்வளவு தடை வந்தாலும் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்,' என்ற அவரது சொல்
ஒவ்வொரு மாணவர்களிடமும் மறக்க முடியாததாக உள்ளது.
அறிவு என்பது மனத்துாய்மை, சிந்தனையும் சேர்ந்தது தான் என்பதை கூறி மிக
எளிதாக புரிய வைத்தார். அவர் மறைந்த செய்தி கேட்டதுமே வீட்டில் தனியறையில்
அழுது கொண்டே இருந்தேன். அப்துல்கலாமின் பிறந்த தினத்தை மாணவர்கள் தினமாக
கொண்டாட வேண்டும் என்பதே என்னைப் போன்ற மாணவ சமுதாயத்தினரின்
எதிர்பார்ப்பாகும்.
மெய்ஞானியாகவும் வாழ்ந்தவர்
எம். அபிநயா, நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, தேனி. ஆர்யப்பட்டா,
ரோகிணி போன்ற செயற்கை கோள்களை வானில் ஏவி அறிவியல் சாதனையில் இந்தியாவை
தலைநிமிர வைத்தவர். இந்தியா வல்லரசாக வேண்டும். மாணவர்கள் மனது வைத்தால்
வல்லரசாகும் என வலியுறுத்தியவர். மாணவர்கள், இளைஞர் சமூகத்தின் மீது
அப்துல் கலாம் கொண்ட நம்பிக்கை வீண்போகாத வகையில் மாணவர் சமூகம் உறுதி ஏற்க
வேண்டும். விஞ்ஞானியாக மட்டும் அல்லாமல் மெய்ஞானியாக வாழ்ந்தவர். அவர்
இறந்தும் நம்மிடம் வாழ்கிறார்.
அவர் வழியில் நான்
ஆர்.சரண்யாதேவி, 10ம் வகுப்பு, விவேகானந்தா பள்ளி, ராமேஸ்வரம்: 'உங்கள்
வீட்டில் சிறிய நுாலகம் அமைத்து படியுங்கள், உயர்ந்த கனவு காணுங்கள்,
வாழ்க்கையில் முன்னேறலாம்' என்ற அப்துல்கலாமின் பொன் மொழிகள், எங்களுக்கு
வழிகாட்டியாக அமைந்துள்ளது. அவர் வழியில் நானும் விஞ்ஞானியாகி, அவர் விட்டு
சென்ற சமூக பணிகள், தன்னலமற்ற சேவையை தொடர்வேன். அவரது கனவை கண்டிப்பாக
நனவாக்குவேன்.
எங்களின் விடிவெள்ளி
ஜெ.முகமது ரிஸ்வான், பிளஸ் 1, ராஜா மெட்ரிக் பள்ளி, மண்டபம் : கலாம் எழுதிய
'அக்னி சிறகு' புத்தகத்தில், ஏழ்மையில் இருந்தாலும் பெரிய இடத்திற்கு
முன்னேற லட்சியத்துடன் உழைக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர். இது
மாணவர்கள், இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தி. அவர் தான் எங்களுக்கு
விடிவெள்ளியாக திகழ்கிறார். உலகமெங்கும் மாணவர்களை சந்தித்து
உற்சாகப்படுத்திய அந்த மகான் வழியை பின்பற்றி நடக்க, மாணவ சமூகம் சபதம்
ஏற்க வேண்டும். அது தான் நாம் அவருக்கு செலுத்தும் நன்றி, என்றார்.
மத நல்லிணக்க அடையாளம்
யு.மேகலா, 9ம் வகுப்பு, அழகப்பா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, காரைக்குடி:
'பாரத ரத்னா' அப்துல் கலாமின் மறைவு, மாணவ சமுதாயத்திற்கு இழப்பு. “யாதும்
ஊரே யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனார் வரிகளை ஐ.நா.,சபையில்
எடுத்துரைத்தவர். மத நல்லிணக்கம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்த போது,
மெழுகுவர்த்தியால் குத்துவிளக்கு ஏற்றுகிறேன், அது இந்துக்களின் அடையாளம்,
மெழுகுவர்த்தி கிறிஸ்தவர்களின் அடையாளம், அதை ஏற்றுகிற நான் ஒரு முஸ்லிம்,
என்று விளக்கம் கொடுத்தார். இதை விட மத நல்லிணக்கத்துக்கு வேறு என்ன
உதாரணம் இருக்க முடியும். ஜனாதிபதியை அருகில் இருந்து மாணவர்கள் பார்க்கும்
வாய்ப்பு அளித்தவர், அவர் மறையவில்லை, மாணவர்களின் மனங்களில் வாழ்கிறார்.
உலகம் போற்றிய விஞ்ஞானி
கே.ராஜேஷ், 8ம் வகுப்பு, மன்னர் மேனிலைப்பள்ளி,சிவகங்கை: அரசு பள்ளியில்
பயின்று உலகம் போன்றும் விஞ்ஞானியாக திகழ்ந்தவர். மாணவர்களுக்கென உழைத்து,
மாணவர்கள் நிகழ்ச்சியில் உயிர் பிரிந்தது வேதனை. அவரது ஆன்மா சாந்தி அடைய
வேண்டும். கொஞ்ச நாள் இருந்திருந்தால் இளைஞர்களுக்கு சக்தி கொடுத்தும்,
மாணவர்களை ஊக்குவித்து இருப்பார். எங்களது மனதில் என்றைக்கும்
நிலைத்திருப்பார்.
மாணவர்களுக்காக உழைத்தவர்
கே.புனிதமுருகன், எம்.ஏ., மன்னர் துரை சிங்கம் அரசு கலைக் கல்லுாரி,
சிவகங்கை: இந்திய ஏவுகணை மைந்தரான டாக்டர் அப்துல் காலம் இழப்பு, மாணவர்
சமுதாயம்,இளைஞர்களுக்கு பேரிழப்பு. மாணவர்களுக்காக உழைத்த அவரது மரணம்
மாணவர் நிகழ்ச்சியிலேயே நேர்ந்துள்ளது. 40 டாக்டர் பட்டங்களை பெற்ற
பெருமைக்குரியவர். போலியோ தாக்கியோருக்கான செயற்கை காலுான்றியை 4 கிலோவில்
இருந்து 400 கிராமாக குறைத்தது சாதனையின் முக்கியமானது.
வாழ்ந்து காட்டியவர்
பி.சூரியபிரியா, அரசு மகளிர் கல்லுாரி, சிவகங்கை: கனவு காணும் வார்த்தைக்கு
அர்த்தம் தந்தவர். என்னை போன்ற பல்லாயிரக்கணக்கானோர் பின்பற்றுகிறோம்.
வீட்டில் ஒருவரை இழந்தது போன்று உணர்கிறேன்.எப்படி வாழ வேண்டும் என்பதை விட
அதை வாழ்ந்து காட்டியவர். அவரது இழப்பை யாராலும் ஈடு செய்ய இயலாது. மரம்
நடும் திட்டத்தை விதைத்தவர். பொது,இல்ல நிகழ்ச்சியில் அவரது வழி
காட்டுதலின் படியே மரக்கன்றுகளை வழங்குகின்றனர்.
எனது ரோல் மாடல்
ஆர்.மங்கையர்கரசி, முதுநிலை நுாலகவியல் மற்றும் தகவல் அறிவியல்,அழகப்பா
பல்கலை கழகம், காரைக்குடி: அவரையே ரோல் மாடலாக வைத்து, பி.எஸ்.சி.,
இயற்பியல் எடுத்து படித்தேன். எங்கள் மத்தியில் பேச வேண்டும், என
'பாரதரத்னா' அப்துல்கலாமுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்தை
கனிவுடன் பரிசீலித்து, எனக்கும் என் தோழிக்கும் புத்தகத்தை பரிசாக
அனுப்பினார். மாணவர்கள் முன்னோக்கி செல்ல உதவியாக இருந்தவர். அவர்
காலத்தில் நான் ஒரு மாணவியாக இருந்தேன், என்பது என் வரலாற்று பெருமை.
2020-ல் இந்தியா வல்லரசாகும் என்ற கனவை நாங்கள் நனவாக்குவோம்.
அறிவு எது என உணர்த்தியவர்
ஜி.ராஜேஷ் பாண்டியன், பிளஸ் 2, கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலை பள்ளி,
விருதுநகர்: இளைஞர்கள் மீது காட்டிய அன்பால் அப்துல் கலாமை பார்க்க
வேண்டும் என்ற ஆசை பல நாட்கள் இருந்தது. அது நிறைவேறுமா என
நினைத்திருந்தேன். கடந்த பிப்ரவரி 14ல் எங்கள் பள்ளியில் நடந்த விழாவில்
பங்கேற்ற அவரை நேரில் சந்தித்து நான் வரைந்த அவரது ஓவியத்தை காண்பித்து
அதில் அவரது கையெழுத்தை வாங்கினேன். அது எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத
நிகழ்ச்சி. என்னை போன்றவர்களை கனவு காண கூறி விட்டு நம்மை விட்டு மறைந்து
விட்டார். மாணவர்களுடன் நெருங்கி பழகும் ஜனாதிபதி இனி கிடைப்பது சந்தேகமே.
இளைஞர்களுக்காகவே வாழ்ந்தவர்
எம். நர்மதா, பிளஸ் 2, தேவாங்கர் பெண்கள் மேல்நிலை பள்ளி, அருப்புக்கோட்டை:
மாணவர்கள், இளைஞர்களை ஊக்குப்படுத்துவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.
இளைஞர்களுக்காகவே வாழ்ந்தவர். அவருடைய இழப்பு மாணவர்களாகிய எங்களுக்கு
பேரிழப்பு. எங்களை வழி நடத்த இவர் போல் இனி யார் வருவார் என எண்ண
தோன்றுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரை
நேசித்துள்ளனர். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய பணிகள், அறிவுரைகளை பின்
பற்றி நடப்போம் .
எளிமை விரும்பி
எஸ்.ஹரிணி, ஏ.கே.டி.ஆர். பள்ளி, ராஜபாளையம்: அப்துல் கலாமை நாளிதழ்களில்
படித்திருக்கிறேன். அவர் குறித்த பல்வேறு விஷயங்களை பெற்றோர், ஆசிரியர்
மூலம் தெரிந்து கொண்டுள்ளேன். ஏழை குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால்
அணுவிஞ்ஞானி, ஜனாதிபதியான அவர் எப்போதும் எளிமை விரும்பி. தன்னம்பிக்கைக்கு
எடுத்துக்காட்டு . மாணவர்கள், இளைஞர்களுடன் அவர் பேசுவதை பார்க்கும்போது
சந்தோஷமாக இருக்கும். ராஜபாளையத்திற்கு அப்துல் கலாம் வரும்போது அவருடன்
நானும் கை கொடுத்து பேசவேண்டும் என கனவு கண்டேன். ஆனால் நனவாகாமல்
போய்விட்டது.
நாட்டை நேசித்தவர்
கே. கணேஷ் பாபு, பி.காம்., கலசலிங்கம் கலை அறிவியல் கல்லுாரி,
கிருஷ்ணன்கோவில்: நான் பிளஸ் 2 படிக்கும் போது பள்ளி விழாவில் நேரில்
பார்த்தேன். அவரது பேச்சு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. தோல்வி
மனப்பான்மையை கைவிடுங்கள். முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர்கள்
ஏனெனில் இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி
அதிர்ஷ்டத்தால் வந்தது என விமர்சிப்பர்'என்றார். அவரது பேச்சு உயர்ந்த
லட்சியத்துடன் நமக்காகவும், நாட்டிற்காகவும் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்தை
என் மனதில் விதைத்தது.
மனதில் இடம் பிடித்தவர்
எஸ்.பெஜித்தா, பி.காம்., அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி :
கனவு காணுங்கள், அவற்றை நனவாக்க கடுமையாக போராடுங்கள் என்ற அப்துல்கலாமின்
கூற்று இளைஞர்களை ஊக்குவித்து வாழ்க்கையில் வெற்றி பெற துணை புரிகிறது.
நாட்டிற்காக தனது வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்து 24 மணிநேரமும்
மாணவர்களுக்காக உழைத்தவர். அவரது கண்டுபிடிப்பு உலகம் அழியும் வரை பெயர்
கூறும். காந்தி, காமராஜர் போல் அனைவரது மனதிலும் நீங்கா இடம்
பிடித்துவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...