துவக்க நிலை வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அருகிலேயே அங்கன்வாடிகளை அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார வசதியில்லாத பெருபான்மையான பெற்றோரே, பள்ளி செல்லும் முன் பயிற்சிக்கு, தனியார் பள்ளிகளைத்தவிர்த்து, அங்கன்வாடிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர்.அருகில் அரசுப்பள்ளிகள் அமைந்திருக்கும் பட்சத்தில், துவக்க நிலை வகுப்புகளுக்கு அப்பள்ளிகளிலேயே அங்கன்வாடி குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், 1,183 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், 960 அங்கன்வாடிகளிலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடியில் குழந்தைகளை அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் கூடுதல் அங்கன்வாடிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு அருகிலேயே, அங்கன்வாடி இருப்பதால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தவிர, அக்குழந்தைகளும் அருகிலுள்ள பள்ளிகளையே விரும்புவதாக அங்கன்வாடி ஆசிரியர்கள் கூறுகின்றனர். குழந்தைகளும் ஆர்வத்தோடு அரசு பள்ளிகளில் படிக்கும் சூழல் அமைகிறது.அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:
பள்ளி வளாகத்திற்குள் அமைந்திருக்கும் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் நன்றாக பழகியிருக்கும். அதனால், புதிய பள்ளி என்ற எண்ணமேஇல்லாமல், குழந்தைகள் துவக்க நிலை வகுப்புகளில் படிக்கின்றனர்.தற்போது, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டால், அங்கன்வாடியில் பயின்ற குழந்தைகளும், தனியார் பள்ளிகளில் சேர முயற்சி செய்கின்றனர்.ஓரிரு வகுப்புகளுக்கு பின்னர் பொருளாதார சூழ்நிலையால், மீண்டும் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர்.பள்ளிக்கு அருகில் அங்கன்வாடிகள் அமைக்கப்படுவதால், பெற்றோரும், அப்பள்ளிகளின்சிறப்புகள் மற்றும் தரம் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள முடிகிறது.அங்கன்வாடிகளிலும், பள்ளி நிர்வாகத்தின் மூலம், ஆங்கிலவழி கற்றல் செய்யும் முயற்சியில், பல பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. இதனால், ஆங்கில வழி கற்றல் திட்டமும் பள்ளிகளில் மேம்படுத்தப்படுகிறது.அரசு பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளது. கல்வித்துறை இதுகுறித்து, பள்ளிகளில் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,'' பல பள்ளிகளில் அங்கன்வாடிகள் வளாகத்திற்குள்தான் அமைக்கப்பட்டுள்ளது. இடவசதியில்லாத பட்சத்தில், பள்ளிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆங்காங்கே, அங்கன்வாடிகள் உள்ளன. தற்போது அவற்றை மாற்றி அமைப்பது குறித்து எந்த திட்டமும் இல்லை. பள்ளிகளின் சார்பில் முறையாக பரிந்துரை அனுப்பப்படும் பட்சத்தில், கல்வித்துறை மூலம் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...