யு.ஜி.சி. விதிகளின்படி தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் தகுதியற்ற ஆசிரியர்களை நியமிக்கும் போக்கு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழில் பி.எச்டி. பட்டம் பெற்ற கோவையைச் சேர்ந்த பெண், கல்லூரிகளில் ஆசிரியர் சேர்க்கை தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
பெரும்பாலான தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்சேர்க்கையில் யு.ஜி.சி.யின் விதிகளைப் பூர்த்தி செய்யாமல் தன்னிச்சையான போக்கினை கடைபிடிக்கின்றனர். மிகக்குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்குடன் மட்டுமே நேர்முகத் தேர்வினை நடத்தி சேர்க்கை நடத்துகின்றனர்.பணிமூப்பு உடைய ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்பட்சத்தில், அவர்களின் திறமை, பணிமூப்புக்கு ஏற்ப சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, படித்து முடித்துவிட்டு கற்பித்தல் திறமையில் போதிய முன்அனுபவம் இல்லாத பட்டதாரிகளையே பணியில் சேர்க்க ஆர்வம்காட்டுகின்றனர். பி.எச்டி. படிப்பு முடித்தவர்களுக்கு கூட மாதம் ரூ.6 ஆயிரம்தான் சம்பளம் தர முடியும். அதற்குக்கூட, சில கல்லூரிகள் ஜாதிய அடிப்படையில் முன்னுரிமை அளிக்கின்றனர்.
தனியார் கல்லூரிகள் கடைபிடிக்கும்இந்த போக்கால் தகுதியான ஆசிரியர் மூலம் கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.வெறும் லாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் செயல்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதோடு, தகுதியான ஆசிரியர்களும் வஞ்சிக்கப்படுகின்றனர். இது குறித்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகங்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. தனியார் கல்லூரிகளின் ஆசிரியர்களின் தகுதி குறித்து விரிவான ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் சி.பிச்சாண்டி கூறும்போது, ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு யு.ஜி.சி. விதிகளின்படி சரியான சம்பளமும் வழங்கப்படுகிறது. இதில், பிரச்சினை தனியார்கல்லூரிகளில் உள்ளது. மிகக்குறைந்த சம்பளத்தில் தகுதியற்ற ஆசிரியர்கள் சேர்க்கப்படுகின்றனர்.தனியார் கல்லூரிகளில் யு.ஜி.சி. விதிகளின்படி ஆசிரியர்கள் நியமனமும், சம்பளமும் இருக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த இரு நீதிபதி அடங்கிய பெஞ்ச், தனியார் கல்லூரிகளில் யு.ஜி.சி. விதிகளின்படி ஆசிரியர் சேர்க்கை, சம்பளம் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இதனை கடுமையாக கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழகங்கள் வசம் உள்ளன’ என்றார்.கோவை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) டாக்டர் ஜெகதீசன் கூறும்போது, ‘ஒவ்வொரு கல்லூரியும் யு.ஜி.சி.யின் விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது கட்டாயம். அதில், ஆசிரியர் சேர்க்கையும் அடங்கும். நாங்களும் கண்காணிக்கிறோம். அவ்வாறு, ஏதாவது கல்லூரிகளில் புகார் இருக்கும்பட்சத்தில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...