பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் அருகே, 93 மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 63 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரையில் தனலெட்சுமி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேரலி, கல்பாடி, மருவத்தூர், ஏரையூர், அகரம்சிகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இன்று காலையில் இந்த பகுதிகளில் இருந்து 93 மாணவ- மாணவிகளை பள்ளி பேருந்து ஒன்று ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றது. பேருந்து, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலக்கரை என்ற பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 63 மாணவ-மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.
இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து மாணவர்களை மீட்டுள்ளனர். அப்போது, பேருந்தில் அவசர வழி கதவு திறக்கப்படவே இல்லை. கடைசி வரை போராடி திறக்காததால் கதவை பொதுமக்கள் உடைத்து மாணவர்களை மீட்டுள்ளனர்.
காயம் அடைந்த மாணவ-மாணவிகள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுனர் ராஜாதி ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்து கடந்த 23ஆம் தேதி எப்சி காட்டப்பட்டுள்ளது. அப்போது, பேருந்து இயக்க தரமற்றது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் சான்றிதழ் அளித்துள்ளார். பின்னர் பேருந்து மீண்டும் எப்சி காட்டப்பட்டுள்ளது. அப்போது, பேருந்துக்கு நற்சான்று வழங்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பேருந்தை இயக்க எப்படி அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல் கடந்த மாதம் அரியலூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 மாணவர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் கொடுத்தால்பேருந்துக்கு நற்சான்று வழங்கப்படும்!
ReplyDelete