பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார்
டிரைவர் மகள், 'அழுவதா; சிரிப்பதா என்ற சூழலில் உள்ளேன்' என, கண்ணீருடன்
தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், திம்மையன்புதுாரை சேர்ந்தவர்
சென்னியப்பன்; கார் டிரைவர். இவர் மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள்
வான்மதி, 29, ஐ.ஏ.எஸ்., தேர்வில், அகில இந்திய அளவில், 152வது இடத்தை
பெற்று, சாதனை படைத்தார். பிளஸ் 2 வரை, சத்தியமங்கலம் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் படித்த வான்மதி, பின், தனியார் கல்லுாரிகளில்,
பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., முடித்தார்.வங்கி தேர்வில்
தேர்வு பெற்று, 2014 முதல், நம்பியூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், உதவி
மேலாளராக பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது, சிவில் சர்வீஸ் தேர்வில்,
தேர்ச்சி பெற்றுள்ளார்.
அரசு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், வான்மதி பேசியதாவது:பெண்ணுக்கு,
கல்வி தான் மூலதனம். கல்வியை முழுமையாக கற்று, தன்னுடைய ஆழ்மனதில்,
லட்சியத்தை ஏற்படுத்தினால், கட்டாயம் வெற்றி பெறலாம். நான் படித்த
இப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும்போது, அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர்
உதயசந்திரன், ஒரு விழாவிற்கு வந்து பேசினார். அப்போதே, நான் கலெக்டராகி,
இந்த பள்ளிக்கு வரவேண்டும் என முடிவு செய்தேன்.
பிளஸ் 2 முடித்து சென்றவுடன், இந்த பள்ளிக்கு இதுவரை வந்ததில்லை.
பள்ளிக்கு, நான் மீண்டும் வரும்போது, என்னால் இந்த பள்ளி பெருமை கொள்ள
வேண்டும் என்ற எண்ணத்துடன், பிளஸ் 2 முடித்து விட்டு, வெளியே சென்றேன்.
இன்று, அந்த லட்சியத்தை அடைந்து விட்டேன், மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேசமயம், தற்போது, என் தந்தை உடல்நலக் குறைவால், கோவை மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சோகம், என்னை மிகவும் பாதித்துள்ளது. என்
தந்தை விரைவில் குணமாக, நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய
வேண்டும்.இறைவன், எனக்கு மகிழ்ச்சி, சோகம் இரண்டையும் ஒரே நேரத்தில்
கொடுத்ததால், சிரிப்பதா, அழுவதா என, தெரியாமல் தவிக்கிறேன்.இவ்வாறு பேசி
முடிக்கும்போது, வான்மதி கண்ணீர்விட, பேச்சை உருக்கமாக கேட்ட ஆசிரியைகள்,
மாணவியர் என, அனைவரின் கண்களும் குளமாயின.
துாண்டுகோலாக இருந்த 3 பேர்!
*
கல்வியால் அனைத்தையும் வெல்ல முடியும் என, எனக்கு துாண்டுகோலாக
இருந்தவர்கள் மூன்று பேர்; அவர்களை, என் வாழ்க்கையில் மறக்க முடியாது.
* ஒருவர், என் தோழியின் தந்தை, 'கஸ்டம்ஸ் அதிகாரி'யான பாலசுப்பிரமணியன்,
இரண்டாவது, என் தோழி கல்பனா, மூன்றாவது, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின்
இயக்குனர் சங்கர்.
* என் வெற்றியை, ஒட்டுமொத்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியை
களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். இவ்வாறு, வான்மதி தெரிவித்தார்.
தேயிலை தோட்ட தொழிலாளி மகன் சாதனை:
நீலகிரி
மாவட்டம், பந்தலுார் அருகே, படைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து --
பூவதி தம்பதியின் மகன், இன்பசேகரன், 26. எம்.எஸ்சி., வேளாண் பட்டதாரியான
இவர், டில்லியிலுள்ள, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில்,
ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த, 2010ம் ஆண்டு தேர்வில், ஐ.எப்.எஸ்., (இந்திய வனப்பணி) பிரிவில்
தேர்ச்சி பெற்றார். அப்பணிக்கு தேவையான உயரம் இல்லாததால், பணியில் சேர
முடியவில்லை. மீண்டும், நான்கு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, இம்முறை,
ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தந்தை காளிமுத்து
டெய்லராகவும், தாயார் பூவதி, தேயிலை தோட்ட தொழிலாளியாகவும் பணியாற்றி
வருகின்றனர். கோவை வேளாண் பல்கலையில், பி.எஸ்சி.,யும், ஐதராபாத் வேளாண்
பல்கலையில், எம்.எஸ்சி.,யும் முடித்துள்ளார்.
இன்பசேகரன் கூறுகையில், ''நீலகிரியில்,
கடைக்கோடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து, தன்னம்பிக்கை,
விடாமுயற்சியால் தற்போது ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வாகி உள்ளேன். எந்த மாநிலத்தில்
பணி வழங்கினாலும், ஏழை, அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக, பாடுபடுவேன்,''
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...