தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் |
இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தில், 5,000 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையின், மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது; அதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. 
நிரந்தர அங்கீகாரம்: நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் மற்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் பள்ளிகள் மட்டுமே, அங்கீகாரம் பெற்று இயங்க முடியும். இதில், 10 முதல், 15 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும், பல பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, புதிதாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது.தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தில், 2,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை. அங்கீகாரம் இல்லாமலேயே, அந்தப் பள்ளிகள் மாணவர்களைச் சேர்த்து, அட்டகாசமாக இயங்கி வருகின்றன.அங்கீகாரமற்ற இந்தப் பள்ளிகளைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
அது மட்டுமின்றி, அங்கீகாரமற்ற இந்தப் பள்ளிகளுக்கு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத, மெட்ரிக் இயக்குனரகமும், தமிழக தேர்வுத் துறையும் அனுமதி அளித்துள்ளன. 'இந்தச் செயல் சட்ட விரோதமானது' என, பள்ளி நிர்வாகிகள் சிலர் கொந்தளித்துள்ளனர். சென்னையில் மட்டும், 120 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை. இவற்றை எந்த வகையிலும், மெட்ரிக் இயக்குனரகமோ, கல்வித்துறையோ கண்டுகொள்ளவில்லை. அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பயந்தும், இந்தப் பள்ளி களின், 'கவனிப்பில்' மயங்கியும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அலட்சியமாகவும்,மவுனமாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது:
தமிழகத்தில், ஏராளமான மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகின்றன. ஆனால், சிறிய அளவில், சேவை அடிப்படையில் செயல்படும், 1,200 பள்ளிகளை மட்டும், அதிகாரிகள் குறிவைத்து, அந்தப் பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். நெருக்கடி: சென்னையில், நடிகர் ரஜினிகாந்தின் அறக்கட்டளைக்கு சொந்த மான ஆஷ்ரம் பள்ளி, எழும்பூர் டான் பாஸ்கோ, அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ., போன்ற பல பெரிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை. அவற்றை எல்லாம் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.ஒரே விதமான அணுகுமுறையை பின்பற்றாமல், பாரபட்சமாக நடந்து கொள்ளும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு எதிராக, விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...