சென்னை,
பல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த 110 மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இந்த வருட கலந்தாய்வில் இடம் கிடைத்தது.
அதனால் அவர்கள் பல் மருத்துவ படிப்பில் இருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்.
மருத்துவ கலந்தாய்வு
தமிழ்நாட்டில் சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க 2665 இடங்கள் இருந்தன. அந்த இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் பல் நோக்கு அரசு மருத்துவமனையில் கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வு 25-ந் தேதி முடிவடைந்தது.
இந்த கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பின. மேலும் சென்னை பிராட்வே அருகே உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 85 இடங்களும் நிரம்பின. சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின.
சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு அனுமதி கிடைத்தால் அந்த கல்லூரிகளின் இடங்களும் 2-வது கட்ட கலந்தாய்வுக்கு வர உள்ளது.
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பம்
நேற்று பி.எஸ்சி.நர்சிங், பி.பார்மஸி, பிஸியோதெரபி உள்ளிட்ட 11 வகையாக மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளில் வழங்கும் பணி தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி கலந்துகொண்டு விண்ணப்ப படிவங்களை மாணவ-மாணவிகளிடம் வழங்கி வினியோகத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது டாக்டர் கீதா லட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
22-ந் தேதி 2-வது கட்ட கலந்தாய்வு
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் 17-ந் தேதி வரை விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகிறது. நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்களை 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு , கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரியில் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வும் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தான் நடைபெறும்.
முதல் கட்ட கலந்தாய்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்களில் 110 பேர் பல் மருத்துவ கல்லூரிகளில் படிப்பவர்கள். அவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது.
அவர்கள் படிக்கும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். அந்த தொகையை 4 மாணவர்கள் கட்டுவதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே அவர்கள் பணத்தை கட்டுவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டை முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.
இவ்வாறு டாக்டர் எஸ்.கீதா லட்சுமி தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...