காஞ்சிபுரம் நகராட்சிப் பள்ளியில் புதன்கிழமை காலையில் ஒரு கட்டடத்தின்
மாடியிலிருந்து மற்றொரு கட்டடத்தின் மாடிக்குத் தாவியபோது, தவறிக் கீழே
விழுந்த மாணவர் பலத்த காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர
சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு பின்புறம் உள்ள காவலர்
குடியிருப்புக்கு எதிரே யாகசாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் காஞ்சிபுரம் அமுதபடி தெருவைச் சேர்ந்த மோகன் மகன் ஹரீஷ்
8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தப் பள்ளியில் இரண்டு நிலைகளாக வகுப்பறை கட்டடங்கள் அமைந்துள்ளன.
இதில், தலைமை ஆசிரியர் அறையுடன் இணைந்த முன்பகுதி வகுப்பறைகள் ஒரு பிரிவுக்
கட்டமாகவும், சத்துணவுக் கூடம் அமைந்துள்ள பகுதி மற்றொரு பிரிவுக்
கட்டமாகவும் அமைந்துள்ளன. இரு பிரிவுக் கட்டடங்களுக்கும் இடையே சுமார் 3
அடி இடைவெளி உள்ளது. சத்துணவுக் கூடத்துக்கான மேல்நிலை நீர்த்தேக்கத்
தொட்டி பின்பகுதிக் கட்டடத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை காலையில் பள்ளிக்கு வந்த மாணவர் ஹரீஷ், 2-ஆவது
மாடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைப் பார்க்கச் சென்றுள்ளார்.
அப்போது, ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து மற்றொரு கட்டடத்தின் மாடிக்கு
தாவியபோது தவறிக் கீழே விழுந்தார். இதில், மாணவர் ஹரீஷுக்கு காலில் எழும்பு
முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது.
இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் உஷாராணி உள்ளிட்ட ஆசிரியர்கள் ஆட்டோ
மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். பின்னர்,
இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து,
மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட மாணவர்
ஹரீஷை, அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்குப்பட்டு,
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் உஷாராணியிடம் கேட்டபோது, மாணவர் ஹரீஷ்
பள்ளியின் மாடிப்படியில் ஏறியபோது தவறி விழுந்து விட்டார். சக மாணவர்கள்
கொடுத்த தகவலின் பேரில் ஹரீஷை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு
மருத்துவமனையில் சேர்த்தோம். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு
மருத்துவனைக்கு அனுப்பப்பட்ட அவர், தற்போது சென்னை அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.
மாவட்டக் கல்வி அலுவலர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, மாணவர் தவறி விழுந்த
சம்பவம் தொடர்பாக பள்ளியில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை,
இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றார்.
மாணவரின் உறவினர்களிடம் கேட்டபோது, மாடிவிட்டு மாடி தாவியபோது ஹரீஷ் தவறி
கீழே விழுந்து விட்டார் என்ற தகவல் எங்களுக்கு வந்தது. தலையில் பலத்த காயம்
ஏற்பட்டுள்ளது. தற்போது பேசும் நிலையில் அவர் இல்லை. சைகை மட்டுமே
காட்டுகிறார். காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கோ, காவல் நிலையத்துக்கோ தகவல்
தெரிவிக்காமல், பள்ளித் தலைமை ஆசிரியர் உஷாராணியின் கணவரான ஓய்வு பெற்ற
காவல் உதவி ஆய்வாளர் மூலம் மூடி மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த
வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...