''பெற்றோர் உனக்கிட்ட பெயரோடு நின்று விடாதே; உன்னுடைய உன்னத பெயர்
உன்னிலிருந்து உருவாக வேண்டும்,'' என்பார் ஓர் அறிஞர்.பெற்றோர் இந்த
குழந்தைக்கு இட்ட பெயர் 'சிவஞானம்'. மனிதராக வளர்ந்து தனக்குள்ளிலிருந்து
பிரசவித்துக் கொண்ட பெயர் 'சிலம்புச் செல்வர்'.
சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் பொன்னுசாமி, சிவகாமியம்மன்
தம்பதியருக்கு 1906 ஜூன் 26ல் பிறந்தவர் தான் ம.பொ.சி.,மயிலாப்பூர்
பொன்னுசாமி சிவஞானம் என்பதன் சுருக்கமே அது.
கள் இறக்கும் தொழில் செய்த தந்தையுடன் முரண்பட்டு பள்ளிப்படிப்பை இழந்தார். மூன்றாம் வகுப்போடு படிப்பு நின்றது. வறுமையைப் போக்கிக்கொள்ள அச்சுக்கோர்க்கும் பணியில் இணைந்தார். இளம் வயதிலேயே தேசியத்தில் நாட்டம் வந்து விட்டது. குறைவான வருமானத்திலும் நிறைவான நுால்களை வாங்கிப் படித்தார். புத்தகத்தைக் குனிந்து படித்தால் அது நம்மை நிமிர வைக்கும் அல்லவா. புத்தகத்தை மேலிருந்து கீழே படித்தால்; நாம் கீழிலிருந்து மேலே போகலாம். 1919 டிசம்பர் 2ல் வடசென்னைக்கு வருகைபுரிந்த காந்தியடிகளை வரவேற்று பேச வைத்தப் பெருமை பெற்றார்.
சிறையில் வாடிய செம்மல்
ஆங்கில அரசின் கழுகுப்பார்வை அவர் மேல் விழுந்தது. அவரது 'வந்தே மாதரம்'
முழக்கத்தையும், ஆவேசப் பேச்சையும் கேட்டு வெகுண்ட பிரிட்டிஷ் அரசின்
இரும்புக்கரம் ம.பொ.சியை தொட்டது. வேலுார் சிறையில் வதைத்தது. 1942ல்
ஆகஸ்ட் கிளர்ச்சியில் கைதான ம.பொ.சியை வடநாட்டு அமராவதி சிறையில் அடைத்தது.
நாடு விடுதலை பெறும் வரை ஆறுமுறை சிறைத்தண்டனை பெற்றார்.
விடுதலைக்கு பின் இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது தமிழின்
தகுதியை தமிழினத்தின் சிறப்பை எடுத்துரைப்பதில் நாட்டம் காட்டினார்.
அதற்காகவே 'தமிழரசுக் கழகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவருடைய
அமைப்புக்கு திரு.வி.க., காமராஜ், ஜீவானந்தம், பாரதிதாசன் போன்றோர் ஆதரவு
காட்டினர்.
எல்லைக்காத்த ஏந்தல்
1954ல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் பகுதிகளை
தீர்மானிப்பதில் பங்காளி சண்டைகள் ஏற்பட்டன. திருப்பதி திருமலை நம் கையை
விட்டுப்போனது. சென்னையும் இழுபறி. அப்போது சிங்கம் போல்
சிலிர்த்தெழுந்தவர் ம.பொ.சி. அவரது அயராத உழைப்பும், அற்புதமான
வாதத்திறமையும், பூகோள அறிவும், வரலாற்றுப் பார்வையும் சென்னையை நமக்கு
மீட்டுத்தந்தது. திருத்தணியும் மீட்கப்பட்டது.
1967 ல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான ம.பொ.சி., 'தமிழ்நாடு' என்று
பெயர் மாற்றுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டார். 1967 ஜூலை 18ல் 'மெட்ராஸ்'
என்றிருந்த நமது மாகாணம், அப்போதைய முதல்வர் அண்ணாதுரை யால் 'தமிழ்நாடு'
ஆனது. சிலப்பதிகாரம் பற்றிப் பலபேர் பேசினாலும், இவரது அணுகுமுறை
அற்புதமானது. விதைகளை விட பூக்கள் அழகாய் இருப்பதைப்போல், மூலத்தை விட
இவரது விளக்கங்கள் அழகாக இருக்கும்.
பட்டங்களும் பாராட்டும்
பத்மஸ்ரீ, எம்.எல்.ஏ., எம்.எல்.சி., கலைமாமணி, சாகித்ய அகாடமி விருது,
பல்கலைக்கழகங்களின் 'டாக்டர்' பட்டங்கள் என எத்தனையோ விருதுகள் பெற்றவர்.
'சிலம்புச் செல்வர்' என்ற பட்டம் அவரது ஆழ்ந்த தமிழ்புலமைக்கு சாட்சி.
சென்னை பல்கலையில் செனட் உறுப்பினர் ஆனார். பட்டமளிப்பு விழாக்களில்
கருப்பு உடை அணிந்து கருப்பு தொப்பியும் வைத்தவர்கள் தான் கலந்து கொள்ள
முடியும். தமிழ்ப் பண்பாட்டில் ஊறித்திளைத்த ம.பொ.சியால் இதை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. தமிழகத்தின் உடையான வேட்டி, சட்டையோடு தான் வருவேன், என்பதில்
உறுதியாக இருந்தார். அது ஏற்கப்படாததால் பட்டமளிப்பு விழாக்களை
புறக்கணித்தார். மதுரை பல்கலை., செனட் உறுப்பினராகவும் ஆனார்.
அங்கேயும் இந்த பிரச்னை குறுக்கிட்டது. ஆனால் அப்போது துணை வேந்தராக
இருந்தவர் தமிழ் அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார். அவரிடம் தனது எண்ணத்தை
வெளிப்படுத்தினார். ஆங்கிலேயர் வழக்கப்படி ஆடை அணிய விரும்பவில்லை.
கவியரசர் தாகூரின் விஸ்வபாரதி பல்கலையில் வெள்ளை வேட்டியும், ஜிப்பாவும்
அணிந்து கொண்டு போகிறார்கள் என்றார். ம.பொ.சி.,யின் தேசிய மற்றும் தமிழ்
உணர்வை மதிப்பளித்த தெ.பொ.மீ., அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
வெளிநாட்டு பயணங்கள்
சுவாமி சச்சிதானந்தா, பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோர் ம.பொ.சி.,யின்
அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தனர். நீண்டதுாரம் பயணம் என்பதால்
லண்டனில் மூன்று நாட்கள் தங்க ஏற்பாடாகியிருந்தது. மதுரையை சேர்ந்த
மாரியப்பன், ம.பொ.சி.,க்கு துணையாக சென்றார். இங்கிலாந்து நாட்டின்
பாராளுமன்றத்துக்கு ம.பொ.சி.,யை அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
அங்கு சென்றதும், ''எந்த ஒரு பிரிட்டிஷ் பேரரசின் கைதியாக காந்தியடிகளும்,
நானும், என்னைப் போன்ற தொண்டர்களும் இருந்தனரோ, அப்பேரரசின் பாராளுமன்ற
நடவடிக்கைகளை, அதன் முன்னாள் கைதியான நான் 'ஏகோபித்த விருந்தினன்' என்ற
முறையில் பார்வையிடுவது அண்ணல் காந்தியடிகள் எனக்களித்த கொடையாகும்,''
என்று பெருமிதமாகக் கூறினார்.
சுடப்படாத தங்கம் ஆபரணம் ஆவதில்லை துளையிடப்படாத மூங்கில் புல்லாங்குழல்
ஆவதில்லை உளியின் வலிக்குப்பயந்த கல் சிற்பமாவதில்லைசிரமப்படாமல்
சிகரங்களைத் தொட முடியாது. அப்படி சிகரம் தொட்டவர் சிலம்புச் செல்வர்
ம.பொ.சி.,- முனைவர் இளசை சுந்தரம்,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...