தமிழகத்தில்
ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்...‘மறுபடியும் மொதல்ல இருந்தா’ என பலரும்
இந்த அறிவிப்பைக் கலாய்க்கலாம். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசம்
காட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு. ‘அரசு தரச்
சான்றிதழான ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்தான் அணிந்திருக்க வேண்டும்.
பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம். இல்லையேல் லைசென்ஸ் முடக்கப்படும்’ என்பது அதில் முக்கியமான வித்தியாசம்! அது என்ன ஐ.எஸ்.ஐ? அதற்கும் சாதாரண ஹெல்மெட்டுக்கும் என்ன வித்தியாசம்? கான்கார்ட் அராய் எனும் ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் தர மேம்பாட்டு அதிகாரி ஜெயக்குமார் கூறியது ...
ஹெல்மெட்டின் பணி என்ன?
‘‘ஒரு விபத்தின்போது 80 கிலோ எடையுள்ள ஒருவர், 1 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழந்தால் 800 கிலோ வேக பலத்தில் விழுவார். அதுவே 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் 1600 கிலோ வேக பலம். இவ்வளவு வேக பலத்தை ஹெல்மெட் போடாத நமது தலையால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது. 800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரிடலாம். இதைவிடவும் பல மடங்கு அதிக வேக பலம் நம் தலையைத் தாக்கினாலும் அதைத் தடுக்கும் வேலையைத்தான் ஒரு ஹெல்மெட் செய்கிறது. அவ்வளவு பலத்தைத் தாங்க, ஒரு குறிப்பிட்ட தரத்தில் ஹெல்மெட் தயாரிக்கப்படவேண்டும்!’’
அது என்ன ஐ.எஸ்.ஐ. தரம்?‘‘இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஹெல்மெட்டுக்கு பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச் சான்றிதழ் கொடுக்கிறது. அதன் கீழ் வரும் ஐ.எஸ் 4151 பிரிவில்தான் ஹெல்மெட்டின் தர விதிகள் உள்ளன. இதன்படி ஏ.பி.எஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாகப் பயன்படுத்த வேண்டும். அதன் இடைப்பட்ட பகுதியில்...
அதாவது, நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும். இது தவிர, சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும், அதன் லாக் எப்படி இருக்க வேண்டும், தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இந்த ஐ.எஸ் தர விதியில் இருக்கிறது. இந்த ஹெல்மெட்டுகளில் ஐ.எஸ்.ஐ முத்திரையும் கூடவே IS4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த ஐ.எஸ் விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து ஹெல்மெட் செய்து விலை மலிவாக சந்தையில் விற்கிறார்கள். பலத்த பாதிப்பைத் தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்துகிறார்கள். இவற்றை வாங்கி அணிந்தால் ஹெல்மெட் போட்டும் போடாத கதைதான்.’’ எதைத் தேர்ந்தெடுப்பது?
‘‘நமது தலையின் அளவுக்கு ஏற்ப சரியாக ஃபிட் ஆகும் ஹெல்மெட்டை மட்டும்தான் வாங்க வேண்டும். ரொம்பவும் லூஸாக இருந்தால் அடிபடும்போது அந்த ஹெல்மெட்டே நமது தலையைப் பதம் பார்க்கலாம். சதுரம், கூம்பு வடிவம் என டிசைனர் ஹெல்மெட்களைத் தவிர்க்க வேண்டும். ஹெல்மெட் ரவுண்டாக இருந்தால் மட்டுமே விபத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும்.’’
எப்படி அணிய வேண்டும்?
‘‘ஹெல்மெட் போட்டும் நாடி நாடாவைப் போடாமல் இருப்பது ஹெல்மெட்டை நழுவவிடச் செய்யும். ஆக, ஒரு விரல் அல்லது இரண்டு விரல் மட்டும் செல்லக்கூடிய இடைவெளியில் நாடாவை அணிந்துகொள்வது நல்லது. அதன் லாக்கும் சுலபத்தில் விலகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.’’
ஹெல்மெட் போடாததால் ஏற்படும் தலைக்காயம் குறித்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் கணபதியிடம் பேசினோம்...‘‘எனது 40 வருட சிகிச்சையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைக்காயங்களுக்கான அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். சென்னையில் மட்டுமே 100 தலைக்காயங்களில் 80 சதவீதம் ஹெல்மெட் போடாததால் ஏற்படுபவை.
ஹெல்மெட் போட்டால் தலையில் அடிபடாதா என்று கேட்கிறார்கள். அப்படிச் சொல்ல முடியாதுதான். ஆனால், பாதிப்பை கணிசமாகக் குறைக்கலாம். ஹெல்மெட் போட்டிருப்பவர்களுக்கு தலைக்காயம் ஏற்படும் ஆபத்து பத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம்.’’
தலைக்காயத்தில் இறப்பு மட்டும்தான் நிகழுமா?
‘‘தமிழ்நாட்டில் ஒரு நாளில் ஹெல்மெட் அணியாததால் விபத்தில் தலைக்காயம் பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறவர்கள் சுமார் 1000 பேருக்கு மேல் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே இறந்துவிடுவதில்லை. ஆனால், பாதிப்பு நிரந்தரமானதாகவும் கொடூரமானதாகவும் இருக்கும். சிலருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்படலாம்; மூக்கு கோணலாகப் போயிருக்கலாம்; வலிப்பு நோய் ஏற்படலாம்; இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்த முடியாத பாதிப்பு நேரலாம்; காது கேட்காமல் போகலாம். இப்படி நிறைய!’’முடி கொட்டுமாமே..?
‘‘ஹெல்மெட் அணிவதால் தலைமுடி கொட்டும், கழுத்து வலி ஏற்படும் என்று சொல்வதெல்லாம் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படலாம். வெளிநாடுகள் என்ன... மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் என நம் நாட்டின் முக்கிய நகரங்களிலேயே ஹெல்மெட் கட்டாயம் என்றிருக்கும்போது உயிரைக் காக்கும் இந்த ஹெல்மெட்டை அரசு சொல்லாமலேயே நாம் சுயமாக முன்வந்து அணிந்துகொள்ள வேண்டும்!’’ஹெல்மெட் அணிவதால் தலைமுடி கொட்டும், கழுத்து வலி ஏற்படும் என்று சொல்வதெல்லாம் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...