ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 18–ந் தேதி காலை நடந்த கணிதத்தேர்வின் போது தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தங்களது மொபைல் போன் மூலம் கணித வினாத்தாளை புகைப்படம் எடுத்து அதனை ‘வாட்ஸ் அப்’ மூலம் சக ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.இ.ஓ.ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன், சஞ்சீவ், மைக்கேல்ராஜ், விமல்ராஜ், கவிதா ஆகிய 8 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஓசூர் டி.இ.ஓ. வேதகன் தன்ராஜ் கிருஷ்ணகிரி டி.இ.ஓ. அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், புக்க சாகரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக இளநிலை உதவியாளர் ரமணா உள்பட 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதனால் இவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து ஓசூர் டி.இ.ஓ. வேதகன் தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் மாது ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் டி.இ.ஓ. வேதகன் தன்ராஜிற்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கியது. ஆசிரியர் மாதுவிற்கு முன்ஜாமின் வழங்கப்படவில்லை. இதனால் அவர் தலை மறைவானார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த ஆசிரியர் மாதுவை நேற்று கைது செய்து விசாரணைக்காக கிருஷ்ணகிரி அழைத்து சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க மாதுவை போலீசார் அழைத்து சென்ற போது அவருக்கு திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...