'அலுவலகத்துக்கு தொடர்ந்து தாமதமாக வந்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கையை
சந்திக்க வேண்டிஇருக்கும்' என, ஊழியர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை
விடுத்துள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம்
சார்பில், அனைத்து அமைச்சக அலுவலகங்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டு
உள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:நேரம் தவறாமையை, மத்திய அரசின் ஒவ்வொரு ஊழியரும்
கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பல ஊழியர்கள், அலுவலகங்களுக்கு தொடர்ந்து
தாமதமாக வருவதை, வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுபோன்ற ஊழியர்கள் மீது,
கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அனைத்து
அலுவலகங்களிலும், உயரதிகாரிகளில் இருந்து,
சாதாரண ஊழியர்கள் வரை, வருகைப்பதிவு குறித்த விஷயத்தில், நேரம் தவறாமையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அறிவிப்புகள் அவசியம்:
பணிக்கு வரும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், குறித்த நேரத்திற்கு அலுவலகம்
வருவதை, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக,
குறிப்பிட்ட கால
இடைவெளிகளில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மத்திய அரசின் அனைத்து
அலுவலகங்களிலும், ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, பயோ - மெட்ரிக்
தொழில்நுட்பம் மூலம், ஊழியர்கள் வருகையை பதிவு செய்யும் நடவடிக்கைகள்
துவங்கியுள்ளன. தற்போது, வருகைப் பதிவேட்டு புத்தகத்தில், சம்பந்தப்பட்ட
ஊழியர்கள் கையெழுத்திடுவதன் மூலம், வருகை, பதிவு செய்யப்படுகிறது. இந்த
நடைமுறைக்கு பதிலாக, பயோ - மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அதில்
கூறப்பட்டு உள்ளது.
வருகை பதிவேடு இணையதளம்:
* ஊழியர்களின் அன்றாட வருகை பதிவேட்டை, அனைவரும் காணும் வகையில், www.attendance.gov.in என்ற இணையதளமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
*இதில், பயோ - மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யும், 1.30 லட்சம் ஊழியர்களின் வருகை பதிவேட்டு விவரம் இடம் பெற்றுள்ளது.
*தற்போதுள்ள நடைமுறைப்படி, மத்திய அரசு ஊழியர், ஒரு மாதத்துக்கு, இருமுறை
மட்டும், அலுவலகத்துக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம்.
* இதற்கு மேல் தாமதமாக வந்தால், அந்த ஊழியருக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையில், அரை நாள் கழிக்கப்படும்.
*நியாயமான காரணங்களுக்காக தாமதமாக வர நேரிட்டால், சம்பந்தப்பட்ட
ஊழியர்களுக்கு சலுகை அளிக்கும் பொறுப்பு, அவர்களின் உயரதிகாரிகளுக்கு
கொடுக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...