டேஷ்
அகாடமி... ஒரு பிரபலமாகக் கருதப்படுபவர் நடத்தும் பள்ளி. பல வருடங்களுக்கு
முன்பு, என் மகனுக்காக அந்தப் பள்ளியில் விசாரிக்கச் சென்றபோது, மிகவும்
சிறிய எழுத்தில், "இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்று
போடப்பட்டிருந்தது, அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என்ற என் கேள்விக்கு
"விரைவில்" என்று பதில் வந்தது. பிள்ளையின் படிப்பு விஷயத்தில் இதுபோன்ற
பகீரத முயற்சிகளில் ஈடுபடும், அதுவும் அங்கீகாரமே இல்லாமல் செயல்படும்
பள்ளியில் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
இரண்டு மூன்று வருடங்கள் கழித்து அந்தப்
பள்ளியின் விளம்பரப் பலகைகளில் எல்லாம் மிகச் சிறிதாக "அங்கீகாரம்
கிடைத்துவிடும்" என்று ஒரு மூளையில் சிறிய உறுதிமொழியுடன் பிள்ளைகளைச்
சேர்ப்பதற்கான அழைப்பு இருந்தது. பள்ளியின் தாளாளரை விட, அவர் பின்னே
இருந்த அப்பாவின் பெயரும், பாட்டியின் பழம் பெரும் பள்ளியும், பெற்றவர்களை
இழுத்திருக்க வேண்டும், அவ்வபோது பள்ளியின் விழாவுக்கெல்லாம் நடிகர்களையும்
நடிகைகளையும் அழைத்து வந்தது ஒரு கவர்ச்சியை அளித்திருக்கக் கூடும்!
என் நண்பர் ஒருவர் சில வருடங்களுக்கு
முன் அந்தப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிட்டு, இப்போது திருப்தி இல்லாத
காரணத்துக்காக வேறு பள்ளியில் பிள்ளையைச் சேர்த்து, "திருப்பித்
தரப்படும்" என்ற உறுதியில் பள்ளி வாங்கிய வைப்புத் தொகையைக் கேட்டு,
நடையாய் நடந்து கொண்டிருக்கிறார், மற்ற பெற்றோர்களுடன் சேர்ந்து.
காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது, எனினும் அது அப்படியே
போய்க்கொண்டிருக்கிறது!
என் கேள்வியெல்லாம், அங்கீகாரம் இல்லாமல்
எப்படி ஒரு பள்ளியைத் தொடங்கி இத்தனை வருடம் நடத்துகின்றனர்? பிரபலங்கள்
எதற்காக இப்பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராகச் செல்கின்றனர்?
கல்வியாளர்கள் செல்லாத பள்ளிக்கு, சினிமா பிரபலங்கள் சென்று
பிள்ளைகளுக்குக் கூறுவது என்ன? அத்தனை விஷயமும் வெளியே தெரிந்தபின்னும்,
கல்வித்துறை இதற்கென எடுத்த நடவடிக்கைகள் என்ன? இதில் படித்த அல்லது
படிக்கும் குழந்தைகளின் நிலை என்ன?
இப்பள்ளி என்பது ஒரு நிதர்சன உதாரணமே.
அங்கீகாரம் இருந்தும் மறைமுகமாய், வெளிப்படையாய் மாணவர்களின் சேர்க்கையில்
கொள்ளை அடிக்கும் பள்ளிகளைப் பற்றிக் கல்வித்துறைக்குத் தெரியாதா? இத்தனை
கட்டணம் வாங்கிச் சேர்க்கும் பள்ளிகளிலும், 45 முதல் 50 குழந்தைகளுக்கு ஓர்
ஆசிரியர் என்ற வீகிதம் சரியானது தானா? பல பிள்ளைகளை ஒரு தீ விபத்தில்
பலிக்கொடுத்தப்பின், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போதும் தொடருகிறதா? ஒரு
குழந்தையை நீச்சல் குளத்தில் பலி கொடுத்து, ஒரு குழந்தையைப் பேருந்தின்
ஓட்டைக்குப் பலி கொடுத்து, சில குழந்தைகளை ஆசிரியப் போர்வையில் சில
காமுகர்களுக்குப் பலி கொடுத்து, வெறும் மதிப்பெண்ணில் சில குழந்தைகளின்
உயிரை ஆண்டுதோறும் எடுத்து எங்கே செல்கிறது கல்வித்துறை?
செய்கிறோம் நாங்களும் என்று சமச்சீர்க்
கல்விமுறையை நீங்கள் சொல்லக்கூடும். சமச்சீர் என்று கல்வியில் பாடச்சுமைக்
குறைத்தால் மட்டும் போதுமா? அதன் பிறகான கல்லூரிக் கல்வியில் நடக்கும்
கொள்ளையைத் தடுக்க வேண்டாமா, பெற்றவர்களின் சுமையை, ஏன் குறைக்க முடியாதா?
கொள்ளை அடிக்கும் வணிகர்களுக்குப்
பதிலடியாக, ஏழைகளின் பசியைப் போக்க ஒரு ரூபாய்க்கு இட்லி தரும் அரசு, மலிவு
விலையில் காய்கறித் தரும் அரசு, மக்களுக்கான அரசு, ஏன் அரசுப் பள்ளிகள்
இருக்கும்போது, அதை நோக்கி மக்களை வரச் செய்யாமல், புற்றீசல் போல்
தெருவுக்குத் தெரு, குறைந்தபட்சம் விளையாட்டு மைதானம் கூட இல்லாத பள்ளிகள்
எனப்படும் தனியார் கட்டிடங்களை ஊக்குவிக்கறது?
வேலை என்றால் அரசு வேலை, கல்வி என்றால் ஏன் தனியார்?
மலிவு விலையில் இட்லி, முடியாத கட்டணத்தில் கல்வி
மிகப்பெரும் அரசு மருத்துவமனைகள், தரமில்லாத பராமரிப்பு
ஏழைகளின் மீதான அலட்சியம் என்று ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே போகலாம்...
மாநிலங்களின் நிலை இப்படியென்றால், பேசாத
சமஸ்கிருத மொழிக்கு விழா எடுத்து, சர்வாதிகாரமாய் இந்தியைத் திணித்து,
கல்விச்சேவை என்பதை இப்படிச் செய்து வருகிறது மத்திய அரசு!
மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்ம்ருதி
இராணியின் கல்வித்தகுதியே கேள்விக்கு உட்படுத்தப்பட்ட பின்னும்,
கல்வித்துறை என்பது கேலிக்கூத்தாய் தான் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.
உதாரணத்துக்கு, பாலியல் குற்றங்கள் மற்றும் பல்வேறு முறைக்கேடுகளுக்கு
உள்ளான ஒருவரை, உருது மொழி மேம்பாட்டு வாரியத்துக்குத் தலைவராக இதே
அமைச்சகம் தான் நியமித்து இருக்கிறது!
கல்வித்துறை, கல்விக்காகவும்,
மொழிக்காகவும் இப்படிப்பட்ட "சிறந்த" மனிதர்களையே நியமித்துக்
கொண்டிருந்தால், கல்வி வளாகங்கள் குற்றவாளிகளையும், எதையும் கேள்வி கேட்கக்
கூடத் திராணியில்லாத எந்திரங்களையும் மட்டுமே உருவாக்கும்!
கல்வி என்பது சந்தையாகும்போது,
குழந்தைகள் என்பவர்கள் எந்திரங்கள் ஆகும்போது, கொஞ்சமும் இரக்கமில்லாத
அரசு, தனியார் ஊழியர்களும், நேர்மையில்லாத அரசியல்வாதிகளும், கொள்ளை
அடிக்கும் வணிகர்களும் மட்டுமே இந்த நாட்டுக்கு மிச்சம்.
ஏழைகளுக்கு ஒன்று... பணம்
படைத்தவர்களுக்கு ஒன்று என்று எல்லாச் சேவைகளும் மாறுபட்டே
கொண்டிருக்கும்போது, பிரிவினை என்பது இருந்துகொண்டேதான் இருக்கும்!
அம்மாவின் ஆட்சியோ, ஐயாவின் ஆட்சியோ,
இல்லை, பேசாதவரின் ஆட்சியோ, இல்லை பேசிப் பேசியே நாட்டில் கலகத்தை
உண்டாக்கும் அமைச்சர்கள் நிறைந்த, எப்போதும் சுற்றுப்பயணத்தில் இருப்பவரின்
தலைமை நிறைந்த ஆட்சியோ, கேப்டனின் ஆட்சியோ, இல்லை உண்மையில் ராணுவ ஆட்சியோ
யாரோ ஒருவரின் ஆட்சியோ, சிறந்த கல்வி, சத்தான உணவு, பாதுகாப்பான உறைவிடம்,
தன்னிறைவு அடைந்த விவசாயம், குற்றம் இல்லாத நாட்கள், மனிதர்களை மதிக்கும்
அரசு ஊழியர்கள், பணத்துக்கு வளையாமல், பதவி ஏற்பில் எடுத்த உறுதிமொழிக்
காக்கும் அரசியல்வாதிகள் என்று எப்போது மாற்றங்கள் நிகழ்கிறதோ அப்போதே
எல்லோருக்குமான சிறந்த கல்வி என்பதும் இங்கே சாத்தியப்படும், அது
சாத்தியப்படும் வேளையில் இந்தியா உண்மையில் வல்லரசாகும்.
ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது "சென்னைப் பட்டிணம் எல்லாம் கட்டணம், கைய நீட்டினா.. காசு பணம் கொட்டணும்..."
சென்னையில் என்றில்லை... இந்தியாவின் நிலையே கொஞ்சம் கொஞ்சமாய் இப்படித்தான் மாறி வருகிறது!
படித்தவனும் அதைச் செய்யும் போது, சாராய
வியாபாரிகள், ரவுடிகள் என்று எல்லோரும் கல்விச் சேவை செய்யத் தெருவில்
இறங்கும்போதுதான் மனம் வலிக்கிறது.
எல்லாம் ஒருநாள் மாறும், மாற்றம் என்பதே மாற்றமில்லாதது!
I read lot of articles like this. Tamilnadu won't be changed. We have to bear and live.
ReplyDeleteகட்டுரையை படிக்கும் போது நல்லாதான் இருக்கு. ஆனால் தமிழ்நாட்டுல ஒரு டேஸ் கூட திருந்த மாட்டேங்குறானே.... என்ன பன்றது.
ReplyDelete