தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆட்டோக்களில் மாணவர்களை அள்ளி
ஏற்றிக் கொண்டு செல்லும் அவலநிலை நீடிக்கிறது. சிறு வயது குழந்தைகள்
நெரிசலில் சிக்கி தவித்த நிலையிலும், ஆபத்தான நிலையிலும் அழைத்து
செல்லப்படுகின்றனர். இவ்வகை ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகமெங்கும் பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையை
உறவினர்கள் வீட்டிலும், சுற்றுலா இடங்களுக்கும் சென்று சென்று ஜாலியாக
இருந்து விட்டு வீட்டுக்கு வரும் பெற்றோர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
காத்திருக்கும். அது தான் பள்ளிகள் திறப்பு. உடனே துவங்கி விடும் பரபரப்பு.
பீஸ் கட்டணும், யூனிபார்ம், ஸ்கூல் பேக், வாகன வசதிகளை ஏற்பாடு
செய்யணும்.... இப்படி பலப்பல டென்ஷன்கள். பள்ளி திறக்கும் சில நாட்களுக்கு
முன்பு பெற்றோர் பீபி(BP) அளவை செக்செய்யாமலே சொல்லி விடலாம். கண்டிப்பாக
கூடி இருக்கும் என்று? ஒரு காலத்தில் அருகே உள்ள அரசு பள்ளியில் தங்களது
பிள்ளைகளை சேர்த்து விட்டு, ‘எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க’ என்று
பெற்றோர் கவலையில்லாமல் வாழ்ந்தது ஒரு காலம்.
இப்போது அப்படியில்லை... இந்த ஸ்கூல்ல ஸ்மார்ட் கிளாஸ், வீடியோ கோச்சிங்,
ரோபோட்டிக்ஸ் சப் ஜெக்ட் அது இதுன்னு ஏகப்பட்ட வசதிகளை, தீவிரமாக யோசித்து
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கின்றனர் பெற்றோர்கள். நகைகள்,
பத்திரங்களை அடகு வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ பள்ளிகளில் குழந்தைகளை
சேர்க்கும் பெற்றோர்களும் உள்ளனர். எல்லாவற்றையும் யோசிக்கும் பெற்றோர்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் குறைந்த கட்டணத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்
வாகனங்களையே முதல் சாய்சாக பெற்றோர் தேர்வு செய்கின்றனர். அந்த வாகனம்
வீட்டின் முன்பு வந்து இறக்கிவிட்டால் போதுமானது. இதில் ஆட்டோக்கள் முக்கிய
பங்கு வகிக்கின்றன.
மாதம் ஒரு நிரந்தர வருமானம் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் ஆட்டோ டிரைவர்கள்,
ஒரு ஆட்டோவில் டிரைவர் சீட் அருகே 2,3, உட்புறத்தில் 10க்கும் மேற்பட்ட
குழந்தைகளை திணித்து ஏற்றி செல்கின்றனர். சில நேரங்களில் டீசல்
ஆட்டோக்களின் பின்புறமும் மாணவர்களுக்காக திறக்கப்படுகிறது. பள்ளிக்கு
செல்லும் போதே கசங்கி பிழியப்பட்ட நிலையில் ஒரு மாணவரோ அல்லது மாணவியோ
பள்ளிக்கு சென்றால், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். ஒரு ஆட்டோவில்
உள்ள பயணிகள் சீட்டில் 3 பேர் தான் பயணிக்க வேண்டும். அது தான் சட்டம்.
ஆனால், மாதம் ரூ.500, ரூ.600க்கு குழந்தைகளை ஏற்றிச் செல்பவர்கள் இதை
எல்லாம் யோசிப்பார்களா? இதில் சில ஆட்டோ டிரைவர்கள் தங்களது சீட்டருகே பெண்
குழந்தைகளை ஏற்றிச் செல்லும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. முக்கியமாக,
பெண் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் டிரைவர்கள் பற்றிய விபரங்களை பெற்றோர்
கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
பையனோ, பெண்ணோ நமது குழந்தைகளை டிரைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறாரா?
வகுப்பறை வரை பத்திரமாக கொண்டு போய் சேர்க்கிறாரா? என்பதை எல்லாம்
கவனித்திருக்கிறீர்களா? இனிமேலாவது கவனிங்க பெற்றோர்களே...! இதில் இன்னொரு
பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், குக்கிராமங்களில் இருந்து அரசு
பஸ்களில் செல்ல முடியாத பள்ளி மாணவர்களும் பொதி மூட்டைகளை போல சரக்கு
ஆட்டோக்களில் ஏற்றி செல்லப்படுகின்றனர். யார் முந்தி ஏற்றிச் செல்வது என்ற
போட்டியில் வேகமாக செல்லும் போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் மாணவர்களை அழைத்து செல்லும் ஆட்டோக்களை
கவனமாக கண்காணிக்க வேண்டும். அள்ளி திணித்து செல்லும் ஆட்டோக்களுக்கு
அபராதம் விதிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் விஷயத்தில்
கவனம் செலுத்த வேண்டும். செலவோடு செலவாக அவர்கள் பள்ளி செல்லும்
வாகனங்களுக்கான செலவையும் சற்று அதிகரித்து, பாதுகாப்புக்கு வழிவகுக்க
வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...