"எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு அனைவரையும்
தேர்ச்சி பெற வைக்கவில்லை. எங்களை திட்டமிட்டு தேர்ச்சி பெறாமல்
செய்துவிட்டார்கள். ஏன் எங்களை தேர்ச்சி பெறவைக்கவில்லை என கேட்டதற்கு,
உங்களை துணி இல்லாமல் காவல்துறையிடம் அழைத்துச்செல்வோம் என்று கடுமையாக
மிரட்டுகிறார்கள். அதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். எனவே
இவ்விஷயத்தில் தலையிட்டு இன்று மாலை 4.30 மணிக்குள் பன்னிரெண்டாம்
வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தூக்குப்போட்டு
தற்கொலை செய்துகொள்வோம்.”
-குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்த
மாணவர்களிடமிருந்து கடந்த 12ஆம் தேதி நாமக்கல் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்துக்கு இப்படி ஒரு ஃபேக்ஸ் வந்து விழ… இப்போது அந்தப் பள்ளியை
சுற்றி பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜீவா, கெளதமன், விக்னேஷ்வரன், கணேசன், பார்த்திபன், சுகன்,
செளந்தரபாண்டியன், விஜயகுமார், கதிரேசன், தனசேகரன் இவர்கள்தான்
கலெக்டருக்கு ஃபேக்ஸ் அனுப்பிய மாணவர்கள்.
இதில் சுகன் என்ற மாணவரிடம் பேசினோம்.
"தேர்வு எழுதும்போதே எங்கள் வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், உங்க
பேரையெல்லாம் தெளிவா எழுதுங்க அப்பதான் ஃபெயில் போடுறதுக்கு வசதியா
இருக்கும்னு சொன்னார். அதே போல எங்க எல்லோரையும் ஃபெயிலாக்கிவிட்டார்கள்.
மறு தேர்வு எழுதி பாஸாகிவிடலாம் என்று இருந்தோம். மறு தேர்விலும்
திட்டமிட்டே எங்களை ஃபெயிலாக்கி எங்கள் வாழ்க்கையை சீரழிக்க
பார்க்கிறார்கள். நாலு மாசத்துக்கு முன்னாடி பி.டி.ஏ ஆசிரியரான
சந்திரசேகர், கதிரேசன் என்பவனை வெளியில உட்கார்ந்து படிச்சதுக்காக பயங்கரமா
அடிச்சிட்டார். அவன் உடனே அவுங்க மாமாவை கூப்பிட்டுகிட்டு வந்து கேட்டான்.
ஓ… அந்த அளவுக்கு வந்துட்டீங்களா..?
ஸ்கூல்னா இப்படித்தான் இருக்கும் என்று அப்பவே அவனை மிரட்டுனாங்க. அத
பக்கத்துல நின்னு நாங்க பாத்துக்கிட்டு இருந்தோம். அதற்கு பிறகு
சந்திரசேகர் சார் ஸ்கூலுக்கு வரலை. சந்திரசேகர் சாரும் எங்க க்ளாஸ் சார்
ராஜேந்திரனும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. அதனால அப்பவே எங்களை கட்டம்
கட்டிட்டார். க்ளாஸ்ல பாடம் நடத்தும் போது கூட, ' நீங்களெல்லாம் எதுக்குடா
படிக்க வர்றீங்க...? போங்கடானு!' மத்த பசங்க முன்னாடி அசிங்கப்படுத்துவார்.
மறுதேர்வுக்கு நல்லாதான் படிச்சி எழுதுனோம். அப்படியும் வெறும் ஒரு மார்க்
ரெண்டு மார்க்னு போட்டு ஃபெயில் பண்ணியிருக்காங்க. இத பார்த்துட்டு மத்த
குரூப்ல உள்ள பசங்களெல்லாம், அப்படிப்பாத்தா எங்க க்ளாஸ்ல அஞ்சு பேருகூட
தேற மாட்டாங்கடா உங்களையெல்லாம் வேணும்னே ஃபெயில் போட்ருக்காங்க என்று
கிண்டலடிச்சாங்க. அதன்பிறகுதான் நாங்க, எங்களை ஏன் ஃபெயிலாக்குனீங்கனு
கேட்டோம். அதுக்கு ஒழுங்கா போயிடுங்க இல்லனா துணியில்லாம போலீஸ் ஸ்டேசன்ல
உட்காரவச்சிருவோம்னு மிரட்டுனாங்க. எங்களுக்கு வேற வழி இல்லாம எங்களை
பாஸாக்கவில்லை என்றால் தற்கொலை செஞ்சிக்குவோம்னு ஃபேக்ஸ் அனுப்புனோம்"
என்றார்.
அடுத்ததாக பேசிய கதிரேசன் என்ற மாணவர், "எங்களுக்கு சரியாவே பாடம்
நடத்துறது இல்ல. மாடு மாதிரி அடிக்கிறாங்க. ஏன் அடிச்சீங்கனு வீட்ல
உள்ளவங்களை அழைச்சிக்கிட்டு போய் கேட்டதுக்கு, எங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப்
எல்லோரையும் ஃபெயிலாக்கிட்டாங்க. ரீ எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு ரிசல்ட்
பாக்க போனதுக்கு நீங்களெல்லாம் பள்ளிக்கூடத்துக்குள்ளயே வரக்கூடாதுனு
சொல்லி அசிங்கப்படுத்தினதோட மட்டும் இல்லாம ரிசல்ட் வர்ற வரைக்கும்
பள்ளிக்குள் நுழையமாட்டோம், மீறினால் கடும் நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம்
என்று எழுதி கையெழுத்து வாங்கிகிட்டாங்க. நாங்க என்னதான் பண்றதுனு தெரியலை
அதனாலதான் கலெக்டருக்கு ஃபேக்ஸ் அனுப்புனோம்" என்றார்.
சுகனின்
அம்மா தங்கமணியிடம் பேசினோம். "என் பையனுக்கு இங்கிலீஷ் சுத்தமா வராது. அத
நானே ஒத்துக்குறேன். அதுல கூட 68 மார்க் போட்ருக்காங்க. நல்லா படிக்கிற
மத்த பாடத்துல 1, 2 மார்க் போட்டு ஃபெலாக்கியிருக்காங்க, என்னனு போய்
கேட்டா உங்க பையன் சுத்தமா எழுதல மறுதேர்வு வச்சோம் அதுலயும் சரியா எழுதல.
மறுபடியும் பிளஸ்1 படிக்க சொல்லுங்கனு சொல்றாங்க. ஆனால் எக்ஸாமுக்கே வராத
பசங்களையெல்லாம் பாஸ் போட்ருக்காங்க. எங்க பையனுக்கு கறார் காட்டுறமாதி
மத்த பசங்களுக்கும் கறாரா பேப்பர் திருத்தனும்ல. எல்லோருடைய ஆன்ஸர்
பேப்பரையும் நாங்க பாக்கணும். ஒண்ணுமே எழுதாதவங்களை பாஸ் போட்ருந்தா
அதுக்கு பள்ளிக்கூடம் பதில் சொல்லியே ஆகணும். இவுங்க இப்படி பண்றதால
பசங்களோட ஒரு வருஷ வாழ்க்கை வேஸ்ட்டா போகுதுல்ல. அதுலயும் சந்திரசேகர்
என்பவர் அரசு ஆசிரியரே கிடையாது. அவர் பசங்களை அடிச்சிருக்கார்.
சந்திரசேகருக்காக பசங்களை ஃபெயிலாக்கியிருக்காங்க. கலெக்டருக்கு தகவல்
கொடுத்ததுக்கு பிறகு போலீஸ் ஸ்டேசனுக்கு வரச்சொன்னாங்க. அங்க போனா புகார்
கொடுத்த எங்களை வெயில்ல நிக்கவச்சிட்டு, ஆசிரியர்களை கூப்பிட்டு
பேசுறாங்க... இதெல்லாம் என்ன நியாயம்?" என்றார் ஆக்ரோஷமாக.
இது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் சுந்தர்ராஜனிடம் விளக்கம் கேட்டோம்.
"அவுங்க சொல்றதெல்லாம் சுத்தப்பொய். அவனுங்க அத்தனை பேருமே வயசுக்கு மீறிய
செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்கூலுக்கே வர்றது கிடையாது.
ஸ்கூலுக்கு வர்றேனு சொல்லிட்டு பக்கத்துல இருக்கிற கேர்ல்ஸ் ஸ்கூல்
காம்பவுண்ட்ல ஏறி மரத்துமேல உட்கார்ந்துகிட்டு பொண்ணுங்க யூரின் போறத
எட்டிப்பாக்குறது. தினமும் அஞ்சு குவாட்டரை வாங்கி கொண்டுவந்து டாய்லட்ல
வச்சி அடிச்சிட்டு பிரச்னை பண்ணியிருக்கானுங்க. அதை டீச்சர்ஸ் தட்டி கேட்டா
அவுங்க மேல இங்க் அடிக்கிறதுனு அவனுங்க அட்டூழியம் தாங்க முடியலை. அவுங்க
பெற்றோர்களிடம் சொல்லலாம் என்றாலும் அவுங்க பசங்களுக்குதான் சப்போர்ட்
பண்றாங்க.
பரீட்சை எழுத வரும்போது புக் பேப்பரையெல்லாம் கிழிச்சி எடுத்துகிட்டு வந்து
பிட் அடிக்கிறானுங்க. அத கண்டிச்ச ஒரு ஆசிரியரை கல்லால அடிச்சிட்டானுங்க.
அவரு ட்ரான்ஸ்பர் வாங்கிகிட்டு இந்த பள்ளிகூடத்தைவிட்டே போயிட்டார்.
கார்த்திங்கிற 9ம் வகுப்பு மாணவனை அடிச்சி ஆத்துல போட்டுட்டானுங்க.
பக்கத்துல இருந்தவங்க பாத்து காப்பாத்திட்டானுங்க. அப்பதான் நீங்க இது
மாதிரி பண்ணா ஜெயிலுக்குதான் போவீங்கனு சொன்னோம். அதை இப்ப எங்களுக்கு
எதிரா திருப்புறானுங்க. அவனுங்க அக்கிரமத்தை பக்கபக்கமா சொல்லலாம்.
ஸ்கூலுக்கே வர்றது இல்ல. சிங்கிள் டிஜிட்ல மார்க் வாங்கிட்டு பாஸ்போடலைனா
செத்துடுவோம்னு மிரட்டுறானுங்க. நாங்க என்ன பண்றதுனு தெரியலை. எங்ககிட்ட
எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு" என்றார் தீர்க்கமாக.
மாணவர்கள் கலெக்டருக்கு புகார் கொடுத்ததையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...