பள்ளி மாணவர்கள் இடையே
சிகரெட், மது, போதை பாக்கு உட்கொள்ளும் தீய பழக்கங்கள் அதிகரித்து
வருகின்றன; மாணவ சமுதாயத்தை காப்பாற்ற, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இளம் வயதினர் மத்தியில்
புகை பிடித்தல், மது அருந்துதல், போதை பாக்கு பயன்படுத்தும் பழக்கம்,
அதிகரித்து வருகிறது. "டீன் ஏஜ்' வயதில், இதுபோன்ற பழக்கத்துக்கு
தள்ளப்படும் மாணவர்கள், எதிர்காலத்தில், அதற்கு நிரந்தர அடிமைகளாகி
விடுகின்றனர். படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், உடல் நலம், மனநலம்
பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறி
விடுகிறது.எதிர்காலம் குறித்த விழிப்புணர்வும், வாழ்க்கையை பற்றிய
புரிதலும் இல்லாததே, இதுபோன்ற பழக்கத்துக்கு வழிவகுக்கிறது.
திருப்பூரில், அரசு
மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பலர், பள்ளி அருகே உள்ள கடைகள், சந்து
வீதிகள், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் கும்பலாக நின்று கொண்டு,
புகைபிடிப்பது, போதை பாக்குகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவிர,
பிறந்தநாள், வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் நண்பர்கள் கும்பலாக சேர்ந்து
கொண்டு, "ட்ரீட்' என்ற பெயரில் மது அருந்துவதும், பரவலாக நடக்கிறது.
இதுபோன்ற தவறான பழக்கமுள்ள மாணவர்களுடன் சேரும் நல்ல மாணவர்களும், திசைமாறி
விடுகின்றனர். கவனம் சிதறி, எதிர்காலத்தை தொலைக்கின்றனர்.
படிக்கும் மாணவர்கள்
மத்தியில் ஒழுக்கம், நற்பண்பு மற்றும் நல்ல நடத்தையே பிரதானமாக இருக்க
வேண்டும். ஆனால் புகைபிடித்தல், மது அருந்துதல், போதை பாக்கு உட்கொள்ளுதல்
போன்றவை பெருகி வருவது, ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
தொழில் நகரான திருப்பூரில், பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்லும்
தொழிலாளர்களாக இருப்பதால், பிள்ளைகள் மீது கவனம் செலுத்த, போதிய நேரம்
இருப்ப தில்லை. இது, பல மாணவர்களுக்கு தவறு செய்ய வசதியாகி விடுகிறது.
மாணவர்கள் மத்தியில்
பரவும் தவறான பழக்கங்களை தடுக்க, பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும். பள்ளி அருகே சிகரெட், போதை பாக்கு விற்பனை கடைகள் இருப்பின்,
அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். ரகசியமாக விற்றால், அக்கடைகளின் உரிமத்தை
ரத்து செய்ய வேண்டும்.மது அருந்தும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு,
"கவுன்சிலிங்' தருவது, பெற்றோரை வரவழைத்து எச்சரிப்பது, மது அருந்துவது
தொடர்ந்தால், இடைநீக்கம் போன்ற அதிரடி நடவடிக்கைகளையும், கல்வித்துறை
அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், மூத்த மாணவர்கள் கொண்ட
கண்காணிப்பு குழு அமைத்து, ரகசிய கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அவ்வப்போது
பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த வேண்டும்.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இளம் வயதில் சரியான வழிகாட்டுதல் இல்லாததே,
இதுபோன்ற சீரழிவுக்கு காரணம். இவ்விஷயத்தில், ஆசிரியர்கள் மட்டுமின்றி,
பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். புகை, மதுவால் ஏற்படும் பாதிப்பு
குறித்து, பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது
முக்கியம்,' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...