கல்வித்துறை அலுவலர்கள் சங்கம் தொடங்கும்
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து
அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்கக நண்பர்கள் சார்பில்,
புதிய சங்கம் தொடக்க விழா, நிர்வாகிகள் தேர்வு மற்றும் பணி ஓய்வுப்
பெற்றவர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில்
சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து
பள்ளிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் பணி கடந்த சில நாள்களாக
நடைபெற்றுள்ளது. இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து,
சில பள்ளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக புகார் எழுந்தது.
கல்வித்துறை தொடர்பான சுற்றறிக்கைகள்
அனுப்புவதற்கு தனி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம்,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி
அலுவலகங்களிலிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மற்றும் விளக்கக்
கடிதங்கள் அனுப்புவது வழங்கம். இந்த நிலையில், சங்கம் தொடங்குவதற்காக
அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டதை
அறிந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர்
சங்கத்தினர், கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச்
சென்றுள்ளனர். இதனை அடுத்து, கல்வித்துறை மென்பொருளை பயன்படுத்தி சங்க
அமைப்பு தொடக்க விழா அழைப்பிதழ் அனுப்பிய அலுவலர் குறித்து விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி கூறியது:
திண்டுக்கல் கல்வி மாவட்ட
அலுவலகத்திலிருந்து, பள்ளிக்கல்வி அலுவலர்கள் தொடங்கும் புதிய
சங்கத்திற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளித் தலைமையாசிரியர்கள்
சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,
சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி விளக்கம் அளிக்குமாறு
திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...