மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, ஆதார் எண் கட்டாயம் இருக்க
வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, ஆதார் எண்
வைத்துள்ள மாணவர் பட்டியல் தயாரிக்க, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு,
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின்,
பிற்படுத்தப்பட்டோர் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை ஆகியவற்றின் மூலம், ஜாதி வாரியாக கல்வி உதவித் தொகை
வழங்கப்படுகிறது. இதேபோல், மாணவியருக்கு மத்திய, மாநில அரசுகளால்
தனித்தனியாக பல திட்டங்களில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
கல்லுாரிகளில் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பு மாணவர்கள், தேசிய திறனறித்
தேர்வு எழுதிய மாணவர்கள் உள்ளிட்டோருக்கு, தனியாக உதவித்தொகை
வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள்
மூலம், இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள்
நடக்கின்றன; பயனாளிகளுக்கு உதவித்தொகை சரியாகச் சென்று சேர்வதில்லை என, பல
தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், உதவித்தொகை பெற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு
ஆதார் எண் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், வங்கிக்
கணக்கில் நேரடியாக கல்வி உதவித் தொகையை வழங்க உள்ளதாக, மாநில அரசுக்கு
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் நிதியுதவி, இனி வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் ஆதார் எண்
விவரங்களை சேகரிக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், தற்போது
ஆதார் எண் வைத்துள்ள மாணவர்கள் பட்டியலைத் தயாரிக்க, அனைத்து மாவட்டக்
கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...