எப்போதாவது
அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை
தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு
குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம்
செய்துள்ளது.
இமெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இமெயிலில் பல அணுகூலங்கள்
இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும்
என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்வெழுச்சியில் ஒரு
மெயிலை அனுப்பி விட்டு பின்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது,
அல்லது தகவல் பிழை மற்றும் விடுபட்ட தகவல் என பல காரணங்களுக்காகவும்
இவ்வாறு நினைக்கலாம். இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக என்று
ஜிமெயிலில் இப்போது அன் சென்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி.
கூகுள் ஏற்கனவே ஜிமெயில் லேப்ஸ் மூலம் சோதனை முறையில் இந்த வசதியை அளித்து
வருகிறது. அதன் புதிய மெயில் சேவை செயலியான இன்பாக்சிலும் இந்த வசதி
இருக்கிறது. இப்போது ஜிமெயில் பயனாளிகளுக்கு இது அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. ஜிமெயிலை பயன்படுத்தும்போது மெயிலை அனுப்பிய பிறகு, அன்
சென்ட் வசதி கொண்ட ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு
இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த
பட்டனை கிளிக் செய்தால் ,மெயில் சுவற்றில் அடித்த பந்து போல அனுப்பபடாமல்
திரும்பி வந்துவிடும்.
அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட்
செய்துவிடலாம். இந்த வசதியை பயன்படுத்த ஜிமெயிலில் செட்டிங் பகுதிக்கு
சென்று அன்சென்டில் 5 முதல் 30 விநாடிகள் வரையான அவகாசத்தில்
அமைத்துக்கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப
பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி
வருந்தும் நிலை இனி இருக்காது.
கிரிப்டெக்ஸ்ட் சேவை
இதே போல மெயிலை திரும்ப பெறும் வசதியை கிர்ப்டெக்ஸ்ட் எனும் புதிய மெயில்
சேவையும் அளிக்கிறது. ஜிமெயிலை விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட
பிறகும் கூட அது மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது. இன்பாக்சில் வந்த
மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி
செய்கிறது. ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை
பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர் கம்ப்யூட்டரில் இருப்பதை
இது தவிர்க்கிறது.
ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக மறைந்துவிடச்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.
ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக
இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். ஆனால்
மெயில் பெறுபவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என தெரியாது. அதேபோல
அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம்
கண்காணிக்கலாம். மெயிலை என்கிர்ப்ட் செய்தும் அனுப்பலாம். இமெயில்
பரிமாற்றம் ரகசியமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சேவை
ஏற்றதாக இருக்கும்.
ஜிமெயில் அறிவிப்பு: http://googleappsupdates.blogspot.co.uk/2015/06/undo-send-for-gmail-on-web.html
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...