தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செயல்படும்
நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்பாடுகளுக்கு இரண்டு ஆண்டுகளாக
நிதி ஒதுக்கீடு இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) நிதி
மற்றும் திட்ட அலுவலர் கையில் இருந்து பணம் செலவிடுவதாக சர்ச்சை
எழுந்துள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் சமூக
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு இயக்க செயல்பாடுகளில் என்.எஸ்.எஸ்.,
முக்கியமானது. ஒரு பள்ளியில் 50 மாணவர்கள் வீதம் இத்திட்டத்தில்
சேர்க்கப்படுகின்றனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மட்டும் 90
யூனிட்டுகளில், 4500 மாணவர்கள் உள்ளனர். கிராமப்புற துாய்மை, சுகாதாரம்
பேணுதல், புகையிலை, மது ஒழிப்பு, மருத்துவ முகாம், ரத்த தான முகாம் உட்பட
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலங்கள் இத்திட்டம் மூலம்
நடத்தப்படுகின்றன.
இதுதவிர சிறப்பு முகாம்கள் மூலம் பின்தங்கிய கிராமங்களை தத்தெடுத்து, அங்கு ஏழு நாட்கள் மாணவர்கள் தங்கி சேவை மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவர். இதற்காக ஆண்டிற்கு ஒரு பள்ளிக்கு ரூ.22,250 நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆனால் இரண்டு ஆண்டுகளாக இந்நிதியை
பள்ளிகளுக்கு வழங்கவில்லை. இதனால் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிதி மற்றும்
திட்ட அலுவலர்கள் தங்களின் கைப் பணத்தை செலவிட்டு வருகின்றனர். ஒருசில
பள்ளிகளில் பி.டி.ஏ., நிதியை செலவிட தலைமையாசிரியர்கள் மறுப்பதால்
அப்பள்ளிகளில் இத்திட்டம் முடங்கிப்போய் கிடக்கிறது. சில திட்ட அலுவலர்கள்
வேறு பள்ளிகளுக்கு மாற்றலாகி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால் அவர்கள்
இத்திட்டத்திற்காக செலவிட்ட பணத்தை எவ்வாறு பெறுவது என்ற குழப்பத்தில்
உள்ளனர்.
இப்பிரச்னை குறித்து கல்வித்துறை செயலர்,
இயக்குனர் கவனத்திற்கு கொண்டு சென்றும் 2 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும்
இல்லை என திட்ட அலுவலர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி
ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதா வது:இத்திட்டத்திற்கு
2014ம் ஆண்டில் 50 சதவிகித நிதி மட்டும் ஒதுக்கப்பட்டது. 2015 ஆண்டிற்கு
இதுவரை ஒதுக்கவில்லை. சில மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளாக இந்நிதி
வழங்கப்படவில்லை. இதனால் திட்டம் முடங்கும் சூழ்நிலையில் உள்ளது.
கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள்,
அரசியல்வாதிகளிடம் அன்பளிப்பு பெற்று சில பள்ளி ஆசிரியர்கள் தொடர் மற்றும்
சிறப்பு முகாம்களை நடத்துகின்றனர். இத்திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க
கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...