“தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை தேற்றுங்கள்;
அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். தோல்விக்கு பின்னாலும் வெற்றிக்கான ஒளி
உள்ளது என்பதை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பார்த்து கற்றுக்
கொள்ளுங்கள்,” என, பிரதமர் மோடி கூறினார்.
’மன் கீ பாத்’ என்ற பெயரில், மாதம் ஒருமுறை,
நாட்டு மக்களிடம், ’ரேடியோ’ மூலம் உரையாற்றுவதை, பிரதமர் மோடி வழக்கமாக
கொண்டுள்ளார். நேற்று, அவர், 25 நிமிடங்கள் ஆற்றிய உரை பற்றிய விவரம்:
ராணுவ வீரர்களின் நீண்ட கால கோரிக்கையான, ’ஒரே
பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை செயல்படுத்த, என் தலைமையிலான அரசு
உறுதியாக உள்ளது. எனினும், சில நிர்வாக சிக்கல் உள்ளதால், குறிப்பிட்ட
காலத்திற்குள் அதை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, 40 ஆண்டு காலம்
காத்திருந்த ராணுவ வீரர்கள், இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.
எனக்கு, கொஞ்ச அவகாசம் தாருங்கள். கண்டிப்பாக, ’ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’
திட்டம் அமல்படுத்தப்படும். சிலர், இந்த விவகாரத்தில் அரசியல் லாபம்
பார்க்க முயல்கின்றனர்.
எங்களின் இந்த ஓராண்டு கால ஆட்சியை பலர் குறை
கூறினாலும், பலர் எங்கள் ஆட்சியை பாராட்டியே உள்ளனர். விவாதம்,
ஜனநாயகத்தில் அவசியமான ஒன்று. ஏழைகளுக்காக, எங்கள் அரசு ஏராளமான திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. அடல் பென்ஷன் திட்டத்தில், 20 நாட்களில், 8.52
கோடி பேர் சேர்ந்துள்ளனர். ஏழைகளுக்கும், சமுதாய பாதுகாப்பிற்கும் இந்த
திட்டங்கள் மிகவும் அவசியமானவை.வறுமையை எதிர்த்து போராட, ஏழைகளில் இருந்து
ஒரு படையை உருவாக்க விரும்புகிறேன். அதன் மூலம் வறுமையை எதிர்த்து போராட
வேண்டும். வறுமையை ஒழிக்க, நாம் இன்னும் அதிகமாக முயற்சிக்க வேண்டும்;
வெற்றி பெற வேண்டும்.
விவசாயிகளும், மீனவர்களும் உற்பத்தியை பெருக்க,
புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும். பால் கொடுக்கும் கால்நடைகளை
சிறப்பான முறையில் வளர்த்து, பால் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.
ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா நாளாக
கொண்டாடப்பட உள்ளது. இதை, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளில் வாழும்
இந்தியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். ஜூன் 21ம் தேதியை, சர்வதேச யோகா
நாளாக, ஐ.நா., அறிவித்தது, நமக்கெல்லாம் பெருமையான விஷயம்.
காக்க வேண்டும்:
நாடு முழுவதும், கோடை வெயில் கொளுத்தி
வருகிறது. இதிலிருந்து மனிதர்கள் தங்களை காத்துக் கொள்வது போல, விலங்குகள்,
பறவைகளையும் காக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தோல்வியடைந்த மாணவர்கள் மனமுடைய வேண்டாம்; தோல்வியையும் வெற்றிக்கான
வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் வாழ்க்கையை சிறப்பானதாக
ஆக்குங்கள்.
உதாரணத்திற்கு, முன்னாள் ஜனாதிபதியும்
விஞ்ஞானியுமான அப்துல் கலாமை பாருங்கள். அவர், விமானியாக ஆசைப்பட்டார்.
அதற்கான தேர்வில் தோல்வியடைந்தார். அதனால், அவர் மனமுடைந்து விடவில்லை.
தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு, சிறந்த விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும்
மாறினார்.அதுபோல, தோல்வியடைந்த மாணவர்கள், அந்த தோல்வியை வெற்றிக்கான
வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.இவ்வாறு, பிரதமர்
நரேந்திர மோடி பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...