Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முடி கொட்டுமா, வியர்க்குமா, மூச்சு விட முடியுமா? 'ஹெல்மெட்' சந்தேகங்களுக்கு டாக்டர்களின் பதில்

        'ஹெல்மெட்டா... தலைவலிக்கும், வியர்க்கும், முடிகொட்டும், கழுத்து வலிக்கும், காது கேட்காது, பக்கவாட்டில் வாகனம் வந்தால் தெரியாது...' என்றெல்லாம் பல்வேறு எதிர்மறை சாக்கு போக்குகள், சந்தேகங்கள் வாகன ஓட்-டிகளுக்கு இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு துறை நிபுணர்களான டாக்டர்கள் பதில் இதோ...

தலை வியர்க்குமா; முடி கொட்டுமா?

டாக்டர் ஆர். சுகந்தி, பேராசிரியர், தோல் நோய் பிரிவு, மதுரை அரசு
மருத்துவமனை:ஹெல்மெட் அணிந்தால் தலை வியர்க்கிறது என்றால், சுத்தமான காட்டன் கைத்துண்டை தலையை சுற்றி கட்டி அதன் மேல் அணியலாம்; அது, வியர்வையை உறிஞ்சி விடும். குளித்து தலைமுடியை சுத்தமாக அலசி, துாய்மையாக வைத்திருந்தால் தலைமுடி உதிராது. மாறாக வெயிலால் தலைமுடி நேரடியாக பாதிக்கப்படுவது குறையும். நீண்டதுார பயணத்தில் ஹெல்மெட் அணிந்து சென்றால், அவ்வப்போது கழற்றி விட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும். கழுத்துப் பகுதியில் வியர்வை பட்டு ஹெல்மெட் பின்பகுதி அழுக்காகும். அதை முறையாக சுத்தம் செய்தால், பூஞ்சை தொற்று வராது. ஹெல்மெட் உட்பகுதியை வெயிலில் காய வைத்தால் வியர்வை வாசனை வராது; கிருமி தாக்குதலும் இருக்காது.


மூச்சு விட முடியுமா; அலர்ஜி வருமா?



டாக்டர் எம்.பழனியப்பன், நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை:டூவீலரில் செல்லும்போது, சாலையின் துாசு, வாகனப் புகையை சுவாசித்தபடி செல்கிறோம். இவற்றால் தான் அலர்ஜி ஏற்பட்டு, ஆஸ்துமா பிரச்னை அதிகமாகிறது. முழுவதும் முகத்தை மூடிய ஹெல்மெட்டால், துாசு, புகையை சுவாசிப்பது குறைகிறது.
இதனால், மூச்சிரைப்பு உள்ளவர்களுக்கு, நோயின் வீரியம் குறையும்; நன்றாக மூச்சுவிட முடியும்; நுரையீரலுக்கு, எந்த பிரச்னையும் இல்லை. சிறு சிறு தொந்தரவுகளை மனதில் நினைத்து, மிகப்பெரிய நன்மைகளை ஒதுக்கி விடக்கூடாது.


தலையில் பாரமாக இருக்குமா?



டாக்டர் பி.ஸ்ரீதர், மூளை, நரம்பியல் நிபுணர், மதுரை அரசு மருத்துவமனை:கழுத்துவலி இருப்பவர்கள், டூவீலரே ஓட்டக் கூடாது. ஹெல்மெட் அணிவதால் மட்டுமே, கழுத்துவலி வராது. கழுத்துவலி இருப்பவர்களும், ஹெல்மெட் அணியலாம். தலைக்கு சரியாக பொருந்தாத ஹெல்மெட் அணியும் போதுதான், தலை பாரமாக இருப்பது போன்று தோன்றும். தலையில் மாட்டியவுடன் நாடியில் அதை முறையாக கட்ட வேண்டும். அப்போது தான் தொந்தரவின்றி பயணம் செய்ய முடியும்.


காது கேட்குமா; காற்று வருமா?



டாக்டர் எஸ்.சரவணமுத்து, காது, மூக்கு, தொண்டை நிபுணர், மதுரை:பழைய ஹெல்மெட்டில் தான், 'காது கேட்பதில்லை' என்ற பிரச்னை இருந்தது. நவீன வடிவமைப்பில் காது கேட்பதற்கு, காற்றோட்டம் தருவதற்கான வசதிகள் உள்ளன. தலையில் அதிகமாக வியர்த்து, சைனஸ் தொல்லை, தலைவலி வரும் என்பது தவறு. நாள் முழுக்க அணிந்திருப்பதில்லை.நகர்ப் பகுதிகளில் அதிகபட்சம் ஒருமணி நேரம் அணிந்து டூவீலர் ஓட்டுவர். அந்த நேரத்தில் தலையை காப்பது தான் முக்கியம். காது கேட்பதில் பிரச்னை உள்ளவர்கள், அதற்கு ஏற்ற நவீன ஹெல்மெட் அணிய வேண்டும். பெயருக்கு எதையோ வாங்கி தலையில் அணிந்து அவஸ்தை படுவதை விட, உயிருக்கு உத்தரவாதம் தரும் வகையில், சற்றே விலை கூடுதலான ஹெல்மெட் வாங்கி அணியலாமே! இவ்வாறு, டாக்டர்கள் தெரிவித்தனர்.


பெயருக்கு ஹெல்மெட் வாங்கி, டூவீலரின் பின்பக்கத்திற்கோ, முன்பக்க கண்ணாடிக்கோ அணிவித்து அழகு பார்க்காமல் தலையில் அணிந்து உயிரை காப்போம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive