சேலம்
மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் அரசு உயர்நிலைப்
பள்ளியில், திருக்குறள் மனப்பாடம் ஊக்குவிப்பு அஞ்சல் சேமிப்பு முன்னோடித்
திட்டம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
சேலம்
மாவட்டம், கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 120 மாணவர்களும்,
உயர்நிலைப் பள்ளியில் 192 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே திருக்குறள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும், அதன்மூலம் அவர்களுக்கு தனித்தனியே அஞ்சல் சேமிப்புக் கணக்கு தொடங்கி 133 ரூபாயை செலுத்திடவும் அந்த ஊர் மக்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் முயற்சி எடுத்தனர்.
பள்ளியின் முன்னாள் மாணவரும், விசாகப்பட்டினத்தில் உள்ள சுங்க-கலால் சேவை வரி துறையின் முதன்மை ஆணையர் சி.ராஜேந்திரனின் முயற்சியால் இந்தத் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்பேரில், மாணவர்கள் திருக்குறள் மனப்பாட ஊக்குவிப்பு அஞ்சல் சேமிப்புத் திட்ட தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் தலைமை வகித்தார். மாணவர்கள் அனைவருக்கும் அஞ்சல் சேமிப்புக் கணக்குப் புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆட்சியர் க.மகரபூஷணம் பேசியதாவது:
திருக்குறளைப் படித்தால் போதும். எல்லா பிரச்னைகளுக்கும் அதில் தீர்வு உள்ளது. எனவே, திருக்குறளை படித்து மாணவர்கள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
விசாகப்பட்டினம் சுங்க-கலால் சேவை வரி துறையின் முதன்மை ஆணையர் சி.ராஜேந்திரன் பேசியதாவது:
திருக்குறள் மீது மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி மனப்பாடம் செய்யும் வகையில், திருக்குறள் மனப்பாட ஊக்குவிப்பு அஞ்சல் சேமிப்புத் திட்ட தொடக்க விழா நடத்தப்படுகிறது.
1,330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவரின் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் ஊர்மக்கள் சார்பில் ரூ.10,000 வரவு வைக்கப்படும். இதுபோல 50, 100, 500 என திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களின் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1,330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.10,000 பரிசுத் தொகையை பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், மாநில அளவில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு இந்தப் பள்ளியின் மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருக்குறள் அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 மரங்கள் நடப்பட்டன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...