அரசின்
நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப்
பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வித்துறை
நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கலையரங்கில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முரளி வரவேற்று பேசினார்.
மாநாட்டில் தமிழ்நாடு அரசு அலுவலர் கழக ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு மாநிலத் தலைவர் சவுந்திரராஜன், பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் பால்ராஜ், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரபிரசாத், மாநிலப் பொருளாளர் அதிகமான்முத்து, மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன், மாநில கவுரவத் தலைவர் மதியழகன் மற்றும் மாநில பிரச்சார செயலாளர் நீதிமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
பணியிடங்கள் வழங்க வேண்டும்
மாநாட்டில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகமதுபாஷா, ஓசூர் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்று அரசுப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
மாநாட்டில், இணை இயக்குனர்களுக்கு நேர்முக உதவியாளர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு என இணை இயக்குனர், துணை இயக்குனர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) என்ற பணியிடத்தினை அமைச்சுப் பணியாளர்களுக்கு என உருவாக்கிட வேண்டும். அரசுத் தேர்வுத்துறையில் நடத்தப்படும் தேர்வுகளை ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி அத்துறையின் பணியாளர்களை கொண்டு நடத்துதல் வேண்டும்.
கல்வித்துறையில் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்டம் வாரியாக தனி பிரிவு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வின் போது பாதிக்கப்பட்ட அலுவலக பணியாளர்களுக்கு சட்ட ரீதியாகவும், சங்க ரீதியாகவும் விரைவாக தீர்வு கண்டு மீண்டும் பணியமர்த்திட நடவடிக்கை மேற்கொண்ட மாநில மையத்திற்கு மாநாட்டின் வாயிலாக நன்றியை தெரிவித்து கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...