ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும்
வகையில்அதிக அளவு வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் ‘மேகி நூடுல்ஸ்’ ன்
விற்பனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில் மேலும் பல
பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை வரும் நிலை
உருவாகி உள்ளது.
‘ருசியானது, ஆரோக்கியமானது’ என்று மேகி தன்னை
விளம்பரப்படுத்திக் கொண்டாலும், பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்ட
ரெடிமேட் நூடுல்ஸ் உணவு வகைகள் என்றுமே உடல் நலத்திற்கு நல்லதல்ல. கடந்த
வாரம் ‘மேகி நூடுல்ஸ்’ நாடு முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில்
அளவுக்கு அதிகமான காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளுக்கோனேட் போன்ற வேதிப்
பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவை தலைவலி, இதய படபடப்பு, நெஞ்சு வலி,
குமட்டல், நரம்பு மண்டல பாதிப்பு, பசியின்மை போன்ற பக்க விளைவுகளை
ஏற்படுத்தக் கூடியவை என்பதால். நாடு முழுவதும் உள்ள கடைகளில் மேகி நூடுல்ஸ்
விற்பனை தடை செய்யப்பட்டது.
ஆனால், காரீயம் மற்றும் எம்.எஸ்.ஜி மட்டும்
மேகியில் பிரச்சனையாக இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது. 2012ல்
டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் தந்துள்ள
தகவலின் படி ‘மேகி நூடுல்ஸ்’ போன்ற உணவு வகைகளில் அதிக அளவு உப்பும்,
குறைந்த அளவு நார்ச்சத்தும், கார்போஹைரேட்டும் இருப்பதால் உடல் பருமன்
ஆவதோடு நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும் என்று சொல்கிறது.
மேகி நூடுல்ஸ் மட்டுமில்லாமல் பல வகையான உணவுப்
பொருட்களின் தரமும் ஆராயப்பட வேண்டியவையாக இருக்கின்றன. பெரும்பாலான
மக்கள் லேபல்களை ஆராய்ந்து அவற்றில் என்ன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன
என்பதை கவனிப்பது இல்லை. மொறு மொறு பிஸ்கட்டுகளையும் சிப்ஸ்களையும்
வாங்கும் மக்கள், அதற்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து மிகுந்த வேதிப்
பொருட்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேகி போன்று மற்ற ‘பாஸ்ட் புட்’ வகைகளில்
சோடியம் அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ரத்த
அழுத்தத்தை அதிகரிக்கக் கூடியது. ‘பாஸ்ட் புட்’ தயாரிப்புகள் பல வேதி
செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தானியங்கள் பாலிஷ் செய்யப்படுவதால், அவை
இயற்கை தன்மையை இழந்து ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. கேக்குகள்,
பிஸ்கட்டுகள், தானியங்கள் மற்றும் பல ஸ்நாக்ஸ்கள் இந்த வகையில் அடங்கும்.
தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள்:
பி.எச்.ஏ (புடிலேடட் ஹைட்ராக்ஸிஅனிசோல்): இது
உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் நீடித்து வருவதற்காக கலக்கப்படும் வேதிப்
பொருள். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக் கூடியது. உருளைக்
கிழங்கு சிப்ஸ், சூயிங் கம், பாஸ்ட் புட் செரியல்ஸ் வகைகளில்
கலக்கப்படுகிறது.
சோடியம் நைட்ரேட்: உணவுக்கு நிறம் ஊட்டவும்,
சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும்
மாமிசம் பதப்படுத்தப் பயன்படுகிறது. வயிற்று வலி, மூளை மற்றும் சிறுநீரக
புற்று நோய், தலை வலி, வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். எனவே,
பதப்படுத்தப்பட்ட மாமிசங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
செயற்கை வண்ணம் மற்றும் வாசனைப் பொருட்கள்:
சிப்ஸ், குக்கிஸ் போன்ற பேக்கிங் உணவு வகைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது.
ஒவ்வாமை, கிறுகிறுப்பு போன்ற விளைவுகள் ஏற்படும். பிரிலியண்ட் ப்ளு,
டார்ட்ரஜைன், சன்செட் மஞ்சள் போன்ற செயற்கை நிறங்கள் அதிக பாதிப்புகளை
ஏற்படுத்தும்.
கலப்பான்கள்: இவை ஐஸ்கிரீம்கள், பிஸ்கட்கள்,
ரொட்டி தயாரிப்புகளில் அதிகம் பயன்படுகின்றன. அதிகம் உட்கொள்ளும் போது
குடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது.
மோனோ சோடியம் குளுடமேட்: குளுடாமிக் அமினோ
அமிலத்தின் சோடியம் உப்பான இது நூடுல்ஸ், சிப்ஸ், ஸ்நாக்ஸ் உணவுத்
தயாரிப்பில் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இதனால் தலைவலி, இதய
படபடப்பு, நெஞ்சு வலி, மூளை மற்றும் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...