அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகக் கல்வியியல் கல்வித் துறைத் தலைவர்
டெபோரா லோவன்பர்க் பால் சிறந்த கல்வி நிபுணர். ஆசிரியர் கல்வியியல்
கல்லூரிகளில் பெறும் பயிற்சியைவிட, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும்
பயிற்சியைத்தான் அதிகம் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார். ஆசிரியராக
வேலைக்குச் சேர்ந்தவுடன் அவர்கள் சிறப்பாகப் பணிபுரிய பயிற்சித் திட்டம்
எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து ஒரு பாடத்திட்டத்தை அவர்
வகுத்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் செய்துள்ள இன்னொரு செயலும் பாராட்டுக்கும் கவனத்துக்கும்
உரியது. கிண்டர் கார்டன் முதல் பிளஸ் டு வரை பாடம் கற்றுத்தரும்
ஆசிரியர்களை எப்படி மதிப்பிடுவது, நன்றாக கற்றுத் தருகிறவர்களை எப்படி
ஊக்குவிப்பது, மற்றவர்களை எப்படிப் பணியிலிருந்து நீக்குவது என்பதே
விவாதமாகிக்கொண்டிருக்கிற நிலையில், அவருடைய வித்தியாசமான அணுகுமுறை
வரவேற்கப்பட வேண்டியது.
நியூயார்க் ஆளுநரின் முடிவு
நியூயார்க் மாகாணத்தில் கல்வித்தர விவாதம் மிகவும் சூடேறிவிட்டது. ஆசிரியரை
மதிப்பிட, அவரிடத்தில் படிக்கும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை 50%-க்கு
கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ
சட்டமே இயற்றிவிட்டார். இதற்கு முன்னால், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை,
20% மதிப்புக்கு மட்டுமே கவனத்தில் கொண்டார்கள். “தங்களை மதிப்பிட ஆளுநர்
வகுத்துள்ள இந்த வழிமுறை மிகவும் நியாயமற்றது, தங்களைத் தேவையின்றி
தண்டிப்பதற்கே வழிவகுக்கும்” என்று அனைத்து ஆசிரியர்களும்
கொதித்தெழுந்தனர். பெற்றோர்களும் அதில் உள்ள நியாயத்தை ஆதரித்தனர்.
இதையடுத்து 1,65,000 மாணவர்களும் ஆசிரியர்களுடன் சேர்ந்து, இந்த ஆண்டுக்கான
தரப்படுத்தல் தேர்வுகளைப் புறக்கணித்தனர்.
“ஆசிரியர்கள் மதித்து நம்பிக்கை வைக்கும் விதம் எதுவோ, அந்த வகையில்தான்
ஆசிரியர்களை மதிப்பிட வேண்டும்” என்கிறார் ‘பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ்
அறக்கட்டளை’ கல்வி நிறுவனத்தின் இயக்குநரான விக்கி பிலிப்ஸ். மாணவர்கள்
பெறும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து தங்களை மதிப்பிடுவது பெருந்தண்டனை
என்றே ஆசிரியர்கள் கருதுகின்றனர். அரசியல் தலைவர்களோ, “பாடம் எப்படி
நடத்தப்படுகிறதோ அதைப் பொருத்துதானே மாணவர்களின் மதிப்பெண்ணும் இருக்கும்”
என்கின்றனர்.
பழைய மதிப்பீட்டு முறையில் 96% ஆசிரியர்கள் தரமான ஆசிரியர்களாகிவிட்டதை
ஆளுநர் குவாமோ சுட்டிக்காட்டுகிறார். “இவ்வளவு ‘தரமான’ஆசிரியர்களிடம்
படிக்கும் மாணவர்கள் மட்டும் ஏன் பொதுத் தேர்வுகளில் மிகக் குறைந்த
மதிப்பெண்களைப் பெறுகிறார்கள், கல்வியில் பின் தங்கியிருக்கிறார்கள்?”
என்று கேட்கிறார். இப்படிக் கேட்பதாலேயே ஆசிரியர்கள் புதிய மதிப்பீட்டு
முறையை ஏற்றுக்கொண்டுவிட மாட்டார்கள்.
மிச்சிகன் காட்டிய வழி
2011-ல் மிச்சிகன் மாகாணம் ஒரு சட்டத்தை இயற்றியது. கற்பிக்கும் திறனற்ற
ஆசிரியர்களைப் பணியிலிருந்து நீக்குவதை அது எளிதாக்கியது. அதே வேளையில்,
கல்வியின் தரத்தை உயர்த்த டெபோரா லோவன்பர்க் பால் தலைமையில் ஒரு குழுவையும்
நியமித்தது. மாகாணம் முழுவதும் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்று
மதிப்பிட்டு அரசுக்கு அறிக்கை தரவேண்டும் என்று குழுவிடம்
கேட்டுக்கொள்ளப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழு பரிந்துரைகளை அளித்தது.
அந்தக் குழுவின் அறிக்கை வாசகங்கள் நல்ல நடை யில் தயாரிக்கப்பட்டிருந்தன.
ஆசிரியர்களை எதிரிகளாகக் கருதி, அவர்களைக் கடுமையாக நிந்திக்கும் போக்கு
அதில் அறவே இல்லை. சரியாக சொல்லித்தராத ஆசிரியர் களை அடையாளம் கண்டு
அவர்களைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறுவதற்குப் பதிலாக,
அனைத்து ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த வழிகாண வேண்டும் என்றது.
தண்டிப்பதைவிட கற்றுத்தந்து நல்ல பயிற்சியளிப்பதே சிறந்தது என்று
வலியுறுத்தியது.
அரசியல்வாதிகள் இதை ஏற்க மறுக்கலாம். பள்ளிக்கூடங்கள் மேம்பட வேண்டும்
என்றால் ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் வசதிகளைச் செய்துகொடுத்து,
அவர்களுக்குப் பயிற்சியை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான்
பள்ளிக்கல்வியின் தரம் உயரும். பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களுக்குப்
புரிகிற வழியில் எளிமையாக எப்படிக் கற்றுத்தரலாம் என்று அறிவதில்தான்
ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய ஆலோசனைகள், வழிகாட்டல்கள்
கிடைப்பதில்லை. எப்படிச் செயல்படுகிறார்கள், எப்படிப் பாடம்
நடத்துகிறார்கள், எந்தவிதங்களில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற
ஆலோசனைகளைப் பெறத்தான் விரும்புகிறார்கள். இந்த மதிப்பிடல்களின் நோக்கம்
மோசமான ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்புவதல்ல, மேம்படுத்துவது. அப்படியும்
சிலரால் மேம்பட முடியவில்லை என்றால், அவர்களை இந்த ஏற்பாடுகளே
நீக்கிவிடும்.
இரு முக்கிய அம்சங்கள்
மிச்சிகன் மாகாணத்தின் நடவடிக்கையில் இரண்டு முக்கிய அம்சங்கள்
இருக்கின்றன. முதலாவது, ஆசிரியர் களைக் கூர்ந்து கவனிப்பது. பெரும்பாலான
பள்ளிக்கூடங் களில் ஆசிரியர்களைக் கவனித்து மதிப்பிடும் பணியைப் பள்ளி
முதல்வர்கள்தான் மேற்கொள்கின்றனர். அவர்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு
காரணமாக ஒரு சார்பாக கருத்து தெரிவிக்கவும் இடமிருக்கிறது. ஆனால்,
இதற்கென்றே தயாரிக்கப்படும் ‘பார்வையாளர்கள்’ அப்பணியை நிறைவாகச் செய்து
முடிப்பார்கள். அவர்கள் தரும் தகவல்களைப் பெற்று ஆசிரியர்களுக்குத்
தெரிவித்து, அவர்களுடைய கற்பிக்கும் ஆற்றல் மேம்படுத்தப்படும். இரண்டாவது,
மாணவர்களின் கல்வி ஆற்றல் எப்படி வளர்ந்திருக்கிறது என்று மதிப்பிடப்படும்.
நாலாவது வகுப்பு படிக்கும் ஜானி, தனக்குரிய பாடப் புத்தகங்களை எளிதாகப்
படித்துவிடுகிறானா என்று மட்டும் பார்க்காது. மூன்றாவது வகுப்பில்
படித்ததைவிட இப்போது எவ்வளவு முன்னேறியிருக்கிறான் என்றும் பார்க்கும்.
கற்றுக்கொள்ளும் திறன் அவனுள் எப்படி வளர்ந்திருக்கிறது என்று கவனிக்கும்.
இந்த ஆய்வுகள் நிச்சயமாக மாணவர்களுக்குப் பாடங்களில் தேர்வு வைப்பதன்
மூலம்தான் மேற்கொள்ளப்படும். ஆனால், அந்தத் தேர்வு மாதாந்திர, காலாண்டு,
அரையாண்டுத் தேர்வுகள்போல இருக்காது. இந்த ஆண்டு மாணவன் அறிந்துகொள்ள
வேண்டியவை என்ன என்ற நோக்கில் மட்டுமே தேர்வு இருக்கும்.
இதுவரை சொன்ன இந்தக் கதை சுபமாக முடிந்தது என்று கூறவே எனக்கும் விருப்பம்,
ஆனால் அப்படி முடியவில்லை. டெபோரா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை மாகாண
அரசு ஏற்கவில்லை. இதெல்லாம் வேண்டாம், உள்ளூர் கட்டுப்பாட்டிலேயே கல்வி
இருக்கட்டும் என்று கூறிவிட்டார், இதற்கான சட்டப்பேரவைக் குழுவின் தலைவர்
பில் பவ்லேவ். இது மிச்சிகன் மாகாணத்துக்கு ஏற்பட்ட இழப்பு. ஆனால், இதையே
வேறு மாகாணமோ, பிரதேசமோ ஏற்றுச் செயல்படுத்தினால் நன்மை அதற்கு.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...