சமையல் காஸ் மானிய தொகை, வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தும்
திட்டத்தில், 40 சதவீத வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள், எல்.பி.ஜி.,
சப்ளை கம்பெனிகளின் நெட்ஒர்க்கில் இணைக்கப்படாதது
தெரியவந்துள்ளது.கர்நாடகாவில், 85 லட்சம் எல்.பி.ஜி., வாடிக்கையாளர்கள்
உள்ளனர். ஏப்ரல் முதல், சிலிண்டருக்கான மானியத்தொகை, அவரவர்களின் வங்கி
கணக்கில் செலுத்தப்படுகிறது.
வரும், 30ம் தேதியுடன்,
வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க இறுதி நாள் என, எல்.பி.ஜி., சப்ளை
கம்பெனிகள் கெடு விதித்துள்ளன.இந்நிலையில், எச்.பி.சி., - ஐ.ஓ.சி., -
பி.பி.சி., கம்பெனிகளின் நெட்ஒர்க்கிற்கு, 34 லட்சம் வாடிக்கையாளர்கள்
வங்கி விவரங்களை தெரிவிக்கவில்லை. இன்னும் பலருக்கு ஆவணங்கள் கொடுத்தும்,
மானியத் தொகை கிடைக்கவில்லை.
மானியத் தொகை பற்றி, காஸ்
ஏஜன்சியிடம் கேட்டால், 'வாடிக்கையாளர்கள் தரும் தகவல்கள், ஆவணங்களை
கம்பெனிகளுக்கு அனுப்பி வைப்பது மட்டுமே எங்கள் வேலை. வாடிக்கையாளர்கள்
சரியான தகவல்களை தெரிவித்திருந்தால், 'லிங்க்' ஆகும்' என,
பதிலளிக்கின்றனர்.
எல்.பி.ஜி., சப்ளை கம்பெனிகள் கூறுகையில்,
'பெரும்பாலான வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இல்லை.
விண்ணப்ப படிவத்தில், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., கோட்
குறிப்பிடப்படுவதில்லை. இதுவே பிரச்னைக்கு காரணம்' என்கின்றனர்.
சில
இடங்களில் சிலிண்டரை வீட்டுக்கு எடுத்து வருபவர்களே, விண்ணப்ப படிவங்களை
வாங்கி, வங்கி விவரங்களை பெற்று செல்கின்றனர். காஸ் ஏஜன்சி மற்றும்
வங்கிக்கு ஒரே நேரத்தில் தனித்தனி விண்ணப்ப படிவம் கொடுக்க வேண்டும் என்பது
தெரியாததால், எல்.பி.ஜி., மானியத் தொகை பெறுவதில் குழப்பம் நேரிடுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...