இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில்
(ஐ.ஐ.டி.) பயில்வதற்கான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. தேர்வில், நெய்வேலி ஜவகர்
மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனமும்,
தெலுங்கு கலா சமிதியும் இணைந்து மத்திய பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும்
ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளியை நடத்தி வருகின்றன. இப் பள்ளியில் பயிலும்
மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு
ஒருங்கிணைந்த முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வோர்
ஆண்டும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு இந்திய தொழில்நுட்பக்
கல்வி நிலையங்களில் பயில இடம் பெறுகின்றனர்.
தமிழகத்தில் முதலிடம்: இப்பள்ளியில்
2007-ஆம் ஆண்டு முதல் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்து வெளியேறிய மொத்த
மாணவர்கள் 355 பேரில் 284 பேர் ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில்
பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பள்ளியும்
இதுபோன்ற சாதனையை செய்ததில்லை.
சிறப்பு நிபுணர்கள்: ஐ.ஐ.டி. நுழைவுத்
தேர்வுக்குப் பயிற்றுவிக்கும் சிறப்பு அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்தப்
பள்ளியில் பணியாற்றுகின்றனர். புதுதில்லி, விஜயவாடா, கோட்டா, ஹைதராபாத்
ஆகிய நகரங்களிலிருந்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்கான நிபுணர்கள்
வந்து பயிற்சி அளிக்கின்றனர். மேலும், இப்பள்ளி மாணவர்கள், தங்களது பாடம்
சார்ந்த சந்தேகங்களை காணொலிக் காட்சி மூலம், நாட்டின் தலைசிறந்த
நிபுணர்களுடன் உரையாடி விளக்கம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு பிரபல கல்வி நிறுவனங்கள் வழங்கும்
பாடக்குறிப்புகள் பயன்படுத்தப்படுவதுடன், நுழைவுத் தேர்வுக்கு முந்தைய
நிலையில், மாணவர்களுக்கு புத்துணர்வு வழங்கும் வகையில் தேசிய அளவில்
சிறந்து விளங்கும் நிபுணர்களைக் கொண்டு இறுதிக்கட்ட அதிவிரைவு திருப்புதல்
பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இரண்டு கட்டத்தேர்வு: ஐ.ஐ.டி.யில்
மாணவர்களைத் தேர்வு செய்ய இரண்டு கட்ட தேர்வுமுறை கடந்த ஆண்டு முதல்
அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத்தேர்வு 4.4.2015-ல்
நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 லட்சம் மாணவர்கள்
கலந்துகொள்ள, சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வுபெற்றனர்.
இதில், நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் 68
பேர் தேர்வு எழுதினர். 51 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இறுதிக்கட்டத்
தேர்வு மே 24-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் நெய்வேலி ஜவகர் பள்ளி
மாணவர்கள் 21 பேர் வெற்றிபெற்று ஐ.ஐ.டி.யில் பயிலத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் 5:2 என்ற சதவிகிதத்தில் தேர்வு பெற்றுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
பாராட்டு விழா: ஐ.ஐ.டி.யில் பயில தேர்வு
பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நெய்வேலி, தெலுங்கு கலா சமிதியில்
சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற
என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன், தகுதி பெற்ற அனைத்து மாணவர்களையும்
பாராட்டினார்.
மேலும், ஜவகர் பள்ளியின் முதல்வர்
என்.யசோதா, துணை முதல்வர் எம்.சேதுமணி, ஆசிரியர்கள், நெய்வேலி தெலுங்கு கலா
சமிதியின் பொறுப்பாளர்கள், மாணவர்களுக்கு காணொலிக்காட்சி வசதி செய்து
தரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த "ஆல்டிட்யூட் கிளாஸஸ்' நிறுவனத்தின் பிரதிநிதி
சந்திரசேகர் ஆகியோரையும் பி.சுரேந்திரமோகன் பாராட்டினார்.
WHY NOT OTHER SCHOOLS FOLLOW THIS?
ReplyDelete