இந்த ஆண்டு முதல் 2 வருட பி.எட். படிப்பு அமல்படுத்தப்படுகிறது. இனிமேல்மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று 100 நாட்கள் செயல்முறை பயிற்சி பெறவேண்டும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2 வருட பி.எட். படிப்பு
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள்(பி.எட். கல்லூரி) உள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகள் 14 இருக்கின்றன. சுயநிதி கல்லூரிகள் 669 உள்ளன. இந்த கல்லூரிகளில் இதுவரை பி.எட். படிப்பு காலம் ஒரு வருடம் மட்டுமே இருந்தன. மத்திய அரசு கடந்த வருடம் பி.எட். படிப்பின் காலத்தை 2 வருடமாக உயர்த்தி உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தனியார் பி.எட். கல்லூரிகள் நீதிமன்றத்தை நாடின. இருப்பினும் 2 வருடம் பி.எட். கல்வியை அமல்படுத்த அனைத்து ஆயத்த பணிகளையும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் செய்து வந்தது.
இந்த நிலையில் பி.எட். படிப்பை 2 வருடமாக மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எற்கனவே 2 வருட பி.எட். படிப்புக்காக புத்தகங்களை தயாரிக்க பாடத்திட்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டு இருந்தது.
பாடத்திட்டம் வெளியிடப்படும்
தற்போது பாடத்திட்டம் எழுதும் பணி முடிந்து பல்கலைக்கழக கல்விக்குழு அனுமதியும் வழங்கி விட்டது. அந்த பாடத்திட்டம் 4 நாட்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் அனைத்து பி.எட். கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
அந்த பாடத்திட்டத்தின் படி அவர்கள் புத்தகத்தை தயாரித்துகொள்வார்கள். பி.எட். கல்லூரியில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பணிக்கு சென்று விடுகிறார்கள். அதனால் தான் வேலைவாய்ப்புக்கான பிரிவு பி.எட். கல்லூரிகளில் இல்லை.
செயல் முறை பயிற்சி 100 நாட்கள்
பி.எட். படிக்கும்போதே கம்ப்யூட்டர் கல்வி, இசை, சுகாதார கல்வி போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இனிமேல் இதுபோன்ற உப படிப்புகள் அதிகரிக்கப்படும். இந்த காலத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் பிரகாசிக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவர்களுக்கு நன்றாக கற்பிக்க முடியும்.
பள்ளிக்கூடங்களுக்கு சென்று வகுப்புகளில் ஆசிரியர்களை போல பாடம் கற்பிக்கும் செய்முறை பயிற்சியும் இப்போது அதிகரிக்கப்பட்டுவிட்டது. முன்பு 40 நாட்கள்தான் இருந்தது. அது இனிமேல் 100 நாட்கள் ஆக அதிகரிக்கப்படுகிறது. இனிமேல் பி.எட். படிப்புக்கு முதலாம் ஆண்டு 9 புத்தகங்களும் 2-ம் ஆண்டு 7 புத்தகங்களும் படிக்கவேண்டும். படிப்பதற்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். அதுபோல கூடுதலான பாடத்தை, உதாரணமாக கம்ப்யூட்டர் படித்தால் அதற்கென தனி கிரேடு வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த படிப்பு
இந்த 2 வருட பி.எட். படிப்பு 2015-1016 கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். 2016-2017-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பும். எம்.எஸ்.சி., எம்.எட். படிப்பும் கொண்டு வரப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...