11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் ஒன் வகுப்பு நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுவிடுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாடநூல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புத்தக கடைகளிலோ சென்னை டிபிஐ-யில் உள்ள பாடநூல் கழக விற்பனை மையத்திலோ வாங்கியாக வேண்டும்
இதை கருத்தில்கொண்டு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை பாடநூல் கழக கிட்டங்கியில் மொத்தமாக வாங்குமாறு அறிவுறுத்தப்படுவது வழக்கம். அதன்படி புத்தகங்கள் வாங்கப்பட்டாலும் ஒருசில பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் வெளியில்தான் புத்தகங்களை வாங்க வேண்டியுள்ளது.
தற்போது டிபிஐ வளாகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 உள்ளிட்ட பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், 11-ம் வகுப்பு புத்தகங்கள் விற்பனை செய்யப்படவில்லை. இதனால், 11-ம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதற்கு டிபிஐ வளாகத்துக்கு வரும் பெற்றோர் ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள். நேற்றும் ஒருசில பெற்றோர் 11-ம் வகுப்பு புத்தகம் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
இதற்கிடையே, இந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ஆன்லைனில் முன்பதிவுசெய்து பெற்றுக்கொள்ளுமாறும், இதர மாவட்டங்களில் பாடநூல் கழக மண்டல அலுவலகத்தில் உரிய கட்டணத்தை டிமாண்ட் டிராப்டாக செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
11-ம் வகுப்பு புத்தக தட்டுப்பாடு குறித்து பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக விற்பனைப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆன்லைனில் முன்பதிவு செய்து பல தனியார் பள்ளிகள் புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். ஆன்லைன் புக்கிங் மூலமாக புத்தக விற்பனை நடக்கும்போது புத்தக விற்பனை கவுன்ட்டரில் புத்தகங்கள் விற்பனை செய்தால் எங்கு வாங்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படலாம். அதைக் கருத்தில்கொண்டே தற்போது 11-ம் வகுப்பு புத்தகங்கள் விற்பனை செய்யப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, அங்கீகரிக்கப் பட்ட புத்தக கடைகளில் பாடப்புத்தகங்கள் எதுவும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இதுவரையில் புத்தகங்கள் வாங்காதவர்கள், புத்தகத்தை தவறவிட்டவர்கள் வெளியே கடைகளில் புத்தகம் வாங்க இயலாமல் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பாடநூல் கழகத்தினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...