உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’
என்று பெண்களைத் தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள்
தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக
அளவில் ஆளாகிறார்கள்.
அதிக உடல் வலிமை கொண்டவர்களாகக் கருதப்படும்
ஆண்களுக்கு ஏன் இந்த நிலை? உடல்ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்
எவை? அவற்றுக்கான தீர்வுகள் என்ன?
ஆண், பெண் என பாலினம் வேறுபடுவதே நம் உடலில்
உள்ள குரோமோசோம்களில்தான். பெண்கள் எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம் வகையையும்
ஆண்கள் எக்ஸ் ஒய் (XY) குரோமோசோம் வகையையும் சேர்ந்தவர்கள். ஒரே இன
குரோமோசோம் வகையைக் கொண்ட பெண்கள், இயற்கையிலேயே ஆண்களைவிட அதிக வலிமை
உடையவர்கள். இதனால்தான், ஆண்களை நோய்கள் எளிதில் தாக்குகின்றன. தவிர,
மருத்துவ, சமூகரீதியான காரணங்களும் உண்டு. மன நலம் சார்ந்த பிரச்னைகளும்
பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். உலக அளவில் தற்கொலை செய்துகொள்வதும் அதிகம்
ஆண்களே!
பதற்றமடையவைக்கும் பருவ வயது!
ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக
ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக, பருவ வயதில் ஆண், பெண்
இருவருமே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கின்றனர். பெண்கள் வயதுக்குவந்து
விட்டால், அம்மாவோ, உறவினர்களோ அவர்களுடைய பாலியல் சந்தேகங்களை
மேம்போக்காகத் தீர்த்துவைக்கின்றனர். ஆனால், பருவ வயதை எட்டும் ஆண்கள்,
பாலியல் விஷயங்களை, நண்பர்களின் மூலம் அரைகுறையாகத் தெரிந்துகொள்வதால்,
பாலியல் பற்றிய தவறான புரிதலை கொண்டிருக்கின்றனர்.
இந்த வயதில், இளம்பெண்களைக் கண்டால் ஒருவித
ஈர்ப்புவரும். இதை காதல் என்று நினைத்து, மாணவப் பருவத்திலேயே,
வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். இந்தத் தருணத்தில், குடும்பம், நண்பர்கள்
சரியாக அமையாதபட்சத்தில் கடுங்கோபம், விரக்தி, தன்னைப் பற்றிய அதீத சுய
மதிப்பீடு ஆகியவை அதிகரிக்கிறது. இதனால், திருட்டு, வன்முறை, கொள்ளை,
பாலியல் வன்புணர்வு எனத் தவறான திசையில் பயணிக்க நேரிடும். உலகம் முழுவதும்
கடந்த சில ஆண்டுகளாக மைனர் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும்,
தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி இருப்பதும் இதற்கு சாட்சி.
பாலியல் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்க
யாரும் இல்லாமல் ஆண்கள் தடுமாறுகிறார்கள். அழகான பெண்களைப் பார்க்கும்போது,
புத்தகங்கள், வலைத்தளம், திரைப் படங்கள் மூலமாக மனிதர்களின் அந்தரங்க
உறுப்புகளைப் பார்க்கும் போது, இயல்பாகவே ஆண்களின் உடலில் ஹார்மோன்
வேகமாகச் சுரக்கும். இதனால் ஆண்களின் உறுப்புகள் எழுச்சியுறும்.
சிந்தனைகள் காமம் சார்ந்ததாக மட்டுமே
இருக்கும். தன் உடல், தன் அந்தரங்க உறுப்பில் விந்து வெளியேறுவதில் வரும்
சந்தேகங்கள், முறையான சுய இன்பம் பற்றிய கேள்விகள் என ஆண்களின் டீன் ஏஜ்
பருவம் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது.
இதை எப்படி சரிப்படுத்துவது, கடந்து வருவது,
இயல்பாக எடுத்துக்கொள்வது என்பது பற்றிய முறையான பாலியல் கல்வி தேவை.
தற்போதைய சூழ்நிலையில் நகரத்தில் வாழும் ஆண்களுக்கு 60 – 65 சதவிகிதம்
மட்டுமே விந்தணுக்களில் அடர்த்தி இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையும்
குறைவாக இருக்கிறது. மேலும் உடலுறவின்போது இயலாமையின் காரணமாக
முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
சரியான வழிகாட்டுதல், புரிதல் இன்மையே இதற்குக் காரணம்.
ஆண்ட்ரோபாஸ் பருவம்!
பெண்களுக்கு மெனோபாஸ் போல 40 வயதை அடையும்போது
ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மிக முக்கியமான காலகட்டம்
இது. தனக்கு வயதாகிறதே என்ற கவலையோடு, குடும்பப் பொறுப்புகள் அதிகமாக
இருக்கும் நேரம் இது. தன் பேச்சைக் கேட்டுத்தான் மனைவி, குழந்தைகள்
செயல்படவேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். இந்த வயதில் அனைத்து
ஆண்களுக்கும், மீண்டும் பாலியல் ஆசைகள் துளிர்விடும். இது இயல்பானது. ‘இந்த
வயதில் இதெல்லாம் தேவையா?’ என மனைவி ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில்,
பக்குவமடையாத ஆண்களுக்குக் கோபம் வரும். பலர் தங்களது ஆசைகளை அடக்கினாலும்,
அது கோபமாக மாறி, வீட்டில் உள்ளவர்கள் மேல் பாயும். இந்த வயது ஆண்களுக்கு
அறிவுரைகள் கேட்கப் பிடிக்காது. காதல், இரண்டாம் திருமணம் என ஆண்கள்
வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்வது இந்தக் காலகட்டத்தில்தான்.
இளம் வயதில் இருந்தே கொடுக்கப்படும் முறையான
உடல், மன நலப் புரிதல்கள்தான் இந்தப் பிரச்னைகளை கடந்துவர உதவும்.
நாற்பதுகளில் வரும் பல்வேறு நோய்களுக்கு, மன அழுத்தம் முதல் காரணம்
என்பதைப் புரிந்துகொண்டு, மனதைப் பக்குவப் படுத்தினால் நாற்பது வயதிலும்
நலமாக வாழலாம்.
மனநலப் பிரச்னையா… பயப்பட வேண்டாம்!
ஆண் என்றால் அழக் கூடாது, வீரமாக இருக்க
வேண்டும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் எனத் தவறான எண்ணம் இருப்பதால்,
ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை. உணர்ச்சிகளைச்
சரியான விதத்தில் வெளிப்படுத்தாததுகூட மன அழுத்தத்துக்கு காரணமாகிவிடும்.
இதனால் வீடு மற்றும் ஆபீஸில் டென்ஷனுடன் இருப்பார்கள். மரியாதை,
அங்கீகாரம், பணம், புகழ் என ஏதாவது ஒன்றைக் காரணமாகவைத்து, மனதைக்
குழப்பிக்கொள்வார்கள். யாரிடமும் தன் பிரச்னையை வெளிப்படையாகச் சொல்லாமல்,
மனதுக்குள் மறுகுவார்கள். இதன் காரணமாக கிரிமினல் பழக்கங்கள், தற்கொலை
எண்ணங்கள் தலைதூக்குகின்றன.
மன அழுத்தம், கோபம் காரணமாகப் பெரும்பாலான
ஆண்கள் நிம்மதியாக இல்லை. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. வெளிப்படையான
பகிர்தல் இல்லாததே ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வருவதற்கு
காரணம். தியானம், யோகா என மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே ரத்த
அழுத்தப் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.
போதையா? ‘நோ’!
புகை பிடித்தல், மது, கஞ்சா, புகையிலை மற்றும்
பான்பராக் மெல்லுதல் எனப் போதைப் பழக்கத்தில் எதையாவது ஒன்றைக்கூட
கற்றுக்கொள்ளாத இளைஞர்களைக் காண்பது இன்று அரிது. இதனால் கல்லீரல் சிதைவு,
சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மாரடைப்பு, நரம்புத்தளர்ச்சி, இதயநோய்
என, வாழ ஆசைப்படும் காலத்தில் வலுக்கட்டாயமாக மரணத்தின் வாசலுக்கு
அழைத்துச் செல்கின்றன நோய்கள். காதல் தோல்வி, அலுவலக அவமானங்கள், உடல் வலி
என அனைத்துக்கும் மதுவை நாடினால் பிரச்னையில் இருந்து விடுபட முடியும்
என்றொரு தவறான நம்பிக்கை பல ஆண்களிடம் இருக்கிறது. மது அருந்தாதவர்களைக்
இளக்காரமாகப் பார்ப்பதும், அவர்களை அந்நியப்படுத்துவதுமான சம்பவங்கள் இன்று
பள்ளி, கல்லூரி இளைஞர்களிடம்கூட காண முடிகிறது. இதனால், சில ஆண்கள் தனக்கு
நாட்டமில்லை என்றாலும்கூட, மது அருந்தினால் மட்டுமே சமூகம் தன்னை
ஏற்றுக்கொள்ளும் என்ற அச்சத்தில் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.
தமிழகத்தில் ஆண்களில் 35 சதவிகிதம் பேருக்கு
இளம் வயதிலேயே கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள்
உறுதிப்படுத்துகின்றன. மது, உடல் நலத்தை மட்டுமின்றி, மன நலத்தையும்
பாதிக்கும். மேலும், மது அருந்துபவர்களின் விந்தணுக்கள் வீரியம் இழப்பதால்,
இல்லறத்திலும் பிரச்னை ஏற்படுகிறது.
பக்கவாதம்!
மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்படுவதன் காரணமாக
பக்கவாதம் வருகிறது. இந்த நோயும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் தாக்குகிறது.
புகைபிடிப்பது, உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள், உடல்பருமன், ரத்தத்தில்
கொழுப்பு அதிகம் சேருவது இவையே பக்கவாதம் வர காரணங்கள். இது பரம்பரையாக
அடுத்த தலைமுறையையும் தாக்கலாம். நம்முடைய மதுப் பழக்கத்துக்கு, அடுத்த
தலைமுறைகளும் பலியாக வேண்டுமா?
ஹார்ட் அட்டாக் எண்ணிக்கை கேட்டாலே ஹார்ட் அட்டாக் வரும்!
உலக அளவில் ஆண்கள் மரணத்துக்கு அதிகம் காரணமாய்
இருப்பது மாரடைப்புதான். புகைபிடிப்பது, மது அருந்துவது, கொழுப்புச்
சத்துள்ள உணவை அதிகம் எடுத்துக்கொள்வது, உடல் எடையை கவனிக்காமல் இருப்பது,
சர்க்கரையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது, உயர் ரத்த அழுத்தம் போன்றவையே
மாரடைப்புக்கு முக்கியமான காரணங்கள்.
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பதன் காரணமாக,
மாதவிடாய் நிற்கும் வரை இதய நோய்கள் வருவது இல்லை. ரத்தக்குழாயில் கொழுப்பு
சேருவதை ஈஸ்ட்ரோஜென் தடுக்கிறது. ஆனால் ஆண்களுக்கு ஹார்மோன்கள்ரீதியாக
இயற்கையான பாதுகாப்பு கிடையாது. மேலும், உலகம் முழுவதும் 5 சதவிகிதம்
ஆண்கள் எவ்விதத் தவறான பழக்கவழக்கங்கள் இல்லையென்றாலும் மன அழுத்தத்தின்
காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கிறார்கள்.
‘டயட்’ கடைப்பிடி… டயாபடீஸை விரட்டு!
சர்க்கரை நோயிலும் ஆண்களுக்கே முதலிடம்.
சிறுவயதில் இருந்தே முறையான சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது,
உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம், போதைப் பழக்கம் காரணமாக இன்றைக்கு 25
வயதிலேயே சர்க்கரை நோய் வந்து விடுகிறது. ஒருமுறை சர்க்கரை நோய்
வந்துவிட்டால் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வாழ்நாள் முழுவதும் போராட
வேண்டியிருக்கும். சர்க்கரை நோயைக் குணமாக்க முடியாது ஆனால் கட்டுப்படுத்த
முடியும். எனவே சர்க்கரை நோய் குறித்த விழிப்பு உணர்வு ஆண்களுக்கு அவசியம்
தேவை.
‘‘ஆம்பிளைப் பிள்ளை நல்லா சாப்பிடட்டும்’’ என
சிறு வயதில் கொழுப்புச்சத்துள்ள உணவை அதிக அளவில் ஊட்டி வளர்க்கின்றனர்.
இதனால் உடல்பருமன் அதிகமாகி பின்னால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
60 வயதைத் தாண்டினால் ப்ராஸ்டேட் கேன்சர் அபாயம்!
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான ப்ராஸ்டேட்,
சிறுநீர் பைக்குக் கீழே அமைந்துள்ளது. வயது அதிகரிக்கும்போது இது பெரிதாகி,
சிறுநீர் செல்லும் குழாயை அடைத்துப் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதேபோல
ப்ராஸ்டேட் புற்றுநோயும் ஏற்படலாம். இந்தியாவில் ஆண்கள் இந்த நோயால்
பாதிக்கப்பட்டாலும் இது பற்றிய போதிய விழிப்பு உணர்வு இல்லாததாலும்,
மற்றவர்களிடம் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டும் மருத்துவமனைக்கு வருவதில்லை.
இந்த புற்றுநோய் ஏன் வருகிறது எனத் தெளிவான
முடிவுகள் இல்லை. சில ஆய்வுகள் வைட்டமின்-டி குறைபாடு காரணமாக அதிகப்படியான
கால்சியம், உடலில் தங்குவதால் இந்த நோய் வரலாம் எனத் தெரிவிக்கின்றன.
சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல்,
சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகம் இருத்தல் போன்றவை புராஸ்டேட்
புற்றுநோயின் அறிகுறிகள். இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள எந்த
வழியும் கிடையாது. சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பது போல தோன்றினால்,
மருத்துவரை சந்தித்து பி.எஸ்.ஏ (PSA – Prostate Specific Antigen) பரிசோதனை
செய்து கொள்ளவேண்டும். அதன் முடிவுகளை வைத்து பிறகு, பயாப்சி பரிசோதனைக்கு
உட்படுத்தி புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறிய முடியும்.
ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கு, இரண்டு வகையான
சிகிச்சைகள் உண்டு. ஹார்மோன் சென்சிடிவ் டைப் மற்றும் ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ்
டைப். ஹார்மோன் சென்சிடிவ் டைப்பில் விரைகளை நீக்கி ஆண்களுக்குச்
சுரக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்நாளை
15-20 வருடங்கள் நீட்டிக்க முடியும். ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் வகையில்,
சிகிச்சைகள் அளித்தாலும் பலனளிக்காது. அவர்களுக்கு வாழ்நாள் அளவு குறைவு
என்பது வருத்தத்துக்குரியது. புகையிலை காரணமாக சுவாசப் புற்றுநோய், வாய்ப்
புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஃபாஸ்ட் புட் உணவுகளால் பெருங்குடல் பகுதியில்
புற்றுநோய் வருகிறது. மது அருந்துவதால் கல்லீரல், உணவுக்குழாய்
புற்றுநோய்கள் ஆண்களையே அதிகம் தாக்குகின்றன.
புதிரான விஷயங்களைப் பற்றிய புரிதல் அவசியம்!
ஆண்கள், பெண்கள் இருவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
பீட்சா, பர்கர், சாட் அயிட்டங்கள்
சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஏதேனும் ஒரு
விளையாட்டில் தேர்ச்சியடைந்து, தினமும் பயிற்சி எடுத்துவந்தால் சர்க்கரை
நோயில் இருந்து தப்பிக்க முடியும்.
மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா போன்ற
பயிற்சிகளை செய்வதன் மூலம்மும், பிரச்னைகளை பாசிட்டிவாக அணுகுவதற்கும்
கற்றுக்கொள்வதன் மூலமும் மனரீதியான பாதிப்பிலிருந்து மீளலாம்.
பாலியல் கல்வி, அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக
வைத்துக்கொள்வது போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களின் உறுப்புகள்,
மாதவிடாய் பிரச்னைகள், பெண்களிடம் பழகும் விதம், சக நண்பர்களாக பாவிக்கும்
பக்குவம் இவற்றை, சிறுவயதில் இருந்தே ஆண்களுக்கு கற்றுத்தருவது அவசியம்.
ஆண்களுக்குப் பாலியல் கல்வி பற்றி பெற்றோர்கள்,
ஆசிரியர்கள் சொல்லித்தருவதைக் காட்டிலும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு
கவுன்சலிங் கொடுக்க, ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தனி மனநல நிபுணரை
நிர்ணயிக்க வேண்டும். .
நாற்பதைக் கடக்கையில், என்னென்ன பிரச்னைகள்
வரும், அவற்றை எதிர்கொள்ள நாம் எவ்வாறு தயார் ஆக வேண்டும், அவற்றை எப்படி
எதிர்கொண்டு, வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற புரிதல்
ஆண்களுக்கு அவசியம்.
மதுவை விரும்பும் நேரத்தில் மனதைக் கட்டுப்படுத்த, மருத்துவர்கள் ஆலோசனையை பெற்று மதுவில் இருந்து விடுபட வேண்டும்.
ஓர் ஆணின் ஆண்தன்மை என்பது குழந்தை
பெற்றுக்கொள்வது மட்டுமே அல்ல என்பதைப் புரியவைத்து, திருமணத்துக்கு
முன்பு, தாம்பத்யம் குறித்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.
– டாக்டர் எழிலன், பொதுமருத்துவர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...