சான்றிதழ்கள் சரியாகப் பதிவேற்றம் ஆகாததால் தேர்வு எழுத அனுமதி
மறுக்கப்பட்டவர்களை, தேர்வு எழுத அனுமதிக்குமாறு தமிழ்நாடு சீருடைப்
பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவல் துறையில் உள்ள 1,078 காவல்
உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை அண்மையில் அறிவித்தது.
இதில் பொது ஒதுக்கீடுதாரர்களுக்கான தேர்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.
இதில், சில காரணங்களுக்காக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்களை தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி ராமநாதபுரத்தைச்
சேர்ந்த பிரபாகரன், நாகையைச் சேர்ந்த விவேக் ரவிராஜ், திருச்சி கமல் உள்பட
50-க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில்,
நாங்கள் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக இணையதளத்தில் விண்ணப்பித்தோம். இந்த
நிலையில் நாங்கள் தேர்வு எழுத நிராகரிக்கப்பட்டதாக தமிழ்நாடு சீருடைப்
பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்தது. அதற்கு விண்ணப்பத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் சரியாக இல்லையெனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தடையின்மைச் சான்றிதழ் இல்லை என்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.
எனவே உதவி ஆய்வாளர் தேர்வு எழுத எங்களை அனுமதிக்க வேண்டும் என மனுக்களில் கோரப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை
விசாரணை செய்த நீதிபதி, சான்றிதழ்கள், புகைப்படங்கள் பதிவேற்றம் ஆகாத
மனுதாரர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கு ஒரு மணி
நேரத்துக்கு முன்பு அவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டும். மேலும்
இந்த வழக்கு தொடர்பான விரிவான உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்படும் என
நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோன்று மாற்று பாலினத்தைச் சேர்ந்த பிரித்திகா யாசினிக்கும் தேர்வு எழுத
அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்கும் தேர்வு எழுத அனுமதி வழங்கி நீதிபதி
உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...