தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் வேறுபாடு
இல்லாத நிலை உருவாகியுள்ளது என்று சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா
கூறினார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோடை
விடுமுறையில் நடைபெற்ற யோகா, கராத்தே, தையல்-கூடை பின்னுதல், ஓவியம்
வரைதல்-வர்ணம் பூசுதல் ஆகிய பயிற்சி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை தொகுதி
சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாணடியன் தலைமையில்
நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கத்தின் பட்டயத் தலைவர்
என்.எஸ்.வேலாயுதம் முன்னிலை வகித்தார்.பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்
ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார்.
பயிற்சி முடித்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசை வழங்கி சிவகாசி
உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா சிறப்புரையாற்றினார். அப்போது அவர்
கூறியதாவது:
நான் அரசுப் பள்ளியில் செங்கல் தரையில் அமர்ந்துதான் படித்தேன்.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வரை தாய் மொழியான ஹிந்தியில் படித்தேன்.
பின்னர் ஆங்கிலத்தில் கல்லூரியில் படித்தேன். தற்போது உதவி ஆட்சியராக
பொறுப்பேற்று தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் படிப்பும்,
மொழி அறிவும் தொடர்ச்சியாக வாழ்க்கை முழுவதும் நடைபெற வேண்டும்.மாணவர்கள்
முக்கியமான மூன்று காரியத்தை மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.
பயிற்சி, பயிற்சி, பயிற்சி. இதற்கு மாற்றே கிடையாது. தற்போது இங்கு
தரப்பட்டுள்ள பயிற்சியை வீட்டில் போய் தொடர்ச்சியாக மாணவர்கள் கடைபிடிக்க
வேண்டும் என்றார் அவர்.
தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் பேசுகையில்:
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. இது தற்போது
வெளிவந்துள்ள அரசுப் பொதுத் தேர்வில் வெளிப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி
ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி, அரசுப் பள்ளியில் மாணவர்
சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் அளவிற்கு கூடுதலாக மாணவர்கள்
வாழ்க்கைக்கு பயனுள்ள திறமைகளை பள்ளியில் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள
வேண்டும் என்றார் அவர்.
விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை
ஒருங்கிணைத்து நடத்திய இப் பள்ளி ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜைப்
பாராட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில், சாதனையாளர்
மற்றும் நல்லாசிரியர் விருது-2015 வழங்கி, பட்டயத் தலைவர்
என்.எஸ்.வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினார். விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு
அரசுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் ஆ.காமராஜ், ஆசிரியை ச.பொன்மலர்
உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...