முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் (எம்.டி.எஸ்.) தலித் வகுப்பைச் சேர்ந்த
மாணவியை அனுமதிக்குமாறு, புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ
அறிவியல் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
இதுதொடர்பாக டாக்டர் பி.பிரியகார்டியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
மனு விவரம்:
நான் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ
அறிவியல் நிறுவனத்தில் முதுநிலைப் படிப்புக்காக (எம்.டி.எஸ்.) எங்கள்
சமுதாயத்துக்கு ஒரே ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் நான் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு எழுதினேன். அதில் 39.5
சதவீத மதிப்பெண் பெற்றேன். இந்த நிலையில், முதுநிலை பல் மருத்துவப்
படிப்பில் சேர்வதற்கு 40 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் சேர்க்கைக்கு
தகுதியானவர் எனக் கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். எனவே, பல்
மருத்துவ முதுநிலை படிப்பில் என்னை அனுமதிக்க அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட
வேண்டும் என மனுவில் கோரினார்.
மேலும், பல் மருத்துவ கலந்தாய்வில் தன்னை அனுமதிக்கக் கோரி இதற்கு முன் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் பிரியகார்டியாவை கலந்தாய்வில்
அனுமதித்தும், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த மனு விடுமுறை கால நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது பல் மருத்துவக் கவுன்சில் கடிதம் ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கு 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால்
மட்டுமே தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மனுதாரர் 39.5 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார். அதனால், முதுநிலை
பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அவருக்கு தகுதி இல்லை எனத்
தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
""எந்தவொரு தேர்விலும் 0.5 மதிப்பெண் பெற்றால் அதை 1 என முழுமையாகக்
கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில்
உத்தரவிட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும்
பொருந்தும். இதை எதிர் மனுதாரர்கள் கருத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்ற
உத்தரவை மீறியுள்ளனர்.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மனுதாரரை நிகழ் கல்வியாண்டில்
(2015-16) முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் (எம்.டி.எஸ்.) புதுச்சேரி
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனம் அனுமதிக்க
வேண்டும்'' என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...