பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல், கலை,
அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான தயாரிப்பு
வகுப்புகள் (பிரிட்ஜ் கோர்ஸ்) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 2015-16 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகளை முன்கூட்டியே அதாவது ஜூன் 2-ஆம் தேதி முதல் தொடங்க அரசு கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
கிராமப்புறங்களிலிருந்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு,
பொறியியல் படிப்பு குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்
தயாரிப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழக அறிவுறுத்தலின் பேரில், அனைத்துப் பொறியியல்
கல்லூரிகளிலும் இந்தத் தயாரிப்பு வகுப்புகள், முதலாமாண்டில் சேரும்
மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.
பொறியியல் படிப்புகள், பாடத் திட்டத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில்
இந்த தயாரிப்பு வகுப்புகள் அமையும். இதில் பிளஸ்-2 கணிதம், இயற்பியல்,
ஆங்கிலப் பாடங்களும் நடத்தப்படும்.
இப்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் இதுபோன்ற
தயாரிப்பு வகுப்புகளை நடத்த உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் கூறியது:
கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு உயர்கல்வி
தயாரிப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் முதன் முறையாக அறிமுகம்
செய்யப்படுகிறது.
குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குப் பட்டப் படிப்பு
குறித்த புரிதலை ஏற்படுத்தி பயத்தைப் போக்குவதற்காக, இந்த வகுப்புகள்
நடத்தப்பட உள்ளன.
குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு இந்த வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகுதான் கல்லூரிகள் திறக்கப்படும்.
ஆனால், இம்முறை தயாரிப்பு வகுப்புகள் அறிமுகம் செய்யப்படுவதால், கலை
அறிவியல் கல்லூரிகளில் முன்கூட்டியே ஜூன் 2-ஆம் தேதி முதலாமாண்டு
வகுப்புகளைத் தொடங்க கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த வகுப்புகளில், பிளஸ்-2 கணிதம், ஆங்கிலப் பாடங்கள் நடத்தப்படுவதோடு,
பட்டப் படிப்புகுறித்த விழிப்புணர்வும் மாணவர்களிடையே ஏற்படுத்தப்படும்
என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...