தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இந்த
ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அரசுப் பள்ளிகள் திறப்பை 2
வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட
அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி
திங்கட்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில்
கொளுத்தும் நிலையில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதா? என்று
பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதாவிடம் கேட்ட போது, அதற்கு வாய்ப்பில்லை
என்றும், திட்டமிட்டபடி வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று
பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இந்த
ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில்
கடந்த சில நாட்களாக 110 டிகிரி ஃபாரண்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இன்னும்
சில வாரங்களுக்கு இந்த நிலை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம்
தெரிவித்திருக்கிறது. தென்மேற்கு பருவமழையும் ஜூன் முதல் வாரத்தின்
பிற்பகுதியில் தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஜூன் இரண்டாவது வாரத்தில் தான்
கோடை வெயிலின் கொடுமை ஓரளவாவது குறையும். இதைக்கருத்தில் கொண்டு ஜூன்
மாதத்தின் பிற்பகுதியில் பள்ளிகளைத் தொடங்குவது தான் சரியானதாக இருக்கும்.
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை (சிபிஎஸ்இ) பின்பற்றும் பள்ளிகள் ஜூன் மூன்றாவது வாரத்தில் தான் திறக்கப்படுகின்றன.
சுட்டெரிக்கும் வெயிலைக் கருத்தில்
கொண்டு ஜூன் 2-ம் தேதி திறக்கப்படவிருந்த புதுவை மாநிலப் பள்ளிகள் 10
நாட்கள் தாமதமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில அரசு
அறிவித்துள்ளது.
புதுவை மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை
இன்னும் 100 டிகிரி ஃபாரண்ஹீட்டை (38 டிகிரி செல்சியஸ்) தாண்டவில்லை.
அத்தகைய சூழலிலேயே புதுவை மாநில குழந்தைகளின் நலன் கருதி அங்குள்ள
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட கூடுதலான வெப்பம்
தகிக்கும் தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள்
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குழந்தைகள் நலனில் அரசுக்கு
அக்கறை இல்லாததையே காட்டுகிறது.
தமிழக அரசு பள்ளிகள் அதிநவீன வசதி
கொண்டவை அல்ல. பெரும்பாலான பள்ளிகளில் மின்விசிறி வசதி கூட கிடையாது. பல
பள்ளிகளில் இரும்புத் தகரத்தால் தான் மேற்கூரை அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் சில பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு இரு வகுப்பறைகள் மட்டுமே
இருப்பதால், மீதமுள்ள 3 வகுப்பறைகளை மரத்தடியில் தான் நடத்த
வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல்
கோடை வெயிலும், அனல் காற்றும் வறுத்தெடுக்கும் நிலையில், பள்ளிக்கூடங்களை
முன்கூட்டியே திறந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். குறிப்பாக 5
முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளின் நிலை என்னவாகும் என்பதை
பள்ளிக்கல்வித்துறை சிந்திக்க வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள்
உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அரசு பள்ளிகள் திறக்கப்படுவதை சில
வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சமச்சீர்
கல்வித் திட்டம் தொடர்பாக குழப்பம் நிலவிய காலத்தில் 75 நாட்கள் தாமதமாக
பள்ளிகள் தொடங்கின. அதனால் மாணவர்களின் படிப்பு பெரிய அளவில்
பாதிக்கப்படவில்லை.
இப்போது கோடை வெயிலுக்காக பள்ளிகள்
திறப்பை 2 வாரங்கள் தள்ளி வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
எனவே, மாணவச் செல்வங்களின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் திறப்பை ஜூன் பிற்பகுதிக்கு
ஒத்திவைக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...