காற்றோட்டாமான வகுப்பறையும், இயற்கை உபாதைக்கு அனுமதியும் பள்ளி
நிர்வாகங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த
மகப்பேறு நிபுணர் டாக்டர் சுஜாதா சங்குமணி. புதிய கல்வி ஆண்டு இன்னும் சில
நாட்களில் துவங்க உள்ளது. பள்ளிகள் திறக்க உள்ளன.
மாணவர்களின் சுகாதாரம், உடல்நலம் எப்படி இருக்க வேண்டும் என அவர்
கூறியதாவது: கோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளுக்கான சின்னம்மை, மஞ்சள்
காமாலை உட்பட தேவையான தடுப்பூசிகளை போட வேண்டும்.கோடையில் பிள்ளைகள்
பெரும்பாலும் வீட்டில், திறந்த வெளியில் இருப்பதால் வெப்பத்தின் தாக்கம்
அதிகம் இருக்காது. பள்ளி துவங்கிய பின் வகுப்பறையில், பஸ்சில்
காற்றோட்டமின்றி அமரும் போது அதிகமாக வியர்க்கும். வியர்வை அதிகமாக வெளி
யேறும் போது உடலில் இருந்து நீர்ச்சத்து வெளியேறும். எனவே இளநீர், மோர்
அதிகமாக குடிக்க கொடுக்க வேண்டும்.
காற்றோட்டமான வகுப்பறை வகுப்பறை காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய
வேண்டும். போதுமான காற்று, நிம்மதியான சுவாசம் இருந்தால் தான், ஆசிரியர்கள்
பாடம் நடத்தும் போது மாணவர்கள் கவனித்து படிக்க முடியும். கோடை காலம்
முடியும் வரை, பள்ளிகளுக்கு எண்ணெய் பலகார தின்பண்டங்களை தவிர்க்க
வேண்டும். ஆரஞ்ச், ஆப்பிள், வாழைப்பழம், மாதுளம் பழங்கள் கொடுத்து விடலாம்.
தண்ணீர் பாட்டிலுடன் தனியாக இளநீர், மோர், பழங்களின் ஜூஸ் கொடுத்து
விடலாம். வெளியில் கிடைக்கும் 'பிரிசர்வேடிவ்' கலந்த பழ ஜூஸ்கள்
வேண்டியதில்லை. வீட்டிலேயே சுத்தமாக தயாரித்து கொடுத்தால் நல்லது.
இரு வேளை குளியல்:
அதிக வியர்வை கசகசப்பால் தோலில் வியர்க்குரு உருவாகும். தண்ணீர் நிறைய
அருந்த செய்ய வேண்டும். காலை, மாலை இருவேளை குளித்தால் வியர்வையால் வரும்
அழுக்குகள் நீங்கும். சூரியவெப்பத்தால் வரும் அலர்ஜியும் குறையும். தினமும்
வெயிலில் அலைய வேண்டி யிருந்தால்'சன் ஸ்கிரீன்' கிரீம் பூசலாம். பள்ளி
துவங்குவதற்கு முன் சுதந்திரமாக நினைத்த நேரத்தில் இயற்கை உபாதைகளை
பிள்ளைகள் கழித்திருப்பர். பள்ளியில் வகுப்பறை நேரத்தில் ஆசிரியரிடம்
கேட்டுத் தான் செல்லவேண்டும்.குறிப்பாக பெண்பிள்ளைகள் கேட்பதற்கு
கூச்சப்பட்டு சிறுநீரை அடக்க ஆரம்பிப்பர். சிறுநீர்ப் பையில்
நீண்டநேரத்திற்கு சிறுநீர் தேங்கினால், நோய்த் தொற்று ஏற்படும். எனவே
வகுப்பாசிரியர்கள் மாணவர்களின் இயற்கை உபாதைகளை புரிந்து கொண்டு அனுமதிக்க
வேண்டும்.
இயல்பாக விடுங்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளி செல்வதால் சில மாணவர்கள்
சோர்வுடன் காணப்படுவர். எடுத்தவுடன் பாடங்களை நடத்தாமல் ஒருவாரத்திற்கு
மாணவர்கள் சோர்வுறாத வகையில் பாடங்களை எளிமையாக நடத்த வேண்டும். அவர்களின்
மனம் சந்தோஷப்படும் வகையில் வகுப்பறையை கலகலப்பாக்க வேண்டும். சில
பிள்ளைகள் புதிய பள்ளிக்கு, புதிய வகுப்பறைக்கு மாற்றும் போது காரணமின்றி
வயிற்று வலி, தலைவலி என்று சொல்வர். பெற்றோர் காரணம் அறிந்து அதை விளக்கிச்
சொல்லி புரிய வைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும்
பிள்ளைகளிடம் படி... படி என திணிக்க வேண்டாம். அவர்களை இயல்பாக படிக்க
விடுங்கள். மதிப்பெண் குறைந்தாலும் திட்டாமல் அன்பு காட்டினால் வெற்றிப்
பாதைக்கு செல்வர், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...