தற்காலிக பணிக்காலத்தில், 50 சதவீதத்தை, ஓய்வூதியத்தில் சேர்க்க கோரிய,
ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரின் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு, சென்னை
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த
முத்துப்பாண்டியன் தாக்கல் செய்த மனு: வனத்துறை சமூகக் காடுகள்
கோட்டத்தில், கடந்த, 1983 முதல், 2009ம் ஆண்டு வரை, தோட்ட காவலராக,
தினக்கூலியாக பணிபுரிந்தேன். கடந்த, 2009, ஆக., 7ம் தேதி, பணி நிரந்தரம்
செய்யப்பட்டு, 2011, ஏப்., 30ல் ஓய்வு பெற்றேன். பணி நிரந்தர காலத்தை
மட்டும் கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்குகின்றனர். தற்காலிக பணி காலத்தை
கணக்கில் கொள்ளவில்லை. தற்காலிக பணிக்காலத்தில், 50 சதவீதத்தை, ஓய்வூதிய
பலன்களில் சேர்த்து கணக்கிட்டு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில்
குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை
பொறுத்தவரை, தகுதி அடிப்படையில், எவ்வித கருத்தையும், இந்நீதிமன்றம்
தெரிவிக்க விரும்பவில்லை. விதிகள்படி, மனுதாரருக்கு தகுதியுள்ளதா என்பதை
பரிசீலித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலர், முதன்மை
தலைமை வனப்பாதுகாவலர், மதுரை சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் ஆகியோர்,
தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...