சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்
உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை பல்கலைக்கழக நிர்வாகியும்,
தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி
வைத்தார்.
மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.), பி.எஸ்.சி.
(விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை) படிப்புகளுக்கான 2015-16-ஆம்
ஆண்டுக்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்ப விற்பனையை நிர்வாக
அலுவலகத்தில் மாணவி ஒருவருக்கு வழங்கி ஷிவ்தாஸ்மீனா தொடங்கி வைத்தார்.
மே 14 முதல் விண்ணப்பங்கள்: விண்ணப்பங்களை அண்ணாமலை நகரில் உள்ள
பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
தொலைநிலைக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் மருத்துவம் மற்றும் பல்
மருத்துவ படிப்புக்கு ரூ.1,500 செலுத்தியும், பி.எஸ்.சி. (வேளாண்மை)
மற்றும் தோட்டக்கலை படிப்புக்கு ரூ.800 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு
ரூ.400) செலுத்தியும் வருகிற மே 14-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சல் மூலம் விண்ணப்பம்: அஞ்சல் மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.
விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.1,550-ம் (ரூ.50 அஞ்சல் கட்டணம்
சேர்த்து) மற்றும் பி.எஸ்.சி. வேளாண்மை, தோட்டக்கலை விண்ணப்பம் பெற
விரும்புவர்கள் ரூ.850-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.450-ம் (ரூ50
அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை, 'the
registrar, annamalai university' என்ற பெயரில் எடுத்து "பதிவாளர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்-608 002, சிதம்பரம் என்ற'
முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்: மருத்துவம், பல் மருத்துவம் அனுமதி
சேர்க்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா கூறியதாவது:
2015-16ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலையில் எம்.பி.பி.எஸ். 150 இடங்களும்,
பி.டி.எஸ். 100 இடங்களும், பி.எஸ்.சி. வேளாண்மை 1,000 இடங்களும்,
பி.எஸ்.சி. தோட்டக்கலை படிப்புக்கு 70 இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை
நடைபெறும். மாணவர்கள் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு
தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப் படிப்பு
அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும்
சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின்
அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வு விவரம் பின்னர்
அறிவிக்கப்படும். மருத்துவ படிப்புக்கு தனியாகவும், பல் மருத்துவப்
படிப்புக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். இப் படிப்புகளுக்கான
கலந்தாய்வும் தனித்தனியே நடத்தப்படும் என்றார்.
மாணவர் சேர்க்கை கையேடு: வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது போல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,
பி.இ., பி.எஸ்.சி. வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பத்துடன் அனுமதி
சேர்க்கை கையேடு மாணவ, மாணவிகள் எளிதில் புரிந்து கொண்டு தாங்களே
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அச்சடிக்கப்பட்டு விண்ணப்பத்துடன்
வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக
இணையதளத்தை www.annamalaiuniversity.ac.in பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும், auadmission2015@gmail.com என்ற இ-மெயில் முகவரி மற்றும்
பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144-238348, 238349 ஆகியவற்றை
தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...