அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க
2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை
விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம்
பிராந்தியங்களில் 338 அரசு ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. 53 அரசு நடுநிலைப்
பள்ளிகள், 93 அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன.
இப்பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், பாட
புத்தகம் சீருடை, மதிய உணவு, காலணி, எழுதுபொருள் உள்ளிட்ட பொருட்களை அரசு
இலவசமாக வழங்குகிறது.சீருடைகள், காலணி உள்ளிட்டவை வாங்க டெண்டர்
விடப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால், தமிழக
சமச்சீர் பாடங்களே, புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளது.
புதுச்சேரிக்கு தேவையான பாடப்புத்தகங்களுக்கு,
தமிழக அரசின், தமிழக பாடநுால் கழகத்திடம் இருந்தே வாங்கப்படுகிறது.
புதுச்சேரி மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், சில மாதத்திற்கு
முன்பு தமிழக பாடநுால் கழகத்திடம் ஆர்டர் கொடுத்து, புத்தகங்கள் கடலுாரில்
உள்ள தமிழ்நாடு பாடநுால் கழக கிடங்கிற்கு வந்து விட்டன.அதன்படி, புதுச்சேரி
பிராந்தியத்தில் உள்ள ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு
1 லட்சத்து 42 ஆயிரத்து 576 புத்தகங்களும், காரைக்கால் மாவட்டத்திற்கு 43
ஆயிரத்து 305 பாட புத்தகங்களும் வாங்கப்பட உள்ளன.
அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1
மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 655 பாடப்
புத்தகங்கள் வாங்க கோப்புகள் தயாராகியுள்ளது. பாடப் புத்தகங்கள்
வாங்குவதற்காக, 2.85 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டது. அரசில் நிதி நெருக்கடி
நிலவி வருவதால், புத்தகம் வாங்குவதற்கான நிதி வழங்குவதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது.
நீட்டிப்பு பின்னணி :
அரசு பள்ளிகளில் கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டு
தேர்வு முடிந்து, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை
முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கோடை
வெயில் தாக்கம் காரணமாக, கோடை விடுமுறை 12ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அரசு அறிவித்தது.ஆனால், பள்ளிகள் திறந்தவுடன்
மாணவர்களுக்கு புத்தகம் வழங்க வேண்டும். நிதி ஒதுக்காததால், புத்தகம்
வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளி திறந்து புத்தகம் வழங்க வில்லை
என்றால், பிரச்னை உருவாகும் என்ற காரணத்தால், கோடை வெயிலை காரணம் காட்டி
பள்ளிகள் திறப்பு தேதி நீட்டித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
சி.பி.எஸ்.சி., புத்தகம் ரெடி:
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.சி., பாட
திட்டம் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு
ஆங்கிலப் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும், தமிழ் வழி
வகுப்பில், முதல் வகுப்பிலும் சி.பி.எஸ்.சி. பாடம்
நடத்தப்படுகிறது.சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.ஆர்.டி.சி.) வெளியிடும் புத்தகங்கள்
என்பதால், புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் புதுச்சேரி சி.பி.எஸ்.சி.,
பள்ளி மாணவர்களுக்கு தேவையான 82 ஆயிரத்து 915 பாடப் புத்தகங்கள்
வாங்குவதற்காக, 18.75 லட்சம் ரூபாய்க்கான டி.டி.யுடன் பெங்களூரு சென்று
புத்தகங்களுடன் திரும்பியுள்ளனர்.
எல்.கே.ஜி.,க்கு புத்தகம் :
கடந்த பல ஆண்டுகளாக அரசு ஆரம்பப்பள்ளிகளில்
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு
எந்த பாடப்புத்தகமும் கிடையாது. ஆனால், இந்தாண்டு முதல் முறையாக
எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு தலா 2 புத்தகம் வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...