Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் ஆயிரம் படிப்புகள்...

          என்ன கோர்ஸ் படித்தாலும் இங்கே வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், எந்த நிறுவனத்தில் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். தமிழ்நாட்டில்  பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிப் படிப்பை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கல்லூரிகளிலேயே படித்து முடித்துவிடுகிறார்கள். வெளிவாய்ப்புகள் பற்றிய  தேடல் இல்லாமலே வாழ்க்கையை நகர்த்திவிட்டு நகரத்துக்கு வந்து கஷ்டப்படுகிறார்கள். 

          இந்தியாவில் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்க்கு இருக்கின்ற வாய்ப்புகள்  கடல் மாதிரி. அரசு உதவித் தொகையுடனே படித்துவிட்டு வெளிவரக்கூடிய  நிறுவனங்களெல்லாம் இங்கே இருக்கின்றன. அதைப் பார்த்து தேந்தெடுக்க  வேண்டும். அவ்வளவுதான்’’ - அழுத்தம் திருத்தமாக ஆரம்பிக்கிறார் ‘டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைன்டர்’ நிறுவனர் நெடுஞ்செழியன். கல்வியில் மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்நிறுவனத்தை நடத்திவரும் இவர், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன? அதற்கான  வாய்ப்புகள் எப்படியிருக்கும்? என்பதை விளக்குகிறார்.


பி.காம் பொதுவாக, காமர்ஸ் மாணவர்கள், பி.காம் அல்லது அதில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மட்டுமே தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். ஆனால், பி.காமில்  ‘கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப்’, ‘பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ்’, ‘அக்கவுன்டன்ஸ் அண்ட் ஃபைனான்ஸ்’, ‘இ-காமர்ஸ்’, ‘ஃபைனான்சியல் சிஸ்டம்ஸ்’, என பல  வகைகள் இருக்கின்றன. இந்த கோர்ஸ்களெல்லாம் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன. இவற்றில், உங்களுக்குப் பிடித்தவற்றையும் அதில் சிறந்த  கல்லூரிகளையும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். 

‘கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப்’ படிப்பவர்களுக்கு இ-பிசினஸ், மேனேஜ்மென்ட் தொடர்பான பணிகள் ஏராளமாக காத்திருக்கின்றன. இவா்கள் கார்ப்பரேட்  டெவெலப்மென்ட், ஃபைனான்சியல் அனலைஸ்ட், கார்ப்பரேட் சேல்ஸ் ஆபீசர் போன்ற பொறுப்புகளில் அமரமுடியும்.‘பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ்’  படிப்பவர்களுக்கு, அக்கவுன்டன்ட், லோன் மேனேஜர், மார்க்கெட் அனலைஸ்ட் எனப் பல வாய்ப்புகள் இருக்கின்றன.‘இ-காமர்ஸ்’ எடுப்பவர்களுக்கு அரசு மற்றும்  தனியார் துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவையெல்லாம் ஒரு உதாரணம்தான். இதில், மாஸ்டர் முடிப்பவர்கள் மேலும் ஜொலிக்கலாம். சி.ஏ.,  ஐ.சி.டபிள்யு.ஏ., போன்ற கோர்ஸ்களை படித்தும் பிரகாசிக்கலாம். ஆனால், இவற்றை எங்கே படிக்கிறோம்? எப்படி படிக்கிறோம்? என்பதே உங்கள் வாழ்க்கையை  தீர்மானிக்கும். 

அறிவியல் தொடர்பான படிப்புகள்...

வழக்கமாக +2க்குப் பிறகு சயின்ஸ் மாணவர்கள் கல்லூரிகளில் பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களைத்  தேர்ந்தெடுப்பார்கள். இதைத் தவிர்த்து அவர்கள், மேலும் சில கோர்ஸ்களில் தங்கள் கவனத்தைச் செலுத்தி தேடலாம். உதாரணத்திற்கு, ‘ஜியாலஜி/எர்த்  சயின்ஸ்’, ‘ஜியோ ஃபிசிக்ஸ்/ சீஸ்மாலஜி’, ‘ஃபாரன்சிக் சயின்ஸ்’, ‘சைக்கலாஜிக்கல் சயின்ஸ்’, ‘நாட்டிக்கல் சயின்ஸ்’, ‘பாலிமர் சயின்ஸ்’, ‘விஷுவல்  கம்யூனிகேஷன்’, ‘எக்சைஸ் ஃபிசியாலஜி அண்ட் நியூட்ரிஷியன்’ என சில கோர்ஸ்களைச் சொல்லலாம்.

பி.எஸ்சி. ஜியாலஜி படிப்பவர்களுக்கு சுரங்க நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வகங்கள் போன்றவற்றில் வாய்ப்புகள் குவிந்து  கிடக்கின்றன. இந்த கோர்ஸை இளங்கலையோடு நிறுத்தாமல் எம்.எஸ்சி. முடித்தால் இன்னும் மிளிரலாம். இந்த எம்.எஸ்சி கோர்ஸ்களை ஐ.ஐ.டியில்  படிக்கலாம். ஐ.ஐ.டிகள், எம்.எஸ்சி. ஜியாலஜியை பி.எச்டியோடு இணைந்த 5 வருட கோர்ஸாகத் தருகின்றன. இதற்கு JAM (Joint Admission in M.Sc) எனப்படும்  தேர்வினை எழுத வேண்டும்.

பி.எஸ்சி. ஃபாரன்சிக் சயின்ஸ் தேர்ந்தெடுப்பவர்களுக்குத் தடயவியல் அறிவியலாளர், ஆலோசகர், துப்பறிவாளர் எனப் பல்வேறு வேலைகள் இருக்கின்றன.  அரசின் தடயவியல் துறையிலும் பணிபுரியலாம். போலீஸ் துறையிலும் பணிகள் இருக்கின்றன.நாட்டிக்கல் சயின்ஸ் எடுப்பவர்கள் மரைன் துறையில்  சாதிக்கலாம். கப்பல் தளத்தில் பணிகள் உள்ளன. பாலிமர் சயின்ஸ் படிப்பவர்களுக்கு ஆட்டோமொபைல், ஏரோபேஸ் துறை உள்ளிட்ட ஏராளமான  வேலைவாய்ப்புகள் உள்ளன.

உள்ளூர் கல்லூரிகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் படிப்பவர்களும் வாழ்வில் சிறக்க ஏராளமான வழிகள் உள்ளன. இதற்கு, மாஸ்டர் டிகிரி படித்தல்  வேண்டும். அந்த மாஸ்டர் டிகிரியை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., போன்றவற்றில் படிப்பது இன்னும் சிறப்பு. இதற்காகவே, ஐ.ஐ.டி.களும், பெங்களூர் ஐ.ஐ.எஸ்சியும்  எம்.எஸ்சி கோர்ஸ்கள் வைத்திருக்கின்றன. எம்.எஸ்சி வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகியவற்றை தனியாகவும், பி.எச்டி உடன் இணைந்த 5 வருட  படிப்பாகவும் வழங்குகின்றன ஐ.ஐ.டி.க்கள். 

இயற்பியல் பிரிவில், ‘ஃபிசிக்கல் சயின்ஸ்’, ‘பயலஜிக்கல் சயின்ஸ்’, ‘கெமிக்கல் சயின்ஸ்’ போன்ற கோர்ஸ்களை ஐ.ஐ.எஸ்சி. தருகின்றது. இதற்கும் முன்பு  சொன்ன ‘JAM’ ேதர்வு எழுத வேண்டியது அவசியம். இங்கெல்லாம் ஸ்காலர்ஷிப்புடன் படிக்கலாம். அதேபோல், எம்.எஸ்சியில் கணிதப் புள்ளியியல்  படிப்பினையும் இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் வெப்சைட்களை போய்ப் பார்த்து விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

உயிரியல் தொடர்பான படிப்புகள்...

இதில், ‘பயோ ெடக்னாலஜி’, ‘பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ்’, ‘பயோ மெடிக்கல் சயின்ஸ்’, ‘பயோ கெமிஸ்ட்ரி’, ‘மைக்ரோ பயாலஜி’, ‘ஜெனிடிக்ஸ்’, ‘பயோ  ஃபிசிக்ஸ்’, ‘பயோ கெமிக்கல் சயின்ஸ்’, ‘லைஃப் சயின்ஸ்’ எனப் பல படிப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்புகளையும், இதற்காக இருக்கின்ற சிறந்த  நிறுவனங்களையும் நெட்டில் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.பயோ ெமடிக்கல் சயின்ஸ் பொறுத்தவரை மருத்துவமனை, மருந்துத் துறை, மருத்துவ  உபகரணத் தயாரிப்பு நிறுவனங்கள் எனப் பல இடங்களில் பணிக்கு போகமுடியும். இங்கெல்லாம் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஜெனிடிக்ஸ் படிப்பவர்களுக்கு கால்நடை வளர்ப்புத் துறை, உணவுப் பதப்படுத்தும் துறை, டி.என்.ஏ., தடயவியல் துறை, வேளாண் துறை என நிறைய இடங்களில்  பணிகள் இருக்கின்றன.‘பயோ ஃபிசிக்ஸ்’ என்பது உயிரியல் அமைப்புகளை ஆராய இயற்பியல் தத்துவங்களைப் பயன்படுத்தும் முறை. இதை படிப்பவர்கள்  மருத்துவம், குற்றவியல் சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியலாம்.வாழும் உயிரினங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக சொல்லித் தருகிறது ‘லைஃப் சயின்ஸ்’  கோர்ஸ். இதற்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நோய் எதிர்ப்பியல் வல்லுநர், நோய்க் குணங்களை ஆய்வு செய்யும் நிபுணர், உணவு  அறிவியலாளர் எனப் பல பதவிகளில் பணிகள் இருக்கின்றன. 

பி.எட் ஆசிரியர் பணிக்கு செல்லவேண்டும் என முனைப்புள்ளவர்கள் நிச்சயம் டிகிரிக்குப் பிறகு பி.எட் படிப்பார்கள். இதை, டிகிரியோடு இணைந்த படிப்பாகவே  சில நிறுவனங்கள் தருகின்றன. குறிப்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் கீழ் ‘RIE’, எனப்படும் மண்டல கல்வி நிறுவனங்கள்  செயலாற்றி வருகின்றன. இவை, மைசூர், ஆஜ்மீர், புவனேஸ்வர். போபால், ஷில்லாங் ஆகிய இடங்களில் உள்ளன. தரமான நிறுவனங்கள் என்பதால்  படிப்பவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். இதில், பி.எஸ்சி. எட், பி.ஏ. எட்., என நான்கு வருட ஆசிரியர் படிப்புகள் உள்ளன. இதோடு, இரண்டு வருட  எம்.எட் படிப்பும், எம்.ஃபில்., பி.எச்டி. போன்ற படிப்புகளும் இருக்கின்றன.

மேலும் சில படிப்புகள்...

வனவிலங்குகள் பற்றி படிக்க நினைப்பவர்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்துவிட்டு எம்.எஸ்சி. ‘வைல்டுலைஃப் அண்ட் கன்சர்வேஷன்’ படிப்பினை படிக்கலாம்.  இதை, பெங்களூரூவில் உள்ள ‘என்.சி.பி.எஸ்.’ எனப்படும் நேஷனல் சென்டர் ஃபார் பயாலஜிக்கல் சயின்ஸ்சஸ் வழங்குகிறது. சுற்றுச்சூழல், தண்ணீர்  சம்பந்தமான படிப்புகள் எல்லாம் முதுகலையில் இருக்கின்றன. டில்லியில் உள்ள ‘TERI’ பல்கலைக்கழகம் எம்.எஸ்சி.யில் நீர் அறிவியல், சுற்றுச்சூழல்  மேலாண்மை பற்றிய படிப்புகளைத் தருகின்றன. இதோடு, எம்.ஏ.வில் பொதுக் கொள்கை மற்றும் நிரந்தர வளர்ச்சி, நிரந்தர  வளர்ச்சிக்கான பயிற்சி என  அத்தியாவசியமான கோர்ஸ்களையும் தருகின்றன. இவற்றை கவனித்து உங்கள் டிகிரியைத் தேர்ந்தெடுங்கள். வாழ்வில், ஏதேனும் ஒரு டிகிரியையாவது சிறந்த  நிறுவனங்களில் படியுங்கள். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் தன்மை கொண்டது. வாழ்த்துகள்!

ஏதேனும் ஒரு டிகிரியையாவது சிறந்த நிறுவனங்களில் படியுங்கள். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் தன்மை கொண்டது.  
- பேராச்சி கண்ணன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive