''கோவை பாரதியார் பல்கலை, தொலைமுறை கல்வி தேர்வு மையங்களை கண்காணிக்க,
'வெப் கேமரா' பொருத்த திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ்
பிச்சை தெரிவித்தார்.
அவர், திருச்சியில் நேற்று கூறியதாவது: பாரதியார் பல்கலை தொலைமுறை
கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், பல்வேறு படிப்புகளை
அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. நாடு முழுவதும், 670 மையங்களை, பாரதியார்
பல்கலை நடத்தி வருகிறது. இதன் மூலம் தொலைமுறை பாடப்பிரிவுகள் மற்றும்
கட்டணம் குறித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், வேலைவாய்ப்புக்கும், இந்த
மையங்களுக்கும் தொடர்பு இல்லை. திருச்சியில், நான்கு மையங்கள் இயங்கி
வருகின்றன. திருச்சியில், கோவை பாரதியார் பல்கலை தொலைமுறை கல்விக்கு, கிளை
அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், அந்த அலுவலகத்தில் பணிக்கான
நேர்முகத்தேர்வு, பணி நியமனம் செய்வதாகவும் புகார் வந்துள்ளது. அப்படி ஒரு
கிளை அலுவலகம் திருச்சியில் இல்லை. இதை நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து,
புகார் எதுவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை. பல்கலையில் உள்ள ஆங்கில
பேராசிரியர் மூலம் தகவல் தெரிந்தது. வரும் காலத்தில், தொலைமுறை கல்வியில்
தேர்வு எழுதுகிறவர்களுக்கு, ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கவும், தேர்வு
மையங்களில் வெப் கேமரா வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...