திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்கள்
நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கெளரவிக்கப்படுவர் என்று தருண்
விஜய் எம்.பி. கூறினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அவர்
பங்கேற்றார். பின்னர், கடலூர் வந்த தருண்விஜய் செய்தியாளர்களுக்கு அளித்த
பேட்டி:
திருவள்ளுவரும், பாரதியாரும் இந்தியா
முழுவதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள். இதனைக் கருத்தில் கொண்டு 10
லட்சம் இளைஞர்களிடம் திருக்குறளை கொண்டுசெல்லும் வகையில் கையடக்க
திருக்குறள் புத்தகம் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. திருக்குறளை இந்தியா
மட்டுமின்றி உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.
கங்கை அருகே
திருவள்ளுவருக்கு சிலை: உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள எனது இல்லத்தில் தமிழை
கற்பிக்கும் பயிற்சியளித்து வருகிறேன். மேலும், இமயமலையின் அடிவாரத்தில்
அமைந்துள்ள உத்தரகாண்டில் கங்கை நதியை பார்க்கும் வகையில் திருவள்ளுவர்
சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அசோகர் மட்டுமே இந்திய வரலாறு அல்ல.
ராஜராஜசோழன், சேர, சோழ, பாண்டியர்கள், திருவள்ளுவர், பாரதியார், ஆண்டாள்,
கண்ணகி ஆகியோரையும் சேர்த்தால் மட்டுமே இந்திய வரலாறு முழுமைபெறும்.
இவர்கள் குறித்து வட இந்திய மாணவர்கள் பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை.
எனவே மோடி அரசு முதல்முறையாக திருவள்ளுவர், பாரதியின் வாழ்க்கை வரலாறை வட
இந்திய பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருக்குறளை பரப்ப அமைப்பு: திருக்குறளை
மேலும் பரப்பும் விதமாக திருக்குறளுக்கான மாணவர், இளைஞர் அமைப்பு
(எஸ்.ஒய்.டி.) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தமிழக
ஒருங்கிணைப்பாளராக கரூர் ராம.சுப்பிரமணியன் செயல்படுகிறார். இந்த அமைப்பு
சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளி,
கல்லூரி மாணவர்களிடையே திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை நடத்தும். இதில்
தேர்ந்தெடுக்கப்படும் 133 மாணவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு,
நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்படுவார்கள் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர்
பதிலளித்து பேசுகையில், ""தமிழர் பெருமையை மீட்பது தான் எனது பணி. அதில்
ஈடுபடுவதில் பெருமை அடைகிறேன். தலித் வன்கொடுமைகள் திருக்குறளுக்கு
எதிரானது. திருக்குறளை படித்த எவரும் சமவாய்ப்புக்கு முன்னுரிமை
அளிப்பார்கள் என்றார்.
பட்டு வேட்டி, சட்டை, துண்டில்...
செய்தியாளர்கள் சந்திப்பின் போது தருண்
விஜய் பட்டு வேட்டி, பட்டுச்சட்டை, பட்டுத்துண்டு அணிந்திருந்தார்.
பேட்டியின் தொடக்கத்தில் தமிழ் அன்னைக்கு முதல் வணக்கம் என்றும், பின்னர்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற திருக்குறளையும்
தமிழில் கூறினார். பேட்டியின் நிறைவில், வாழ்க தமிழ், வளர்க தமிழ் என்று
முடித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...