நடிகர்
ரஜினியின் ஆஷ்ரம் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்காதது தொடர்பாக, விரிவான
விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, மெட்ரிக் இயக்குனருக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 1996 முதல் செயல்படும் இப்பள்ளிக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை,
தமிழக மெட்ரிக் இயக்குனரகத்தில் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளி சார்பில், அங்கீகாரம் புதுப்பிக்க
விண்ணப்பம் அளித்தும், மெட்ரிக் இயக்குனரகம் அங்கீகாரம் தரவில்லை.
அதனால், இந்தப் பள்ளி அங்கீகாரம் இல்லாமலே இயங்கி வருகிறது. பள்ளிக்
கல்வித்துறையின் சில உயரதிகாரிகளின் துணையுடன் அங்கீகாரம் இல்லாமலேயே, 10ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்களை, தேர்வுத் துறை, பொதுத்
தேர்வுக்கு அனுமதிக்கிறது.
மேலும், பள்ளி இருக்கும் இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு என்பவருக்கும்,
பள்ளி நிர்வாகத்துக்கும் சட்டப் பிரச்னைகள் எழுந்துள்ளன. வெங்கடேஸ்வரலு
சார்பில், பள்ளியை மூடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து, நமது நாளிதழில் நேற்று விரிவான செய்தி
வெளியானது.
இதையடுத்து, ரஜினியின் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி குறித்து, விரிவான விசாரணை
அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மெட்ரிக் இயக்குனர்
பிச்சை இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
பள்ளியின் துவக்க அங்கீகாரம் எப்போது; பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
எத்தனை பேர்; வழக்கு நிலுவையிலுள்ளதா, அதன் நிலை என்ன; விதிமுறைகள்
பின்பற்றப்பட்டுள்ளதா போன்ற பல விவரங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக,
பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளி நிர்வாகம் விளக்கம்
ஆஷ்ரம் பள்ளி நிலை குறித்து, அதன் முதல்வர் வந்தனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆஷ்ரம் பள்ளி, 24வது ஆண்டு கல்விப் பயணத்தில் உள்ளது. எங்கள் மாணவ,
மாணவியர் இந்த ஆண்டு பொதுத் தேர்வை அரசு அங்கீகாரத்துடன் எழுதி உள்ளனர்.
அனைத்து பள்ளிகளும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் அங்கீகாரத்தை
புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறையின் கீழ், எங்கள் அங்கீகாரத்திற்குரிய ஆவணங்களை
சமர்ப்பித்துள்ளோம். அது நடைமுறையில் உள்ளது. இது ஒரு சாதாரண மற்றும் தமிழக
அரசின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் செய்ய வேண்டிய வழக்கமான
நடைமுறை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...